டார்க் வெப் (Dark Web) தெரியுமா?

டார்க் வெப் (Dark Web) தெரியுமா?
டார்க் வெப் (Dark Web) தெரியுமா?

உலக அளவில் உணவு வகைகளை ஆர்டர் செய்யப் பயன்படும் ஜோமோட்டா மற்றும் மெக்டொனால்ட் ஆகிய நிறுவனங்களின் செல்போன் செயலிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் டார்க் வெப்பில் பிரபலமாக இருக்கும் என்க்ளே (NClay) இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

டார்க் வெப் என்பது என்ன?:

கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கறுப்பு பக்கமே டார்க் வெப் என்றழைக்கப்படுகிறது. டார்க் வெப் மூலம் போதைப் பொருட்கள் உட்பட சட்டவிரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன. இணையத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு இந்த டார்க்வெப் கட்டுப்பாடுவதில்லை. கண்டு கொள்வதில்லை.

டார்க் வெப் மற்றும் டீப் வெப் (Depp Web):

டீப் வெப் என்பது இணையதள தேடுபொறிக்குள் (Search engine) சிக்காமல் செயல்படும் இணையதளங்கள் கொண்ட பகுதி. இதுபோன்ற இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட இணையதளத்தின் சரியான முகவரி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். டீப் வெப் என்ற பெருவெளியின் ஒரு சிறுதுளியே இந்த டார்க் வெப். டார்க் வெப்பை சிலர் டார்க் நெட் என்றும் அழைப்பதுண்டு. டார்க் நெட் மற்றும் டார்க் வெப் போன்றவை பெரும்பாலும் சட்டவிரோத பணபரிமாற்றங்களுக்காகவே பயன்படுத்தப்படும். சரியான முகவரி இருந்தால் டீப் வெப்பில் நீங்கள் பிரவுஸிங் செய்ய முடியும். ஆனால், டார்க் வெப் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி வேலை செய்கிறது இந்த டார்க் வெப்:

பிரவுஸரில் உள்ள பிரைவேட் விண்டோ அல்லது இன்காக்னிடோ டேப் மூலம் இணையத்தில் உலவுவது போன்றது இந்த டார்க் வெப். அவ்வாறு பிரவுஸ் செய்யும் போது பிரவுஸிங் ஹிஸ்ட்ரி மற்றும் கேச்சே மெமரி போன்றவை பிரவுசரில் பதிவாகது. அதேபோலவே டார்க் வெப்பில் நுழைய டார் (Tor) போன்ற சில பிரத்யேக சாஃப்ட்வேர்கள் உங்களுக்கு அவசியம். அதேபோல, டார்க் வெப்பின் யுஎஸ்பியைக் (USP) கண்டறிய முடியாது. யுஎஸ்பி என்பது குறிப்பிட்ட இணையதளத்தின் உரிமையாளர்கள் குறித்த தகவலைக் கொண்டிருக்கும். மேலும், டீப் வெப்பில் இயங்கும் இணையதளங்கள் எங்கிருந்து செயல்படுகின்றன என்ற தகவலும் மறைக்கப்பட்டிருக்கும்.

டார்க் வெப்பில் எப்படி நடக்கிறது பணபரிவர்த்தனை?:

டார்க் வெப்பில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் நடப்பதாகச் சொல்லுகிறார்கள் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். இந்த பணபரிமாற்றம் அனைத்துமே விர்ச்சுவல் கரன்சிகள் வழியாகவே நடக்கிறது. பிட்காயின் எனப்படும் விர்ச்சுவல் கரன்சியே பிரதானமாக புழக்கத்தில் இருக்கிறது. சமீபத்தில் உலக அளவில் கனிணிகளைத் தாக்கிய வான்ன க்ரை ரான்சம்வேரை உருவாக்கியவர்களும், 300 முதல் 600 அமெரிக்க டாலர்களை பிட்காயினாக வழங்க நிபந்தனை விதித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பாதுகாப்பானதா டார்க் வெப்?:

இணைய வெளியில் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில், டார்க் வெப்பில் தகவல் திருட்டு இன்னும் அதிகம். வங்கி கணக்கு விபரங்கள், கடவுச் சொற்கள் போன்றவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. டார்க் வெப்பை அணுகாமல் இருப்பதே கனிணிக்கும், உங்கள் தகவல்களுக்கும் பாதுகாப்பை அளிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com