நுகர்வோர்சட்டம் என்பது என்ன? எப்படி பயன்படுத்துவது? - நுகர்வோருக்கான அடிப்படைதகவல்கள்

நுகர்வோர்சட்டம் என்பது என்ன? எப்படி பயன்படுத்துவது? - நுகர்வோருக்கான அடிப்படைதகவல்கள்
நுகர்வோர்சட்டம் என்பது என்ன? எப்படி பயன்படுத்துவது? - நுகர்வோருக்கான அடிப்படைதகவல்கள்

 இன்றைய சூழலில் நுகர்வோர்கள் சந்திக்கும் துயரங்கள் அதிகம். கலப்படம், கூடுதல் விலை, தரமற்ற பொருள், தரமற்ற சேவை ஆகியவை பற்றிய  நுகர்வோர்களின் புகார்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஆனால், நுகர்வோர் சிக்கல்களுக்கான தீர்வினை எப்படி பெறுவது? யாரிடம் முறையிடுவது? எதற்கெல்லாம் புகார் செய்யலாம் என்பது போன்ற தகவல்களை பார்ப்போம்.

கீழ்க்காணும் குறைபாடுகள் இருப்பின் நுகர்வோர்கள், நுகர்வோர் ஆணையத்தினை நாடலாம்:

 • எடைகுறைவு
 • கலப்படம்
 • மோசமான பராமரிப்பு, சேவை
 • ஒப்பந்த வரையரைகளில் ஏமாற்றுதல், ஒப்பந்த பிரிவுகளை மறைத்தல்.
 • அதிகப்படியான சில்லறை விற்பனையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல்.
 • கட்டாயப்படுத்தி தேவையற்ற பொருட்களை வாங்க தவறாக வழிகாட்டுதல்.
 • தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள், குறிப்பாக குழந்தைகளை இலக்காக வைத்து விளம்பரம் செய்தல்.
 • காலாவதியான பொருட்களை விற்பனைசெய்தல்.
 • விற்பனைக்கு பிறகு தொடர்புகொள்ள முடியாத போலியான நிறுவனங்களின் பெயர்களை கொடுத்தல்

பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

ஒரு பொருள் வாங்கும்போது அதன் லேபிளில் பொருளின் பெயர், எடை, மூலப்பொருள்கள், விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, அணி எண், தரநிர்ணய சான்று, எஃப்.எஸ்.எஸ்.ஐ சான்று, பயன்படுத்தும் முறை, சேமிப்பு அறிவுரை போன்றவை. அதுபோலவே சேவைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் விதிமீறல்கள். உணவுப் பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு எனில், முதலில் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு நுகர்வோர் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உணவு மாதிரியை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்புவார்கள். அந்த அறிக்கையில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வைத்தும் நுகர்வோர் வழக்கு தொடரலாம். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிடலாம். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லையெனில், நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடலாம்.

புகார் அளிக்கும் இடங்கள்:

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்

இந்த குறைதீர் மன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது. இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன. இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும் மற்றும் இரண்டு உறுப்பினர்களும் இருப்பார்கள்.  இருவரில் ஒருவர்  சமூக சேவையில் ஆர்வமுடைய பெண் உறுப்பினராகவும், மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

இந்த குறைதீர் ஆணையம் ஒவ்வொரு மாநில தலைநகரிலும் இருக்கும். தமிழகத்தில் இதன் தலைமை ஆணையம் சென்னையிலும் ,கிளை ஆணையம் மதுரையிலும் உள்ளது. இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 100 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன. இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராக இருப்பார். மேலும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு  இவ்வாணையம்  அமைக்கப்பட வேண்டும். இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் பெற்றவர்களாக இருப்பார்கள்.  

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்:

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் 100 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும், நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மாவட்ட ஆட்சியரிடமும் முறையிடலாம்:

மாவட்ட ஆட்சியர்தான், நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவர் ஆவார். மாவட்ட வழங்கல் அலுவலர், நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆவார். இவர்களிடமோ அல்லது குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுத்துறை ஆணையாளர் அவர்களிடமும் புகார் செய்யலாம். இவர்கள் நுகர்வோர் ஆணையங்கள், துரிதமாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்கள்.

எவ்வாறு புகார் அளிப்பது?

புகாரை நேரடியாகவோ அல்லது சான்றளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட/மாநில குறைதீர் மன்றத்திற்கு அனுப்பலாம். மனுவில் கீழ்க்காணும் விபரங்கள் இருக்கவேண்டும்:

 • புகார்தாரரின் பெயர், முகவரி மற்றும் விபரங்கள்
 • எதிர்மனுதாரரின் பெயர், முகவரி மற்றும் விபரங்கள்( தெரிந்திருந்தால்)
 • புகாரின் உண்மைத்தன்மை மற்றும் குறைபாடு எங்கு, எப்போது உருவானது என்ற விபரம்.
 • புகார் மீதான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள்.
 • புகார்தாரர் கோரும் நிவாரணம்.

நுகர்வோர் ஆணையம் மூலமாக அளிக்கப்படும் நிவாரணங்கள்:

 • குறைபாடுகளை களைதல்
 • பொருட்களை மாற்றம் செய்தல்
 • கூடுதல் விலையை பெற்றுத்தருதல்
 • சேவை குறைவாக இருப்பின், சேவைத்தொகையை திரும்ப பெறுதல்
 • நியாயமற்ற வர்த்தகமுறையை தடை செய்தல்
 • ஆபத்தான பொருட்களின் விற்பனையை தடை செய்தல்.
 • இழப்பிற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தருதல்
 • வழக்கு செலவுகளை அளித்தல்.

ரசீது முக்கியம்:

பொருட்களையோ, சேவையையோ பெறும் நுகர்வோர், யாரிடம் இருந்து என்ன பொருட்களை வாங்குகிறோம் அல்லது சேவையை பெறுகிறோம் என்பதற்கான ரசீதை, ஆதாரத்தை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும். அப்போதுதான், வழக்கு தொடரும்போது அதற்கு ஆதரமாக ரசீதை ஓர் ஆவணமாக சமர்ப்பிக்க முடியும்.

மனுதாரரே வாதாடலாம்:

பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மனு தாக்கல் செய்யலாம். மேலும், வழக்கறிஞர் இன்றி மனுதாக்கல் செய்தவரே நேரடியாக தமிழிலேயே வாதாடலாம் அல்லது வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம். வாதங்கள் முடிந்து இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், எதிர்மனுதாரர் இழப்பீடு வழங்கவில்லை எனில், உத்தரவை நிறைவேற்றும் மனுவை பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யலாம். அதன்பிறகு, சம்பந்தப்பட்டவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிடும்.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com