மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கும்? - ஓர் எளிய புரிதல்

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கும்? - ஓர் எளிய புரிதல்

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கும்? - ஓர் எளிய புரிதல்
Published on
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 91 நிறுவனங்கள் அடங்கிய தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பெயரை ‘மெட்டா’ என்று மாற்றினார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க். இதன் பின்னணியில் இருப்பது ’மெட்டாவெர்ஸ்’ எனும் புதிய டிஜிட்டல் உலகம்தான்.
மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கும்? என்பது குறித்து எளிமையான விளக்கம் இதோ..
மெட்டாவெர்ஸ் என்பது ஒரு பரந்த சொல். இதனை ஒரே வார்த்தையில் விளக்கி விட முடியாது. 'நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு டிஜிட்டல் உலகம்தான் மெட்டாவெர்ஸ்' என்றுகூட இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம்.
'மெட்டாவெர்ஸ்' என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பதற்கு 2 உதாரணங்களை கூறலாம். முதல் உதராணமாக, ‘Ready Player One’ திரைப்படத்தில் வரும் கதைப் பின்னணியை சொல்லலாம். இந்தப்படம் 2045-ல் நடப்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நிஜ உலகில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட விர்ச்சுவல் உலகத்தில் வாழ மக்கள் முயற்சிப்பார்கள்.
இரண்டாவது உதாரணமாக விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸை வைத்து புரிந்து கொள்ளலாம். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு, இருந்த இடத்தில் இருந்து கொண்டே, நாம் தற்போது இருக்கும் சுற்றுச்சூழலை விட்டு மற்றொரு சுற்றுச்சூழலை அனுபவிக்கலாம்; விரும்பிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்; இதுவரை பார்த்திராத விஷயங்களை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை பெறலாம்; அமர்ந்த இடத்தில் இருந்துக்கொண்டே வானில் பறப்பதுபோன்ற உணர்வை பெறலாம்; உங்களுக்கு பிடித்தமான ஓர் பெரிய ஷோரூமில் விண்டோ ஷாப்பிங் பண்ணலாம்.
இதுபோன்ற விர்ச்சுவல் வடிவங்களுக்கான தளத்தை ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வழங்கினால், அதுதான் மெட்டாவெர்ஸ். இந்த மெட்டாவெர்ஸ் திட்டத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஆயிரக்கணக்கானோரைப் புதிதாக மெட்டாவெர்ஸுக்காக மட்டுமே பணியமர்த்தியிருக்கிறது ஃபேஸ்புக். ஆனால் இது சாத்தியப்பட பல வருடங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.
எனினும் மெட்டாவெர்ஸ் மனிதர்களுக்கு இடையிலான நேரடி தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. ‘மெட்டாவெர்ஸ் மனித சமுதாயத்திற்கு சிறந்த விஷயம் அல்ல" என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் கருத்து தெரிவித்துள்ளார்.
மெட்டாவெர்ஸ் உலகம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வீடியோவை மார்க் ஜூகர்பெர்க் வெளியிட்டு உள்ளார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க வாள் வீச்சு வீராங்கனை லீ கியஃபருடன், விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் வாள் வீச்சில் ஈடுபடும் வீடியோவை அவர் பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில், இதுபோன்ற அனுபவங்கள் வேடிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ள மார்க், மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனைவரையும் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com