மூளைச்சாவு எதனால் ஏற்படுகிறது? கோமாவும் மூளைச்சாவும் ஒன்றா?

மூளைச்சாவு எதனால் ஏற்படுகிறது? கோமாவும் மூளைச்சாவும் ஒன்றா?

மூளைச்சாவு எதனால் ஏற்படுகிறது? கோமாவும் மூளைச்சாவும் ஒன்றா?
Published on

சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திடீரென கீழே விழுந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் மூளைச்சாவுக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். தினசரி இதுபோன்ற மூளைச்சாவு செய்திகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வருகிறோம். உண்மையில் மூளைச்சாவு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது என்பதுபோன்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது.

மூளைச்சாவை மூளைத் தண்டுவடச் சாவு என்றும் அழைக்கின்றனர். மூளை தனது சுயநினைவு மற்றும் செயலை இழப்பதையே மூளைச்சாவு என்கின்றனர். ஒருமுறை மூளைச்சாவு ஏற்பட்ட பிறகு செயற்கை இயந்திரங்களின் உதவியால் மட்டுமே இதயத் துடிப்பு உள்ளிட்ட அனைத்து செயல்களையுமே கட்டளையிட என்ற நிலை வந்துவிடும். செயற்கை இயந்திரங்கள் மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் இதய துடிப்பை உருவாக்க முடியும். ஆனால் உடல் அசைவற்ற இந்த நிலையில் வாழ்நாளை நீட்டிக்க முடியாது. எனவேதான் மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டால் அந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அது என்ன மூளைத் தண்டுவடச் சாவு?

மூளையின் கீழ்ப்பகுதியில்தான் இந்த தண்டுவடம் அமைந்துள்ளது. முதுகுத்தண்டையும், மூளையையும் இணைக்கும் இந்த தண்டுதான் நரம்பு மண்டலம், மொத்த உடலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது. குறிப்பாக மூச்சுவிடுதல், இதயம் துடித்தம், ரத்த அழுத்தம் மற்றும் விழுங்குதல் போன்ற செயல்பாடுகளை தண்டுவடம் கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு செய்திகளை அனுப்புவதிலும் இதன் பங்கு அளப்பறியது.

மூளைச்சாவு ஏற்படும்போது இந்த அனைத்து செயல்களும் முடங்கிவிடுகிறது. சுய நினைவு இழந்த அந்த நபரின் இந்த செயல்பாடுகள் மீண்டும் திரும்பாது என்பதால்தான் மூளைச்சாவு ஏற்பட்ட நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார்.

மூளைச்சாவுக்கான காரணங்கள்:

மூளைக்குச் செல்லும் ரத்தம் அல்லது ஆக்ஸிஜன் நிறுத்தப்படும்போது மூளைச்சாவு ஏற்படுகிறது.

மாரடைப்பு - இதயத்துடிப்பு நிற்கும்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் நின்றுவிடுவதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் நிறுத்தப்படுகிறது.

பக்கவாதம் - மூளைக்கு செல்லும் ரத்தமானது நிறுத்தப்படும்.

ரத்தக்கட்டிகள் - ரத்த நாளங்களில் கட்டிகள் உருவாகும்போது அது ரத்தம் சீராக பாய்வதைத் தடுப்பதால் உடல் முழுவதுமே ரத்தஓட்டம் தடுக்கப்படும்.

இதுதவிர, தலையில் பலத்த காயம் ஏற்படுதல், மூளையில் ரத்தக்கசிவு, மூளையில் ஏற்படும் வீக்கம் மற்றும் மூளைக்கட்டிகளும் மூளைச்சாவுக்கு காரணமாக அமையும்.

கோமாவும் மூளைச்சாவும் ஒன்றா?

கோமா நிலையில் கண்கள் எப்போதும் மூடியபடி சுயநினைவின்றி கிடப்பர். அந்த நபரால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட, பதிலளிக்க முடியாது. இதில் பாதிக்கப்பட்ட நபரின் மூளையானது செயல்பாட்டில் இருக்கும். ஏற்பட்ட காயத்தின் தன்மையை பொருத்து குணமாகும் காலம் மாறுபடும். இந்த பிரச்னை சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.

கோமா நோயாளியின் தண்டுவடம் சில நேரங்களில் இயங்கும். ஆனால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் தண்டுவடம் மீண்டும் இயங்க வாய்ப்பே இல்லை. எனவேதான் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் பெரும்பாலும் தானம் செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com