திமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி ?

திமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி ?
திமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி ?

தி.மு.க தலைவர் கருணாநிதி - தயாளு அம்மாள் இணையரின் மூத்த மகனான மு.க அழகிரி 30.01.1950 அன்று திருக்குவளையில் பிறந்தார். பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்த கருணாநிதி, அவரது நினைவைப் போற்றும் வகையில் இவருக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.   திருக்குவளையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்றார். பின்னர் தன் தந்தைக்கு உதவியாக முரசொலியில் பணியாற்றினார். 1980 களில் முரசொலியை கவனித்துக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்ற மு.க. அழகிரி பின்னர் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கிவிட்டார். 

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார் மு.க. அழகிரி
. 2003 ஆம் ஆண்டு தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் மு,க. அழகிரி.  2007 ஆம் ஆண்டு "திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்" தினகரன் பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் ஸ்டாலின் தான் கலைஞர் கருணாநிதியின் அடுத்த வாரிசு என்று 70% மேற்பட்டோர் வாக்களித்து இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது. இதனால் கோபமடைந்த மு.க.அழகிரியின்  ஆதரவாளர்கள் அப்பத்திரிகை அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அப்பத்திரிக்கை சேர்ந்த ஊழியர்கள் மூவர் பலியானார்கள்.  

மு.க.அழகிரியின் அரசியல் பணி என்பது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பிடத்தக்க வகையில் தி.மு.கழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மேலும் நேரடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்தும் மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரித்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். திமுகவில் அவரது பணி மதுரை திருமங்கலத்தில் தான் தொடங்கப்பட்டது என்று சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு திருமங்கலம் இடைத் தேர்தலுக்கானப் பணியை அழகிரியிடம் வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி. அந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட லதா அதியமான் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அந்த இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிப் பெற்றதாக தோல்வியுற்ற அனைவரும் குற்றஞ்சாட்டினர். "திருமங்கலம் பார்முலா" என்று இன்றும் பலர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை சொல்வார்கள். பின்னர் முதன் முறையாக மு.க அழகிரிக்கு  திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர்  பதவி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று மத்திய அமைச்சரானார்.  

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தப் பிறகு தி.மு.கவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டதாலும் தி.மு. கழகத்திலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க அழகிரி மார்ச் 14,2014 அன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களை 45 நிமிடங்கள் சந்தித்து பேசியப் பிறகு, பாஜக கூட்டணியை ஆதரிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தி.மு.கழகத்திற்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருவதால் தி.மு.கழகத்தின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையை 25.03.2014 அன்று வெளியிட்டார்.

.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக விற்கு எதிராகப் பரப்புரை செய்தார். 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்கும் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டத்தோடு மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். 

நேற்றைய தினம் கலைஞரின் விசுவாசிகள் அவருடன் இருப்பதாகச் சொன்னார் மு.க அழகிரி. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி வெளிட்ட அறிக்கையில் அழகிரி செய்து வரும் துரோகத்திற்கு தனது பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், கழகத் தோழர்கள் யாரும் அவர் தெரிவித்து வரும் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அவரையும் அவரது பேச்சுகளையும் அலட்சியப்படுத்த வேண்டுவதாகவும் 14.02.2016 அன்று அறிக்கை வெளியிட்டார். 

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் விசுவாசிகள் யார் என்று பொறுத்து இருந்துப் பார்ப்போம்!

                                                                                                                                                                        -முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com