ஒருபக்கம் அமளி... மறுபக்கம் மசோதாக்கள்... மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது என்ன?

ஒருபக்கம் அமளி... மறுபக்கம் மசோதாக்கள்... மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது என்ன?
ஒருபக்கம் அமளி... மறுபக்கம் மசோதாக்கள்... மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது என்ன?

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் தினசரி நாடாளுமன்றத்தை முடக்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து பிரதமர் பதில் அளிக்க கோரிக்கை, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது போன்ற கோரிக்கைகள் காரணமாக இரண்டு அவைகளும் முடங்கிவந்த நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டது போல் ஆகஸ்ட் 13 வரை கூட்டத்தொடரை நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை என்ற கருத்து காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓபிசி பட்டியலை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் அரசியல் சாசனத்தில் 127-ஆவது திருத்தம் கொண்டுவரும் மசோதா மட்டுமே இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் விவாதத்தில் கலந்துகொண்ட ஒரே மசோதாவாகும்.

மக்களவையில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஓபிசி மசோதா மீதான விவாதத்தில் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 19 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டன.

பெரும்பாலான விவாதங்களில் அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அரசுக்கு ஆதரவாக பங்கேற்றன. ஆனால், விவாதம் நடந்த நேரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்முழக்கம் இட்டதால், விவாதங்கள் முறையாக நடைபெறும் சூழ்நிலை இல்லை. முன் தேதியிட்டு வரி வசூல் செய்யும் நடைமுறையை ரத்து செய்யும் மசோதாவுக்கு விவாதம் இன்றியே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு வழி வகை செய்யும் மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த மசோதா மூலம் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு நிறுவனங்களான நான்கு பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஏற்கெனவே எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு பங்குச்சந்தை மூலம் விற்கலாம் என அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால், மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை 21 மணிநேரம் மற்றும் 14 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. மொத்தம் 4 வாரங்களில், 96 மணி நேரம் அவை செயல்பட வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலான நேரம் ஒத்திவைப்புகளால் வீணானது. கேள்வி நேரம் போன்ற அலுவல்கள் தினமும் அவைத்தலைவர் இருக்கையை எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டு, பதாகைகளை ஏந்தி, முழக்கம் இட்டதால் முடங்கின. அவை சுமூகமாக செயல்படவேண்டும் என தொடர் முயற்சி செய்தும் எதிர்க்கட்சிகள் ஓபிசி மசோதாவுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளித்தனர். மக்களவையின் நேரம் வீணானது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தம் தெரிவித்தார்.

மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவிய சூழலில், 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், சில மசோதாக்களுக்கு கடைசி நேரத்தில் அவசரகதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஓபிசி மசோதா தவிர வேறு எந்த விவாதத்திலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரி, திரிணாமூல் காங்கிரஸ், சிவாசேனா உள்ளிட்ட காட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் பாதிக்கப்பட்டதால், பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் தினசரி விரயமாவதாக மக்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவலை தெரிவித்தனர். கொரோனா பெருந்தொற்று தொடர்பான விவாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற நிலையில், பிறகு கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் தினமும் முடங்கின.

ஓபிசி மசோதா இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் முழு வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால், முழு வாக்கெடுப்பு மற்றும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆகியவை கட்டாயம் என்பதால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இரண்டு அவைகளிலும் அரசியல் சாசனத்தில் 127-வது திருத்தம் செய்யும் மசோதாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வாக்களித்ததைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியது. அடுத்த கட்டமாக இது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com