சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சொல்வது என்ன? பூவுலகின் நண்பர்களின் விரிவான விளக்கம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சொல்வது என்ன? பூவுலகின் நண்பர்களின் விரிவான விளக்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சொல்வது என்ன?  பூவுலகின் நண்பர்களின் விரிவான விளக்கம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA 2020) மீது மக்கள் கருத்துச் சொல்வதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 11. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு பற்றிய விரிவான விளக்க  அறிக்கையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சிறு பிரசுரமாக வெளியிட்டுள்ளது. அதில் உள்ள புதிய நடைமுறைகள் மற்றும் அந்த வரைவு ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து சுற்றுச்சூழலியல் மீதான அக்கறையுடன் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் முழு வடிவத்தை புதிய தலைமுறை இணையதள வாசகர்களுக்காக வழங்குகிறோம். 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன?

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெறவேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்கவேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து, அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்னும் எளிமையாகச் சொன்னால், உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனம் கட்டப்படவிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல்நிலையில் அது ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளை குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை விரிவான ஆய்வு செய்து பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம், தனது சுற்றுச்சூழல்தாக்க மதிப்பீட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கப்பெற்ற நிபுணர் குழு, அதை ஆய்வுசெய்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

தற்போதுள்ள  EIA 2006 அறிக்கை நடைமுறைகள்:  

தற்போதுள்ள 2006 EIA வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் A பிரிவு மற்றும் B பிரிவு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.   

A–பிரிவுத் திட்டங்கள்: அணுமின் நிலையங்கள், பெட்ரோல் சுத்திகரிப்பு & பெட்ரோகெமிக்கல்  நிறுவனங்கள், இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், எரிவாயு குழாய் பதிப்பு, பெரிய அளவிலான சுரங்கப் பணிகள், நிலத்தடி எண்ணை-எரிவாயு-நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த, அதேநேரத்தில் சூழலுக்கு அதிகம் கேடுவிளைவிக்கக்கூடிய திட்டங்கள் A பிரிவுத் திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

B – பிரிவுத் திட்டங்கள்: 50 ஹெக்டேருக்குக் குறைவான சுரங்கப் பணிகள், 500MW திறனுக்கு உட்பட்ட அனல்மின் நிலையங்கள், சக்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், 500 ஹெக்டேர்கள் பரப்பளவிற்குள் இருக்கும் தொழில் மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் முதலிய திட்டங்கள் B பிரிவுத் திட்டங்கள் என வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றில் A பிரிவுத் திட்டங்களுக்கு மத்திய நிபுணர் குழுவும் (EAC - Environmental Appraisal Committee) B பிரிவுத் திட்டங்களுக்கு மாநில நிபுணர் குழுவும் (SEAC-State Environmental Impact Assessment Committee) மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.

A, B எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி அனைத்துத் திட்டங்களுக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடும் (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேட்பும் 2006 EIAவில் அவசியமாக இருக்கின்றன.

EIA 2020 புதிய வரைவில் திட்ட வகைப்பாட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

தற்போது அரசு கொண்டுவந்துள்ள புதிய வரைவில் திட்டங்கள் A, B1, B2 என மூன்று பிரிவுத் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி…   

  • A பிரிவுத் திட்டங்களை, மத்திய நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும், இதற்கு EIA ஆய்வறிக்கை மற்றும் மக்கள் கருத்துக்கேட்பு அவசியம்.
  • B1 பிரிவுத்திட்டங்களுக்குச் சூழல்தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியம். ஆனால் மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.
  • B2 பிரிவுத் திட்டங்களை மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். ஆனால் இதற்கு EIA ஆய்வறிக்கையோ, பொதுமக்கள் கருத்துக்கேட்போ தேவையில்லை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (பத்தி 5.6).

பொதுமக்கள் கருத்துக்கேட்பும் சூழல் தாக்க அறிக்கையும் அவசியமில்லை:

முந்தைய சட்டத்தில் சூழலியல்தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக்கேட்பும் அவசியமாக இருந்த 25 சிவப்பு மற்றும் ஆரஞ்சுவகை நிறுவனங்களை, தற்போது B2 பிரிவுக்கு மாற்றியிருப்பதன் மூலம், அவற்றைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல்தாக்க மதிப்பீடோ செய்யவேண்டியதில்லை என்கிறது புதிய வரைவு.

இந்தப் புதிய வரையறையின்படி, B2 பிரிவில் குறிப்பிட்டுள்ள  கனிம சுரங்கப் பணிகள் (5 ஹெக்டேர்கள் வரை), 100 கி.மீ. வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள், உள்நாட்டு நீர் வழிகள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துக் கட்டுமானம் மற்றும் நகரியத் திட்டங்கள், அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், 25MW அளவிலான புனல் மின்சாரத்திட்டங்கள், தொழிற்பேட்டைகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமாக நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயு-நிலக்கரி-எண்ணை வளங்கள்-நிலக்கரி படிம மீத்தேன் எடுத்தல் ஆகிய திட்டங்களுக்கு EIA வும் கருத்துகேட்பும் அவசியமில்லை.  

புரியும்படி சொல்லவேண்டுமென்றால், கடலூரில் இருந்து ராமநாதபுரம் வரை காவிரிப் படுகையில் நிலத்தடியிலும் நீருக்கடியிலும் இவர்கள் போடப் போகும் ஆயிரக்கணக்கான ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் கருத்துக்கேட்போ, சூழலியல்தாக்க மதிப்பீடோ தேவையில்லை. கடந்த ஜனவரியில் இவர்கள் கொண்டுவந்த சட்டத்திருத்தமும் தற்போது கொண்டுவந்துள்ள  EIA2020 வரைவும் இதையேதான் சொல்கிறது. 

விலக்கு அளிக்கப்பட்ட ஆபத்தான திட்டங்கள்:

நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பனை சுத்திகரிக்கும் தொழிற்சாலையையும், எண்ணை வளங்களை சுத்திகரிக்கும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையையும்விட அதை நிலத்தடியில் இருந்து எடுக்கும் நீரியல் விரிசல் (Fracking) முறையே மிகவும் ஆபத்தானது.

எரிவாயு மற்றும் எண்ணை வளங்களைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களைத் துவங்க சூழலியல்தாக்க மதிப்பீடும், பொதுமக்கள் கருத்துக்கேட்ப்பும் அவசியம் என்று சொல்லி A பிரிவில் வைத்துவிட்டு, மிகவும் ஆபத்தான பூமிக்கடியில் இருந்து எரிவாயு-நிலக்கரி-எண்ணை வளங்கள்-நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுப்பதற்கு EIA & மக்கள் கருத்துக்கேட்பு தேவை இல்லை என்று B2 பிரிவில் சேர்த்திருப்பது முரண்பாட்டின் உச்சம்.

ஜனநாயக உரிமை மறுப்பு:     

மக்கள் எவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் EIA 2020 சட்டத்தின் அடிப்படையில் சட்டப்படி(!) திட்டத்தை அமல்படுத்தும் முழு அதிகாரத்தை அரசு பெறுகிறது. இத்திட்டங்களுக்கு சூழலியல் அனுமதி கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி, தனிநபரோ அல்லது அமைப்புகளோ இயக்கங்களோ நீதிமன்றம் செல்லமுடியாதபடி புதிய வரைவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கியமாக தேச நலன், பாதுகாப்புச் சார்ந்த திட்டங்கள் மற்றும் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவோ, பொதுமக்கள் கருத்துக்கேட்போ தேவையில்லை என்றும் சொல்கிறது புதிய வரைவு.

இந்த வரையறையின்கீழ், கடல்வளத்தை அழிக்கும் சாகர்மாலா திட்டமும், நாட்டின் லட்சிய திட்டமாக பா.ஜ.க அரசால் கருதப்படும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் வரும் எட்டுவழிச் சாலைத் திட்டமும், தமிழகத்தை ராணுவ கேந்திரமாக்கும் திட்டமும், ஏன் நம் மலைவளத்தை நாசமாக்கத் துடிக்கும் நியூட்ரினோ திட்டமும்கூட இதன் அடிப்படையில் மக்கள் கருத்துக்கேட்பு இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்ட வாய்ப்பிருக்கிறது.

எல்லைப்பகுதி சாலைகள்

இதேபோன்று இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து 100 கி.மீ வான் தூரம் வரையிலான நிலப்பகுதிகளில் வரவுள்ள தேசிய நெடுஞ்சாலை, குழாய் பதிப்புத் திட்டங்களுக்கு கருத்துக்கேட்புத் தேவையில்லை என்று புதிய EIA வரைவில் பத்தி 14.2 இல் குறிப்பிட்டிருப்பது, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இயற்கைவளங்ளையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஒன்றாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.

அதேபோல் பெரிய அளவிலான சூரிய ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பூங்கா திட்டங்களுக்கு EIAவில் இருந்தும் மக்கள் கருத்துக்கேட்பில் இருந்து விலக்களித்திருக்கிறது புதிய வரைவு (பத்தி 26.14). புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருப்பினும், மையப்படுத்தப்படாத மின்சக்தியே வேண்டுமென்று சூழலியலாளர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பெரிய அளவிலான சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு அதிகப்படியான விவசாய நிலங்களே கையகப்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் அதானி தொடங்குவுள்ள 4500 கோடி ரூபாய் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தித் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராடிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஆபத்தான தொழிற்சாலைகளுக்கு வரவேற்பு:

பூச்சிக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகளை A பிரிவில் இருந்து B1 பிரிவுக்கு மாற்றியதன் மூலம் சூழலியல் பாதுகாப்பு முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரிடர் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனம் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.    

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள் கூடுதல் விரிவாக்கம் செய்யவோ அல்லது தங்களது உற்பத்திமுறையினை நவீனப்படுத்துவதாக இருந்தாலோ, அந்த மாறுதல் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில், அந்த விரிவாக்கத்திற்கான சூழலியல் அனுமதிபெற மக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்று புதிய வரைவின் பத்தி 16.1 சொல்கிறது.

எளிமையாகச் சொன்னால், ஏற்கனவே மக்களையும் சூழலையும் பாதித்துக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்து கூடுதலாக உற்பத்தி செய்வதாக இருந்தால், அதற்கு மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே விரிவாக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவில் உள்ள மற்ற முக்கிய பிரச்சனைகள்:

நீர்த்துப்போகும் பொதுமக்கள் கருத்துகேட்பு நடைமுறை:

i.)             ஒரு திட்டத்தின்மீது மக்கள் கருத்துச் சொல்லும் காலஅவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ii.)            மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் 45 நாட்களில் இருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.  

மக்களின் கருத்துகளைக் கேட்டறிய உரிய காலஅவகாசம் வழங்கப்படாமல்போனால், திட்டத்தினால் பாதிக்கப்படப்போகும் மக்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், தங்கள் சந்தேகங்களைக் கேட்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும், பிரச்சனைகளைச் சொல்லவும் அவகாசம் கொடுக்காமலேயே கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதன் நோக்கமே முழுமையடையாது.

அரசு முன்னெடுக்கும் கனிமச் சுரங்கங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வனங்களை அழிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தப்போகும் இடங்களில் வசிக்கும் மக்கள் (குறிப்பாகப் பழங்குடியினர்)  தகவல் மற்றும் தொலைத்தொடர்பில் பின்தங்கியுள்ள  நிலையில், கருத்துக்கேட்பின் காலஅவகாசத்தைப் குறைப்பதென்பது இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் ஜனநாயக உரிமையை முற்றிலும் மறுப்பதற்குச் சம்மாகும்.

வலுவிழக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் :

EIA வைப் பொருத்தவரை சூழலியல் அனுமதிக்குப் பிறகான கண்காணிப்பு நெறிமுறைகள் சூழலியல் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நிறுவனம், தான் சூழலியல் அனுமதிபெறும்போது தனது சூழலியல் மேலாண்மைத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு நடந்துகொள்கிறதா என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தாங்கள் எந்தச் சூழலியல் சீர்கேடும் செய்யவில்லை என்பதை அறிக்கையாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

இப்படி 6 மாதங்களுக்கொருமுறை சூழலியல் இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்ததை தற்போது இந்த புதிய EIA2020 வரைவின் மூலம் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை என்று நீட்டித்துள்ளார்கள். இதனால் ஒரு நிறுவனம் ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து சூழல் சீர்கேட்டில் ஈடுபட்டாலும், அதிகாரிகளின் பார்வைக்கு அது ஆண்டு முடியும்வரை வராமல் போவதற்கான வாய்ப்புள்ளது.

இங்கே கனிமச் சுரங்கம் போன்ற ஒரு செயல்பாட்டில் ஓர் ஆண்டுக்கு விதிகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து இயங்கிவந்தால், அது திரும்பச் சரிசெய்யமுடியாத சூழலியல் சீர்கேட்டிற்கு வழிவகுத்துவிடும் என்பதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

சூழலியல் அனுமதி உரிமத்தின் கால அவகாசத்தைக் கூட்டுதல்:

சுற்றுச்சூழல் அனுமதி (EC) வாங்கிய பின்னர் திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் புதிய வரைவில் நீட்டிக்கப்பட்டுள்ளது (பத்தி 19.1.I). உதாரணமாக, சுரங்கப்பணிகளின் கட்டுமானம் மற்றும் ஆரம்பக்கட்ட பணிகளுக்கான 30 ஆண்டுகால அவகாசத்தை 50  ஆண்டுகளாக உயர்த்தியுள்ளனர்.  அதே போன்று ஆற்றுப்படுகை மற்றும் அணுவுலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த 5 ஆண்டுகளாக உள்ள தற்போதைய காலஅளவை 15 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறார்கள். தற்போதுள்ள சூழலியல் தன்மையை வைத்துக் கொடுக்கப்படும் சூழலியல் அனுமதி 15  ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே பொருந்தும் என்பது எவ்வளவு தவறானது? இது நிச்சயம் சூழலியலில் சரி செய்யமுடியாத பாதிப்பினை ஏற்படுத்தும்.

சூழலியல்தாக்க மதிப்பீட்டின் தரத்தைக் குறைத்தல்:

i.)             A பிரிவுத் திட்டங்களுக்கான சூழலியல்தாக்க மதிப்பீடு செய்யும்போது 10 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் செய்யவும், B பிரிவுத் திட்டங்களுக்கு 5 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் புதிய வரைவு பரிந்துரைக்கிறது. சூழலியல் தாக்கம் என்பது ஒவ்வொரு திட்டத்தின் அளவு, கழிவின் தன்மை, திட்டம் செயலபடுத்தும் பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் ஆகியற்றைப் பொறுத்து மாறுபடும் என்பதால் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரே வரையறையினை வைப்பது சரியாகாது.

உதாரணமாக, எண்ணூர் அனல் மின்நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சூழலியல் தாக்க மதிப்பீடு செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில் அனல்மின் நிலையத்தின் நுண் துகள்களினால் (Particulate matter) ஏற்படும் பாதிப்புகள் 25 கி.மீ. தாண்டியும் உணரப்படும் என்பதால், 10 கி.மீ.க்கு மட்டும் சூழல்தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முற்றிலும் தவறாகிவிடும்.

ii.)            சூழலியல்தாக்க மதிப்பீடு ஆய்விற்கான அடிப்படைத் தகவல்களை சேகரிக்கும்போது வெறும் ஒரு பருவத்திற்கான தகவல்கள் போதுமானது என்கிறது புதிய வரைவு. ஆனால் உண்மையில் கோடைகாலம், குளிர்காலம், பருவமழை காலம் என அனைத்துப் பருவங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும்போதுதான் திட்டத்தினால் ஏற்படவுள்ள சூழலியல் தாக்கத்தினை முழுமையாக கணிக்கமுடியும்.

iii.)           முந்தையச் சட்டத்தின்படி, நிபுணர் குழுவானது திட்டம் எந்தப் பிரிவின்கீழ் வருகிறது என்பதை ஆராய்ந்து பரிசீலித்து உறுதிசெய்வார்கள். சில சமயம் B பிரிவில் வரையறை செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள்கூட தேர்வு செய்யப்படும் இடம், அதன் சூழலியல் தாக்கம் ஆகியவை கருத்தில்கொண்டு A பிரிவிற்கு மாற்றப்படும். ஆனால் தற்போது திட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்து உறுதிப்படுத்தும் நடைமுறை நீக்கப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் முன்கூட்டியே வரையறை செய்யப்பட்டுவிடுகிறது. இந்த மேம்போக்கான சூழலியல் பார்வை நிச்சயம் சூழலியல் சீர்கேட்டிற்கே வழிவகுக்கும்.

iv.)           தொழிற்பேட்டைகளுக்குள் அமைந்திருக்கும் MSME (சிறு மற்றும் குறுந்தொழில்கள்) அளவுகோலிற்குள் வரும் தொழிற்சாலைகளை B2 பிரிவு எனப் புதிய EIA 2020 வரைவு குறிப்பிடுவதன் மூலம் அந்தத் தொழிற்சாலைகளுக்கு சூழல்தாக்க மதிப்பீடு செய்ய வேண்டாம் என்கிறது. உண்மையில் MSME (Medium-Small-Micro-Enterprises) என்பது அந்தத் தொழிலின் முதலீட்டை மையமாக வைத்து வரையறை செய்யப்படுவது.

முதலீடு குறைவாக இருப்பதனால் அந்த நிறுவனம் குறைவாக கழிவுகளை வெளிப்படுத்தும் என்பது கிடையாது. உதாரணத்திற்கு MSME வரையறைக்குள் வரும் சாயப்பட்டறைகள் நீர்நிலைக்கு அருகில் அமைக்கப்பெற்றால், அது மோசமான சூழலியல் சீர்கேடு நடக்கக் காரணமாகிவிடும்.

புகார் விதிமுறைகள் :

EIA2020 வரைவில் தொழிற்சாலையின் சூழலியல் விதிமீறல்களை யார் யார் புகார் அளிக்கலாம் என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் வந்த எந்த EIA சட்ட நடைமுறையிலும் இப்படி இல்லை.

i.)             திட்டத்தைச் செயல்படுத்தக்கூடியவர்கள்,

ii.)            ஏதாவது அரசுத் துறையினர்

iii.)           ஆய்வுக்குழுவோ மதிப்பீட்டுக்குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும்போது.

iv.)           ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விண்ணப்பத்தைச் செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரியவந்தால்.

இவர்கள் எல்லாம் இதுகுறித்து சொல்லலாம் என்று EIA 2020 வரைவின் பத்தி 22.1ல் “DEALING OF VIOLATION CASES” என்ற தலைப்பின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மற்ற சாமானியர்கள் புகார் அளிக்கமுடியாது என்பதுதான் அர்த்தம்.

தொழிற்சாலைகளின் விதிமீறல்களைத் தெரியப்படுத்துதல்:

திருடன் கையிலே சாவியை கொடுத்ததுபோல, தொழிற்சாலைகளில் நடந்த சீர்கேடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் தெரியப்படுத்தினால் அபராதம் குறைப்பு செய்யப்படுவதாக புதிய EIA வரைவு சொல்கிறது (பத்தி 22.7). இதனால் விதிமீறல்களை தொழிற்சாலைகள் தெரிவிக்கும்போது, அதனை குறைத்துக் கணக்குக்காட்டித் தப்பித்துக்கொள்ளவே இது வழிவகுக்கும். அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.

திட்டத்தின் சூழல்தாக்க மதிப்பீட்டிற்கான பிரத்யேக வழிமுறைகளை வகுத்தல்:

தற்போதுள்ள 2006 EIA விதிமுறைகளின்படி சூழலியல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது, குறிப்பிட்ட திட்டத்திற்காக TOR - Terms Of Reference என்று சொல்லப்படக்கூடிய பிரத்தியேக ஆய்வு வரைமுறைகளை வழங்குவார்கள். இது ஒவ்வொரு திட்டத்தையும் தொழிற்சாலையையும் பொறுத்து மாறுபடும்.

ஆனால், புதிய EIA2020 வரைவிலோ அப்படி பிரத்யேகமாக TOR விதிமுறைகளை வழங்காமல் மொத்தமாக அந்தப் பிரிவின்கீழ் வரும் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து ஒரே முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட TOR அறிக்கையை வெளியிடும். உதாரணமாக விண்ணப்பித்திருப்பது ஒரு இரசாயன ஆலை என்றால், மொத்தமாக எல்லா இரசாயன ஆலைகளுக்குமான TORஐ பயன்படுத்தி சூழலியல்தாக்க மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். இது சூழலியல்தாக்க மதிப்பீடு முறையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.   

திட்டச் செயல்பாட்டிற்கு பிந்தைய சூழலியல் அனுமதி:

முன்பெல்லாம் சூழலியல் அனுமதிபெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ துவக்கமுடியும். ஆனால், தற்போதைய வரைவு சூழலியல் அனுமதி பெறுவதற்காக காத்திருக்காமல், தொழிற்சாலையை துவங்கிவிட்டு அதற்கான அபராதத்தையும் கட்டிவிட்டு, பின்னர் சூழலியல் அனுமதியைப் பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேபோன்று முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நீண்ட நாட்கள் காக்க வைக்கக்கூடாதென்பதற்காக சூழலியல் அனுமதி வழங்குவதற்கான கால அவகாசம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவை EIA சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

இப்படியாக தொழில்நிறுவனங்கள் லாபமீட்டவும், எளிமையாக தொழில் செய்வதற்காகவும் முதலாளிகளின் காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் சூழலியல் பாதுகாப்பிலும், நாட்டின் நீடித்த வளர்ச்சிக் கொள்கையிலும் சமரசம் செய்யும் இந்த EIA2020 வரைவு நிச்சயம் நாட்டின் இயற்கை வளத்திற்கும் மக்களின் நலத்திற்கும் பேராபத்து.

பிரச்சனைகளை வரும் முன்னர் நம்முடைய அரசுகள் செயல்பட்டதற்கான தரவுகள் இல்லை.  1984ஆம் ஆண்டு போபால் விபத்திற்குப் பிறகுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்  1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2004ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட அழிவிற்குப் பிறகு பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது.

கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாவதற்குக் காரணம், காலநிலை மாற்றமும், காடுகள் அழிக்கப்படுவதும்தான் என உலகம் முழுவதிலும் வல்லுநர்கள் தெரிவித்த பிறகு, உலக நாடுகள் தங்களுடைய சூழல் சட்டங்களையும், விதிகளையும் மேலும் கடுமையாக்கிவருகின்றன. ஆனால் இந்தியாதான் தொழில்களை இலகுவாக நடத்தவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே நீர்த்துப்போன சட்டங்களை மேலும் நீர்த்துப்போகச் செய்ய #EIA2020 போன்ற அறிவிக்கைகளை வெளியிடுகின்றன.

நன்றி: பூவுலகின் நண்பர்கள் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com