"எங்கள செய்தியா போட்டு என்ன பண்ண போறீங்க?" -கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பு

"எங்கள செய்தியா போட்டு என்ன பண்ண போறீங்க?" -கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பு
"எங்கள செய்தியா போட்டு என்ன பண்ண போறீங்க?" -கரும்பு வெட்டும் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பு

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான, முதன்மையான பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள்தான். பொங்கல் பண்டிகை என்றாலே நம் மனதிற்கு முதலில் வருவது கரும்புதான். கரும்பினை கொண்டுதான் நம் வீடுகளை அலங்கரிப்போம். அதேபோல், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெள்ளம், சர்க்கரை கொண்டு பொங்கல் வைப்போம். பொங்கல் பண்டிகை நாட்களில்தான் நாம் கரும்பு அதிக அளவில் சாப்பிடுவோம்.

அதேபோல், டீ, காபி சாப்பிடுவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்டதால் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையும் நம் வாழ்வில் நாள்தோறும் ஒரு அங்கமாகிவிட்டது. இப்படியான கரும்பினை விவசாயம் செய்யும் விவசாயிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களையும் நாம் நினைவுகூர்வதேயில்லை. ஒன்று, இரண்டு ஏக்கர்களில் கரும்பு பயிருடும் விவசாயிகளின் வாழ்வும், விவசாய வேலைகளை சார்ந்து இருக்கும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வும் துயர்மிகுந்ததாக இருந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக கரும்பு விவசாயத்தில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

 விவசாயம் என்றால் நிலம் வைத்திருப்போர் மட்டுமல்ல; அதில் தன்னுடைய உழைப்பை கொட்டி எல்லா பொருட்களையும் உருவாக்க காரணமாக இருக்கும் விவசாய தொழிலாளர்களும்தான். கரும்பு பயிரை பொறுத்தவரை, நிலத்தை உழுது தயார் செய்வது, நடவு செய்வது, உரம் இடுவது, சோகை கழிப்பது என அத்துனை வேலைகள் அதில் இருக்கிறது. எத்தனை வேலைகள் இருந்தாலும் கரும்பு வெட்டும் பணிதான் இருப்பதிலே மிகவும் கடினமான, அதேநேரத்தில் ஆபத்து நிறைந்தது. கரும்பு வெட்டும் பணியில் உயிரை விட்டவரும் உண்டு, வாழ்க்கையை தொலைத்தவரும் உண்டு.

கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் துயரங்களை அறிய நேரடியாக, கரும்பு வெட்டு நடக்கும் விவசாய நிலத்திற்கே செல்வது என முடிவு எடுத்தேன். கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையின் இருமருங்கிலும் கரும்பு விவசாயம் செய்து வந்தது ஏற்கெனவே நான் அறிந்து இருந்ததால், என்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஆலத்தூர் என்ற கிராமத்தில் மெயின் ரோடுக்கு அருகிலேயே ஒரு விவசாய நிலத்தில் கரும்பு வெட்டு நடந்து கொண்டிருந்தது. வயலின் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்றேன்.

 ஒரு வயலில் வெட்டை முடித்துவிட்டு இரண்டாவது வயலில் கரும்பு வெட்டும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் விவசாய தொழிலாளர்கள். ஆண்களும், பெண்களுமாக ஒரு 15 பேர் இருந்திருப்பார்கள். கரும்பு சருகுகளின் 'சரக்' 'சரக்' என்ற சத்தமும், வெட்டுக் கத்தி கரும்பினை துண்டிக்கும்போது எழும்பு 'சத்' 'சத்' என்ற ஒலியும் என் காதுகளை சூழ்ந்தது. சோகைகளை கத்தியால் முதலில் ஒதுக்கிவிட்டு பின்பு 'டக்' 'டக்' என மின்னல் வேகத்தில் துண்டுகளாக வெட்டி அருகில் போடுகிறார்கள் ஆண்கள். அந்தக் கரும்புகளை எடுத்து அடுக்கி கட்டி வைக்கிறார்கள் பெண்கள்.

20 வயது இளைஞர் முதல் 60 வயதினை தாண்டிய முதியவர் வரை பல தரப்பினரும் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். மெள்ள 60 வயதை தாண்டிய சுப்ரமணியன் என்பரிடம் பேச்சு கொடுத்தேன். ஏற்கெனவே நான் மனதில் நினைத்து வைத்திருந்தது போல, 'கரும்பு இனிப்பதை போல் கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கை இனிக்கிறதா?' என்று கேட்டேன். அவர் ஒருபுறம் கரும்பினை 'சதக்' 'சதக்' என்று வெட்டிக்கொண்டே,

"என்னோட சின்ன வயசுல இருந்து கரும்பு வெட்ற வேலைக்கு வந்துகிட்டு இருக்கேன். எனக்கு இப்போ 65 வயசு ஆச்சு. இப்பவும் வெட்டிகிட்டுதான் இருக்கேன். எங்க வாழ்க்கை அப்படி ஒன்னும் பெரிசா மாறிடல. ஒரு நாளைக்கு 400 ரூபாய், 500 ரூபாய் கெடைக்கும். சில நாட்களில் 300 ரூபாய்தான் கிடைக்கும். அது எத்தன பேர் வர்றோம், எவ்ளோ கரும்பு வெட்ரோம்ங்கிறத வெச்சு மாறும். இது கரும்பு வெட்ற சீசன். இப்போ ஒரு 4, 5 மாசம் வேலை இருக்கும். ஆலை ஓடுற வரைக்கும் எங்களுக்கு வேலை இருக்கும். மிச்ச இருக்கிற மாசத்துல, உரம் போட,  நெலத்துல பார் ஒதுக்க வேலை வரப்ப போவோம்" என்றவர் எங்கே நாம் பின் தங்குறோம் என்று நினைத்து தன்னுடைய வேகத்தை கூட்டி முன் நகர்ந்தார்.

 நானும் அடுத்ததாக ஓர் இளைஞரிடம் நெருங்கினேன். "சிலர் கரும்பு வெட்டும்போது கையில, காலுல வெட்டிக்குவாங்க. இது ஒரு ஓட்டப்பந்தயம் மாதிரிதான். வயசு பசங்க கொஞ்சம் வேகவேகமாக வெட்டிக் கிட்டு முன்னாடி போயிடுவாங்க. வயசானவங்க தான் ரொம்ப சிரம்பப்படுவாங்க. 50, 60 ஏன் 70 வயசுல கூட கரும்பு வெட்ட வருவாங்க. அவங்களுக்கு வாழ்க்கை கஷ்டம், வேற வழியில்லை, வேலைக்கு வந்தாதான் பொழப்பு நடக்கும். என்ன, கரும்பு வெட்டுப்போது பாம்பு கடிச்சுட்டா, வேறு ஏதாச்சும் ஆயிடுச்சுனா கரும்பு ஆலை பார்த்து ஏதாச்சும் ஒரு இன்சூரன்ஸ் மாதிரி கொடுத்தா நல்லா இருக்கும்.

எத்தனையோ முறை எழுதி கொடுத்துட்டோம். ஒன்னும் நடக்குல. படிச்சுட்டு நெறய பேரு வேலை இல்லாம இருக்காங்க. அதனாலதான் இதுமாதிரி கெடச்ச வேலைக்கு பசங்க வத்துடுறாங்க" - கரும்பினை வெட்டிக்கொண்டே கரும்பு வெட்டுபவர்களின் வாழ்க்கையை வேதனையுடன் சொன்னார் அந்த இளைஞர்.

 சிலர் கணவனும், மனைவியுமாக பல ஆண்டுகள் இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். அப்படியான ஒரு தம்பதியிடம் நெருங்கினேன். இருவரும் 50 வயதை நெருங்கியவர்கள்போல் தெரிந்தார்கள். வெட்டு பின் தங்கியதை உணர்ந்த அந்த நபர் வேக வேகமாக கத்தியை சுழட்டி கொண்டிருக்க, அவரது மனைவிதான் படபடவென்று வாழ்க்கையின் சிரமங்களை கொட்டித்தீர்த்தார்.

 "20 வருசமாக கரும்பு வெட்ட வர்றோம். காலையில 5, 6 மணிக்கெல்லாம் வயல்ல இருக்கணும். 4 மணிக்கே எழுந்திருச்சி கெளம்பி வருவோம். மதியம் வரைக்கும் வெட்டு இருக்கும். முடிச்சிட்டு கிளம்பிடுவோம். சில நாள்ல சாய்ந்த்ரம் வரைக்கும் வெட்டு இருக்கும். அப்பெல்லாம் மறுநா எந்திரிக்க கஷ்டமா இருக்கும். எந்திரிச்சி வயலுக்கு வரவரைக்கும் கஷ்டமா இருக்கும். வேலைய ஆரம்பிச்சுட்டா ஆளுங்களோட ஆளா நேரம் போயிடும். என்னத்தா சொல்லி என்ன பண்றது; வெட்டுனாதான் கூலி.

கடவுள் இருக்கறவங்களுக்குதான் பணத்த கொடுக்கிறா. எங்கள மாதிரி இல்லாதவங்களுக்கு புள்ளங்கள கொடுத்து கஷ்டப்பட வெக்கிறான். இத்தனை வருஷா சம்பாதிக்கிறத வச்சு சாப்பிடவும், நல்லது கெட்டது பாக்கவும்தான் சரியா இருக்குது. வெங்காயம் ரெண்டு கிலோ 100 ரூவா விக்கிது. எங்களுக்கு கெடக்கிற கூலிய வச்சு எப்படிதான் சமாளிக்கிறது. ஏதோ பொழப்பு ஓடுது. ஒரு 5 மாசம் வேலை இருக்கிற வரைக்கும் நல்லா போகும். அப்புறம்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்" - கணவன் வெட்டிய கரும்புகளை அடுக்கிக்கொண்டே தங்களுடைய கஷ்டங்களையும் அடுங்கினார் அந்தப் பெண்மணி.

 அப்படியே மெள்ள நகர்ந்தேன். கையில் வெட்டுக் கத்தி வைத்திருந்த, 40 வயதுடைய ஒருவர் என்னிடம் நெருங்கி வந்து, "என்னப்பா இத டிவியில் போடுவிங்களா?" என்று கேட்டார். நான் அவருக்கு பதில் சொல்ல நாவெடுக்கும்போது, தன்னுடைய உள்ளங்கையை என்னிடம் காட்டினார். ஒரு நிமிடம் எனக்கு ஏதோ என்று ஆகிவிட்டது. வெட்டுக் கத்தியை ஓயாமல் பிடித்ததால் ஏற்பட்ட புதிய காயமும், ஏற்கெனவே காயமானதற்கான தழும்புகளும் உள்ளங்கை முழுவதும் பரவி இருந்தது. அவரது கையையும், கூர்மை தீட்டப்பட்ட அந்தக் கத்தியையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். அதன்பிறகும் ஒரு சிலரிடம் பேச்சு கொடுத்தேன். ஒரே மாதிரியான வாழ்க்கையின் சோகக் கதைகள்.

ஆண்களுக்கு கிடைப்பதைக் காட்டிலும் பெண்களுக்கு மிக குறைவாகவே கூலி கிடைக்கிறது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு 150, 175 ரூபாய்தான் கூலி. ஆண்களுக்கு வேலை பளு கூடுதல் என்றாலும் பெண்களுக்கு அது நியாமான கூலி இல்லை.

"வெட்டு முடிஞ்சதும் அத கட்டி வண்டியில ஏத்தும்போது எங்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கும். இடும்பு ஒடிஞ்சு போகும். ஆனா 175 ரூவாதான் தராங்க. ஒரு 200 ரூவா கொடுத்தாலும் பரவால” என்றார் இளம் வயது பெண் ஒருவர்.

 பின்பு, எல்லோருமாக சாப்பிட கரும்பு வெட்டிக் கொண்டிருக்கும் அந்த வயலுக்கு நடுவிலேயே அமர்ந்தார்கள். அவர்களிடம் ஏதாச்சும் கேக்கலாம் என்று நான் வாயெடுப்பதற்கு முன்பே அவர்கள் என்னிடம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்கள். "எங்கள போட்டா புடிச்சு என்னா பண்ண போறீங்க, செய்தி போட்டு நீங்க சம்பாதிக்க போறிங்க, உங்க வேலைய பாத்துக்க போறிங்க, எங்களுக்கு என்ன கெடக்க போவுது. எதுவுமே மாறப்போறதுல்ல. இப்படியேதான் எங்க வாழ்க்கை போகப்போவுது" என்று பொறித்து தள்ளினார் ஒரு பெண். "ஏன்மா அந்த தம்பிகிட்ட கோவமா பேசுற, அவர் ஏதோ நம்ம கஷ்டத்த கேக்க வந்திருக்காரு, அவருகிட்ட போயி" என்று வயசான ஒருவர் குரல் கொடுத்தார்.

 அரசாங்கத்திடம் ஏதேனும் கோரிக்கை வைக்கிறீர்களா என்று கேட்டேன். "என்ன கேட்டு என்னப்பா நடக்க போகுது. இங்கே பாம்பு கடி அதிகம். கட்டுவிரியன் அதிகமா இருக்கும். அது கடிச்சு செத்தவங்க கூட இருக்காங்க. அப்படி ஏதாச்சும் ஆச்சுனா அந்த குடும்பத்துக்கு அரசாங்கமோ, ஆலையோ ஏதாச்சு செஞ்சா பரவால்ல" என்று ஒரு முதியவர் பொதுவான தன்னுடைய கருத்தினை முன்வைத்தார். சாப்பிட்டு உடனே வெட்டுக்கு கிளம்பிவிட்டார்கள் அவர்கள். நானும் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com