தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
Published on

தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். அவசியமாக அறிந்துக்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றிய தொகுப்பு..

  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை.
  • புதிய கட்டிடங்கள், மேம்பாலங்கள், சாலைகள் திறப்புவிழா போன்ற ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும் அரசால் நடத்தப்படக்கூடாது.
  • அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது. யாருக்கும் பதவி உயர்வும் அளிக்கக் கூடாது, வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
  • அரசின் செலவில் தொலைக்காட்சி, ஊடகங்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  • உரிய ஆவணங்களின்றி அதிகளவில் பணம், தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், பரிசுப்பொருட்களை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும்.
  • பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
  • கட்சித்தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவை மூடி மறைக்கப்படும்.
  • அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரபூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்லலாம்.
  • சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது. கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
  • ஒரு கட்சி, மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
  • மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.
  • அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  • தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
  • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுபூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  • ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது.

-வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com