சாதித்தது திமுக; சறுக்கியது அதிமுக; மலர்ந்தது தாமரை - தேர்தல் முடிவு சொல்லும் உண்மை என்ன?
பல்வேறு மாற்றங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக நடந்து முடிந்திருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் உண்மைகள் என்ன? முக்கிய கட்சிகளின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி? இதோ..
திமுக
சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது திமுக. உள்ளாட்சி அமைப்புகளில் 75 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் வசப்படுத்தியுள்ள திமுக, அனைத்து மாநகராட்சியிலுமே அசைக்க முடியாத அளவுக்கு இருப்பது, அக்கட்சியின் வெற்றி சதவீதமே வெளிப்படுத்துகிறது. நகராட்சி, பேரூராட்சிகளிலும், திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.
21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் திமுக 949 வார்டுகளையும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 73 , மதிமுக 21, விடுதலைச் சிறுத்தைகள் 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 24, இந்திய கம்யூனிஸ்ட் 13 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 138 நகராட்சிகளில் 133 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியிருக்கிறது.
அதிமுகவுக்கு பெரும் பலமாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தை இந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் உடைத்து தன்வசப்படுத்தியிருக்கிறது திமுக. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூா், கரூர் ஆகிய 5 மாநகராட்சிகளையும், 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களையும் கைப்பற்றி கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.
அதிமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்றால் அது பாஜக சில வார்டுகளில் அதிமுகவையே தூக்கி சாப்பிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 1,374 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை மட்டுமே வென்றுள்ளது. 3,843 நகராட்சிகள் வார்டுகளில் 638 வார்டுகளை வென்றுள்ளது. 7,621 பேரூராட்சி வார்டுகளில் 1,206 பேரூராட்சி வார்டுகளை மட்டுமே வென்றிருக்கிறது. ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக்கூட அதிமுகவால் கைப்பற்ற முடியாமல் பின்னடைவை சந்தித்துள்ளது.
பொதுவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்றாலும் ஓர் பிரதான எதிர்க்கட்சி இதுவரையில் இந்தளவுக்கு தோல்வியை தழுவியது இல்லை. கோவை, சேலம் போன்ற பாரம்பரியமாக அதிமுக வலுவாக இருக்கும் மாவட்டங்களிலும் அக்கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
பாஜக
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக, 4 தொகுதிகளில் வென்றது. இம்முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிட்ட பாஜக கொஞ்சம் சுமாரான வாக்குகளை பெற்றுள்ளது. 22 மாநகராட்சி வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 56 நகராட்சி வார்டுகளையும், 230 பேரூராட்சி வார்டுகளையும் பாஜக வென்றுள்ளது. தேர்தல் நடந்த மொத்த வார்டுகளில் பாஜகவின் வெற்றி சதவீதம் என்று பார்த்தால், மாநகராட்சியில் 1.60%, நகராட்சியில் 1.46%, பேரூராட்சியில் 3.02% ஆகும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சென்னையில் பல இடங்களில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னையில் 134வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றி பெற்று இருக்கிறார். 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை அதிகமாக பெற்றுள்ளது பாஜக.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த அதிகாரப்பூர்வ 3-வது பெரிய கட்சி நாங்கள்தான் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிவரும் நிலையில், அதனை மறுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘’2011-ல் தனித்து போட்டியிட்ட போது 2.07 சதவீத இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சித் தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சித் தேர்தலில் 4.4 சதவீத இடங்களிலிருந்து தற்போது, 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
காணாமல் போன தேமுதிக, நாதக, மநீம
இந்த தேர்தலில் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. சீமானுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அவரது வேட்பாளர்கள் ஒன்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்று பெருந்தோல்வியை சந்தித்து உள்ளனர். இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
அதே போல, மக்களவைத் தேர்தலில், குறிப்பிடும்படியான வாக்கு சதவீதத்தைப் பெற்ற கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் செல்வாக்கு இருப்பதாகக் பேசப்பட்டது. ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு வெற்றிகள் பெறாததால் நகர்ப்புறங்களில் அக்கட்சியின் செல்வாக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்விட்டது தே.மு.தி.க.வின் நிலை. உடல்நல பாதிப்பினால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வர முடியாமல் போனாலும் பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். நகராட்சி, பேரூராட்சிகளில் சில வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது தேமுதிக.