2019 தேர்தலுக்கு மோடியின் அஸ்திரங்கள் என்ன ?
போகிறபோக்கைப் பார்த்தால், 2019 பொதுத் தேர்தல் நெருங்குவதற்குள் பிரதமர் நரேந்திர மோடி - தனது கவச குண்டலங்கள், அஸ்திரங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் இழந்து.... போர்க்களத்தில் தனித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமோ எனத் தோன்றுகிறது.
பாரதிய ஜனதா கட்சியினர் பாணியிலேயே சொல்வதானால், குஜராத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, நாட்டில் நடக்கும் பல சம்பவங்களும் அவர்களது கட்சியைப் பொறுத்தவரை அத்தனை சரியாக இல்லை; திரும்பிய பக்கமெல்லாம் அமங்கல சிக்னல்களே அதிகம் தெரிகின்றன. இது, அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்க தயாராகும் மோடிக்கும், அவரது கட்சிக்கும் அத்தனை நம்பிக்கைத் தருவதாக இல்லை. ஓராண்டுக்குமுன் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியின்போது, வரும் மக்களவைத் தேர்தலுக்கு, ‘2019வரை மோடி காத்திருக்க மாட்டரோ....’ எதிர்க்கட்சிகள் கூடிப்பேசி... மோடிக்கு எதிராக ஓரணியில் திரள, நேரம் தர வேண்டாம் என்பதால், முன்னதாகவே மக்களவையைக் கலைத்துவிட்டு, தேர்தலைச் சந்திக்க நரேந்திர மோடி முன்வரலாம் என்றும் கூடப் பேசப்பட்டதுண்டு. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இப்போது பாஜக அரசு மீதுள்ள மக்களின் கோபம் தணிய, இன்னொரு 6 மாதம் அவகாசம் கிடைத்தால், தேர்தலை சற்றே பின்னுக்கு தள்ளிப் போட முடியுமா என்பதுதான் மோடியின் ஆழ்மன ஓட்டமாக இருக்குமோ என்னவோ!
2014 பொதுத்தேர்தலில் மோடி சாதித்த வெற்றி, எந்த அளவுகோளின்படி பார்த்தாலும் அசாதாரணமானது. ஆனால், இன்று அத்தனையும் கலகலத்துப் போயிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. அதனால்தான், தனது கட்சியின் எம்எல்ஏ., எம்பிக்கள் கூட்டத்திலும்..., மொபைல் அப்ளிகேஷன் மூலம் தனது கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் - இப்படி ஒரு எச்சரிக்கையை மோடி விடுத்திருக்கிறார்!
"உங்களை, நீங்களே.... சமூக விஞ்ஞானிகளாகவும், துறை நிபுணர்கள் போலவும் நினைத்துக் கொண்டு, எதிரில் கேமிராவைப் பார்த்ததும் எதாவது பேசத் தொடங்கிவிடாதீர்கள். அரைவேக்காட்டுத்தனமாக எங்கும், எதையும் பேசாதீர்கள்.... மீடியாவின் வாய்க்கு மசாலா போடாதீர்கள்"
நரேந்திர மோடி இப்படி பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மோடியின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர்... Saffron Brigade என, ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் காவி கோஷ்டிகளில் பலர் என, ஆளாளுக்கு அஜாக்கிரதையான... அசட்டுத்தனமான.... அவசரம் நிறைந்ததான பேச்சினால் - மோடியின் ஆட்சிக்கும், அவரது கட்சிக்கும் ஏற்படுத்தியுள்ள அவப்பெயர் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் கூட, இந்தக் கூட்டத்தினரில் பலர் இல்லை என்பதுதான் பரிதாபம். அதனால்தான், மோடி இப்படி ஒரு எச்சரிக்கை விடுக்க வேண்டி வந்தது. ஆனாலும், அதற்கு இரண்டாம் நாளே, அந்த கட்சியின் உத்திர பிரதேச மாநிலத் தலைவர்களில் ஒருவரான சுரேந்திர சிங், தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, 'சூர்ப்பனகை' என விமர்சனம் செய்துள்ளார். மேலும், மம்தா ஆட்சி தொடர்ந்தால், மேற்கு வங்கத்தில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், அந்த அடிப்படையில் இன்னொரு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கூட இந்தியாவில் உருவாகலாம் எனவும் பேசியிருக்கிறார். தங்களை சமூக விஞ்ஞானிகளாக... அறிவு ஜீவிகளாக கருதிக் கொள்ள வேண்டாம் என மோடி சொன்னதன் பொருள் இப்போது புரிகிறது! இந்த வகையில், மோடிக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் ஆட்களில் கணிசமானவர்கள் அவரது கட்சிக்கு வெளியில் இல்லை; உள்ளேயேதான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
2014 தேர்தலின்போது, இந்திய மக்கள் பெருவாரியாக, மோடியின் மீது நம்பிக்கை வைக்க, பல காரணிகள் இருந்தன. அதில் ஒன்று - மோடியின் ஆட்சியில் ஊழல் இருக்காது என்று உருவாக்கப்பட்ட பிம்பம். அது, இன்று மங்கிப் போயுள்ளது. அதற்கு, அவரது நெருங்கிய சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான அமித் ஷாவின் மகனான - ஜா ஷா என்பவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளும் ஒரு காரணம். "2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, ஜா ஷாவின் சொத்து மதிப்பு, கற்பனைக்கு எட்டாத அளவில் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்பது குற்றச்சாட்டு. பிரச்னை, இது மட்டுமே அல்ல. மோடியின் அமைச்சரவையில் தற்போது ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகங்களுக்கு பொறுப்பு வகிப்பவரான பியூஷ் கோயல் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல, ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கூடுதல் விலை கொடுக்கப்படுகிறது என, ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இவை எல்லாம் குற்றச்சாட்டுகள் என்றால், ஊழலில் ஈடுபட்டவர்கள் என அறியப்பட்டவர்களுக்கு, மீண்டும் இடம் தரப்படுகிறது என்ற வகையிலும், பாஜக மீது புகார் உண்டு. இன்னும் 2 வாரங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநிலத்தில் கட்சியின் சார்பில் முன்னிருத்தப்படும் முக்கியஸ்தர்களில் ஒருவரான எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு... சுரங்க ஊழல் புகாரில் தொடர்புள்ள ரெட்டி சகோதரர்களில் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு.... போன்றவற்றால், மோடி குறித்து உருவாக்கப்பட்ட - 'ஊழலைச் சகித்துக் கொள்ளாதவர்' என்ற பிம்பம், உண்மையுடன் பொறுந்தாமல் துருத்திக் கொண்டு வெளியே தலை நீட்டி நிற்கிறது என்கிற விமர்சனத்தை மறுப்பதற்கில்லை. இதற்கெல்லாம் முன்னதாகவே, மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் குற்றச்சாட்டுகள் தனிகதை!
2014ல் மோடியின் வெற்றிக்கு, முக்கிய பங்களித்த மற்றொரு அம்சம் - அந்த கட்சி பெற்ற தலித் மக்களின் வாக்குகள். இந்திரா காந்தி உயிருடன் இருந்தவரை, காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருந்த தலித் ஓட்டுக்களை - கடந்த பொதுத்தேர்தலில் கணிசமாக ஈர்த்தது, மோடி மேஜிக்! தேர்தல் கணிப்புகள் வெளியிடுவது மற்றும் வாக்களிப்பு போக்குகளை ஆய்வு செய்வது போன்ற பணி செய்யும் 'சென்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் டெலவப்பிங் சொசைட்டீஸ்'-ல் பணியாற்றும் சஞ்சய் குமார், 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தபின் வெளியிட்ட தகவல்படி, "2014ல் பாஜக, நாடு முழுவதும் உள்ள தலித் வாக்குகளில் 24%ஐப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 சதவீதத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி 14 சதவீதத்தையும் பெற்றன. அதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜக பெற்ற தலித் வாக்குகளின் சராசரி அளவு 12 முதல் 14%தான். அதாவது, வழக்கத்தை விட - 2014ல், கிட்டத்தட்ட இருமடங்கு தலித் வாக்காளர்கள் பாரதிய ஜனதாவை... மோடியை ஆதரித்துள்ளனர்" எனத் தெரிகிறது. ஆனால், 2019ம் ஆண்டு தேர்தலில், மீண்டும் அப்படி நடக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. 2016ல் நடந்த - ஹைதராபாத் பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்கு பதிவு செய்திருந்த மாணவராக ரோஹித் விமுலாவின் தற்கொலை பிரச்னையில் தொடங்கி.... பின்னர் சென்னை ஐஐடியில் தலித் மாணவர்களின் போராட்டம் என நீண்டு, மாட்டிறைச்சி உண்பவர்களின் மீதான துவேஷத்தின் வழியாக பயணித்து வந்த தலித் மக்களின் கோபம்... குஜராத் தேர்தலில் ஜெக்னேஷ் மொவானியின் தலைமையின் கீழ் உருண்டு திரண்டு, முழு வடிவம் பெற்று, தற்போது மோடிக்கு எதிராக எழுந்து நிற்கிறது. ஏற்கனவே இருந்த பல தலித் தலைவர்களைத் தாண்டி, இன்றைய தலைமுறை இளைஞர்களின் அபிலாழைகளைப் புரிந்து கொண்டு... அவர்களது எதிர்காலம், வேலைவாய்ப்பு, திரைமறைவில் பறிக்கப்படும் இடஒதுக்கீடு, உள்ளூரில்... கிராமப்புறங்களில் இழைக்கப்படும் பிற அநீதிகள் போன்ற பரந்துபட்ட களத்தில்... சிந்தனைத் தளத்தில் பங்கேற்று, அவர்களது நம்பிக்கையைப் பெறும் இளம் தலித் தலைவர்கள் - 2014ல் மோடி மேஜிக் ஈர்த்த எஸ்சி... எஸ்டி வாக்குகளை, பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து பிரித்து எடுத்துவிடும் வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகிறது. அண்மையில் எஸ்சி மற்றும் எஸ்சி சட்டத்தின் சில ஷரத்துகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளால் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள், இந்த கருத்துக்கு வலு சேர்க்கின்றன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா கூறியுள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கவை. அதாவது, "இந்த சட்டத்தினால் தலித்களுக்கு கிடைத்து வந்த பாதுகாப்பு எதையும் உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறைத்துவிடவில்லை என்ற போதிலும், நாட்டின் பல பகுதிகளிலும் தலித் மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பக் காரணம் - அவர்களது மனதில் ஏற்கனவே திரண்டு கொண்டிருந்த அரசின் மீதான கோபம்தான்" என்பது, எந்த அரசியல் கட்சியாலும் ஒதுக்கிவிட முடியாத கருத்து. ஆனால் கள நடப்புகள், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, அரசியல் காமெடிகளாகவே அரங்கேறுகின்றன என்பதுதான் பரிதாபம். மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் 'அம்பேத்கார் Vs நேரு காலத்து காங்கிரஸ்' சம்பவங்களை பேசி, அம்பேத்கர் மீதான தங்கள் மரியாதையை காட்ட முயற்சி செய்துக் கொண்டிருக்க, உள்ளூர் பாஜகவினர் அம்பேத்கர் சிலைகளை உடைக்க தயங்குவதில்லை. பின்னர், அதை சரி செய்கிறோம் பேர்வழியென, புதிய சிலை வைத்து, அம்பேத்காருக்கு காவி உடை அணிவிப்பதுதான் அடித்தட்டு பாஜகவினரின் அணுகுமுறை என்பதை இன்டர்நெட், வாட்ஸ் அப் யுகத்தில் வாழும் தலித் இளைஞர்கள் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், பல மாநிலங்களில் உள்ள பாரதிய ஜனதா களப்பணியாளர்களுக்குதான் இப்போதும் அந்த 'நுட்பம்' புரியவில்லை.
இது மட்டுமல்ல. கடந்த தேர்தலின்போது, மக்களவையில் பாஜக தனி மெஜாரிட்டி பெற, உதவிய அம்சம் - உத்திர பிரதேசம் போன்ற மிகப் பெரிய மாநிலங்களை மொத்தமாக வளைக்க முடிந்ததுதான். ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என்பதே கள நிலவரம். 2014 தேர்தலில் தனித்தனியாக நின்று, பாஜகவுக்கு எதிரான தங்களது வாக்கு வங்கி சிதறுண்டு போய், அதனால், பாஜக வெற்றியைத் தாங்களே எளிதாக்கியதை - பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும், சமாஜ்வாடிக் கட்சியின் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவும் தற்போது புரிந்து கொண்டார்கள். அதனால், இப்போது ஒரே அணியாக தேர்தலைச் சந்திக்கும் முடிவில் உள்ளனர். இந்த யுக்தி வெற்றியைத் தரும்.... அதாவது, பாஜகவை வீழ்த்த உதவும் என்பதை 2 மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல்களில் இந்தக் கட்சிகள் சோதித்துப் பார்த்தே உணர்ந்து கொண்டன. அதனால், உத்திர பிரதேசத்தில், பாஜக 2019 தேர்தலின் போது, பாதி இடங்களில் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயமாக இருக்கும். இதேமாதிரி யுக்தியை கையாள, மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் முன்வருவாரா எனத் தெரியவில்லை. ஆனால், இதற்கு மாறாக, 3வது அணி என்ற பெயரில், வாக்குகளை சிதறடிக்கும் எந்த முயற்சியும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதவிர சட்டீஷ்கர், மத்திய பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஒரிசா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் போன்ற பிற வட மாநிலங்களின் களநிலவரம் எப்படி அமைகிறது என்பதே வரும் தேர்தலின் வெற்றி வீரரை முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
பாஜகவுக்கு எதிராக தற்போது வடிவம் பெற்றுள்ள இன்னொரு மிக முக்கிய பிரச்னை, சமூகத்தில் சரிபாதியான பெண்களின் நம்பிக்கையை அது இழந்து வருகிறதோ என்ற தோற்றம். 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா முன்வைத்த மிக முக்கியமான கோஷங்களில் ஒன்று - "நல்ல காலம் பொறந்தாச்சு" என்பது! (Ache dhin)ஆச் தின்! ஆனால், இன்று இளம் பெண்கள், "இதுதான் நீங்கள் வாக்குறுதி அளித்த நல்ல காலமா?..." என்று கேட்பதும், "இன்று மாடுகள் பாதுகாப்பாகத்தான் உள்ளன; எங்களுக்குத்தான் பாதுகாப்பற்ற நிலை" என்று பதாகைகளை ஏந்தி, கல்லூரி பெண்கள் போராடுவதுமான நிலை பாஜகவுக்கு நல்லதல்ல. பிரதமர் மோடியின் லண்டன் பயணத்தின்போதே அவரிடம், "பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் நடக்கும் போராட்டம்" குறித்து கேள்வி எழும் நிலைக்கு, அரசின் மீதான நம்பிக்கையில் பிடி நழுவிக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. ஆனால், இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது - மோடி என்பதைவிட, அவரது கட்சியினர் என்பதுதான் சரியாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவாவில் நடந்த சம்பவமானாலும், உத்திர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கால் பாதிக்கப்பட்ட பெண்ணாலும், பாதிக்கப்பட்டவர் நியாயம் கேட்க முயன்றதைத் தடுத்தது... குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க முயன்றது என இரண்டிலும் பாஜகவினர் வெளிப்படையாகவே ஈடுபட்டது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது. அதைத் தாண்டி, இதற்கான போராட்டங்களின் தீவிரம் கட்டுக்கடங்காமல் போனபின்தான், சம்மந்தப்பட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும்கூட விழித்துக் கொள்கிறது. மக்களைக் கோபத்தின் உச்சிக்கு விரட்டிவிட்டு, இப்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது அரசு என்ற விமர்சனம்தான் மிச்சம்.
இதே விஷயத்தில், தேசிய அளவில் நடந்த விஷயங்களைத் தாண்டி, தமிழகத்துக்கு வந்தால், இன்னும்... இன்னும் புகார். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினரால் பேசப்பட்ட பேச்சுகள்.... அதையொட்டி சமூக வலைதளங்களில் வந்து கொட்டும் அபத்த கருத்துகள்.... நாம் நாகரிகமான சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. சமூக விஞ்ஞானிகளைப் போல பேசி, ஊடகங்களுக்கு மசாலா உணவு பரிமாற வேண்டாம் என்ற மோடியின் கோரிக்கை எத்தனை அர்த்தமுள்ளது என்பதற்கு இவையெல்லாம்தான் சாட்சி.
கடந்த 50 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகளின் நிழலில் இருந்த தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு அத்தனை பெரிய வீச்சு இல்லை என்பதுதான் உண்மைநிலை. அதனால், தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதாவும், கருணாநிதியும் - கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் களத்தில் இருந்து விலக நேர்ந்தபோது...., 'இதுதான் தாங்கள் கால்பதிக்க சரியான நேரம்.... பொறுத்தமான வாய்ப்பு' என பலரையும் போல, பாரதிய ஜனதாவும் யோசித்ததில் தவறு இல்லை. ஆனால், அதற்கு மோடி கையாண்டதாகச் சொல்லப்படும் யுக்தி.... தந்திரம்தான் - தமிழக மக்கள் மனதில் இருந்து, அந்த கட்சியை இன்னும் அதிக தூரத்துக்கு விரட்டியிருக்கிறது. இதுதவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடங்கி, டெல்டா விவசாயிகளின் கருத்துக்கு மாறாக, அப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அமைக்க முயல்வது, கெயில் குழாய் பதிப்பு திட்டம், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயம், நியூட்ரினோ ஆய்வக திட்டம் என, மத்தியில் ஆளும் பாஜக மீது நீண்ட புகார் பட்டியல் வாசிக்கும் நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளது.
இதெல்லாம் போக, அண்மைய நடப்பாக பார்க்க வேண்டியது - மத்திய அரசின் நிதித் தொகுப்பை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது - நாட்டின் மொத்த வரிவருவாய்க்கு குறைந்த அளவே பங்களிக்கும் வட மாநிலங்கள், அதன் பகிர்வின்போது அதிக நிதி பெறுவதும், கூடுதல் வரி செலுத்தும் தென் மாநிலங்களுக்கு குறைந்த ஒதுக்கீடு செய்வதுமான தற்போதைய ஃபார்முலா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதையும் தாண்டி வந்தால், ஜனநாயகத்தின் 4 தூண்களும் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை அப்படியே ஏற்கிறோமோ... இல்லையோ... உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு உச்சத்துக்கு போய், அவர்கள் சந்திக்கு வந்தது இந்திய சரித்திரத்தில் இல்லாத வகையாக இப்போதுதான் நடந்தது.... அரசியல் கலப்பு இல்லாத தன்னாட்சி பெற்ற ஊடகம் தேவை எனச் சொல்லி உருவாக்கப்பட்ட பிரசார் பாரதியில் - ஒப்பந்த ஊழியர் நியமனம் குறித்தும் கூட மத்திய அமைச்சர் தலையிடுவதும், அதை ஏற்கவில்லை என பிரச்சார் பாரதிக்கு தரப்படும் நிதி ஒதுக்கிட்டை நிறுத்தி, பணியாளர்களுக்கு 2 மாதம் வரைகூட சம்பள பாக்கி வைப்பது போன்றதும் மோடியின் ஆட்சியில் நடந்த சம்பவங்கள்தான் என்பதை மறைக்க முடியாது.
அரசியல் ரீதியான இத்தனை விஷயங்கள் இருக்க, பொருளாதார ரீதியில் - இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள பெட்ரோல்... டீசல் விலை! பணமதிப்பு இழப்பும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் சரியான திட்டமிடல் இல்லாமலேயே அவசர கதியில் அமலாக்கப்பட்டு, அதன் பாதிப்புகள் மக்களை வறுத்து எடுத்துக் கொண்டுள்ள நிலை என, மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் மக்களிடம் உள்ளன.
ஆனால், இதெல்லாம் குஜராத் மாநிலத்தில் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மோடிக்கு ஏற்பட்டுள்ள சூழல் என்பதுதான் ஆச்சரியம். அப்படியானால், அந்த மோடி வேறு; இந்த மோடி வேறா...? எங்கே லகானைத் தவறவிட்டார் மோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. அல்லது மாநிலத்தை ஆள்வது வேறு... இந்தியா போன்ற பரந்துபட்ட நாட்டை ஆள்வது என்பது வேறா.... என்ற கேள்வி எழுகிறது. 2019 தேர்தலுக்கு இன்னும் பாக்கியுள்ள ஓராண்டுக்குள் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அவரது பிம்பம் மீது படிந்துள்ள கறைகளை எல்லாம் துடைத்தெறிந்து, தனது இமேஜை மீட்டெடுக்கப் போகிறாரா... அல்லது, அவரது கட்சியினேரே கட்டி எழுப்பியுள்ள கல்லறைக்குள் தனது ஆட்சி கை நழுவி விழுவதை அனுமதிக்கப் போகிறாரா என்பதே இப்போது மிஞ்சி நிற்கும் கேள்வி. இதற்கான விடைக்கு காத்திருப்போம்.