அமேசான் Vs ரிலையன்ஸ்... அமேசானுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு... பின்னணி என்ன?

அமேசான் Vs ரிலையன்ஸ்... அமேசானுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு... பின்னணி என்ன?
அமேசான் Vs ரிலையன்ஸ்... அமேசானுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு... பின்னணி என்ன?

ரிலையன்ஸ் குழுமத்துக்கும் அமேசான் குழுமத்துக்கு இடையே கடந்த ஓர் ஆண்டாக நடந்த சிக்கலில், அமேசானுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது ரிலையன்ஸ் மற்றும் ஃப்யூச்சர் குழும நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமேசான் Vs ஃப்யூச்சர் குழுமம்: ஃப்யூச்சர் குழுமம் கடந்த சில ஆண்டுகளாகவே நிதி சிக்கலில் இருந்து வருகிறது. ரீடெய்ல் உள்ளிட்ட பல தொழில்கள் இந்த நிறுவனத்தின் வசம் உள்ளன. ஆனால், இவை சிக்கலில் உள்ளன. இந்த நிலையில், இந்த குழுமத்தில் ஒரு நிறுவனமான ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தில் 2019-ம் ஆண்டு அமேசான் 49 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. ரூ.1,500 கோடி முதலீடு செய்து இந்தப் பங்குகளை வாங்கி இருக்கிறது.

ஃப்யூச்சர் குழுமத்தின் முக்கியமான குழுமமான ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்துக்கு 7.3 சதவீத பங்குகள் இருக்கிறது. அதாவது, அமேசான் நிறுவனத்துக்கு மறைமுகமாக ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் சுமார் 3.5 சதவீதத்துக்கு மேல் பங்குகள் இருக்கிறது என்பதுதான் மறைமுகமான உண்மை.

தவிர, ஃப்யூச்சர் கூப்பனில் இந்த முதலீட்டை செய்யும்போதே ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டும் என்றால் அமேசான் நிறுவனத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அத்துடன் ரிலையன்ஸ், வால்மார்ட், கூகுள், பேடிஎம், ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்ட 15 நிறுவனங்களுக்கு விற்க முடியாது என்றும் ஒப்பந்ததில் ஃப்யூச்சர் குழுமம் கையெழுத்திட்டிருக்கிறது.

அமேசான் Vs ரிலையன்ஸ்: ஃப்யூச்சர் குழுமத்துக்கும் அமேசானுக்கு இடையே இப்படி ஓர் ஒப்பந்தம் இருக்கும் பட்சத்தில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃப்யூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் வாங்கும் முடிவை எடுக்கிறது. கடன் சிக்கலில் இருந்ததால் ஃப்யூச்சர் குழுமமும் ஒப்புக்கொள்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.24,713 கோடி.

இந்த இணைப்பை எதிர்த்து அமேசான் பல வழக்குகளை தொடுக்கிறது. 2020-ம் ஆண்டு சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்திடம் அமேசான் முறையிடுகிறது. இதில் இணைப்பை தடுத்து அமேசானுக்கு ஆதரவாக சிங்கப்பூர் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

இதனைத் தொடர்ந்து ஃப்யூச்சர் குழுமத்தை விற்பதற்கு அமேசான் தடையாக இருக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஃப்யூச்சர் குழுமம் வழக்கு தொடுக்கிறது. மேலும் ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழும இணைப்புக்கு செபி, சிசிஐ உள்ளிட்ட இந்திய அமைப்புகள் அனுமதி வழங்குகின்றன.

சிங்கப்பூரில் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அமேசான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது இருக்கும் நிலையே தொடரவேண்டும் ஒரு நீதிபதி உத்தவிடுகிறார். இதனைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் இருக்கும் பென்ச்சுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. இந்த பென்ச் அமேசானுக்கும் ஃப்யூச்சர் கூப்பனுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தம் ஃப்யூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸுக்கு இடையான வர்த்தக பரிமாற்றத்தை தடுக்கமுடியாது என தீர்ப்பு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அமேசான் வழக்கு தொடுத்தது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு என்பது சிங்கப்பூர் நடுவர் மன்றம் கொடுத்த தடை உத்தரவு செல்லுமா இல்லையா என்பதற்கு மட்டுமே.

அதன்படி பார்த்தால், ரிலையன்ஸ், ஃப்யூச்சர் இணைப்புக்கு சிங்கப்பூர் நடுவர் மன்றம் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்த உத்தரவை அமேசான் நிறுவனம் வரவேற்றிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தாலும், ஃப்யூச்சர் குழுமத்துக்கே இந்த தீர்ப்பு பெரும் பாதிப்பு. கடன் அதிகமாக இருக்கும் சூழலில் நிறுவனத்தை விற்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்த குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தன.

இந்தப் போட்டி ரிலையன்ஸ் மற்றும் அமேசான் என இரு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. இந்திய ரீடெய்ல் சந்தையில் யாருக்கு அதிக பங்கு என்பதற்கான போட்டியாகவே இது இருக்கிறது.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com