“தோல்வி..தோல்வி.. வெற்றி! வெற்றி! வெற்றி!” -என்னா ஒரு போராட்ட குணம்; சிலிர்க்க வைத்த நடால்

“தோல்வி..தோல்வி.. வெற்றி! வெற்றி! வெற்றி!” -என்னா ஒரு போராட்ட குணம்; சிலிர்க்க வைத்த நடால்
“தோல்வி..தோல்வி.. வெற்றி! வெற்றி! வெற்றி!” -என்னா ஒரு போராட்ட குணம்; சிலிர்க்க வைத்த நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்த்து ரஃபேல் களம் கண்டார். அனல் பறக்க அரங்கேறிய இப்போட்டியின் முதல் இரண்டு செட்களை 6 க்கு 2, 7 க்கு 6 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். தன்னம்பிக்கையை தளர விடாமல் போராடிய நடால் அடுத்த இரண்டு செட்களை 6 க்கு 4, 6 க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில் 7 க்கு 5 என்ற கணக்கில் நடால் அந்த செட்டைக் கைப்பற்றி அரங்கையே அதிர வைத்தார். சுமார் ஐந்தரை மணி நேரம் இப்போட்டி அனல் பறக்க அரங்கேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால் வெல்லும் 21-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை நடால் நிகழ்த்தினார்.

2022 ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதியில் ரஃபேல் வீழ்த்தியது என்னவோ இளம் வீரர் மெத்வதேவை தான். ஆனால் சமகால டென்னிஸ் விளையாட்டு உலகின் ஜாம்பவான்களான ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரர் என இருவருடனும் ஆடாமலே வென்றுள்ளார் ரஃபேல். இந்த போட்டிக்கு முன்னதாக மூவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தனர். இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஆடவர் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சாம்பியன் பட்டம் வென்ற நடால் பெற்றுள்ள பரிசு தொகை?

நடப்பு ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஷ்லி பார்டி என இருவருக்கும் பரிசு தொகையாக சுமார் 28,75,000 ஆஸ்திரேலியா டாலர்கள் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இந்த தொகை 15 கோடி ரூபாயாகும். அதே போல இரண்டாவது இடம் பிடித்த மெத்வதேவ் (ஆடவர் பிரிவு), டேனியல் காலின்ஸ்க்கு (மகளிர் ஒற்றையர் பிரிவு) தலா 8.25 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்திய ரோஜர் பெடரர்!

“எனது சிறந்த நண்பனுக்கு எனது வாழ்த்துகள். அற்புதமான ஆட்டம். தலைசிறந்த வீரனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதை நிரூபித்துள்ளார். உங்களது அபாரமான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் போராடும் மனப்பான்மை எனக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. வரும் நாட்களிலும் மேலும் பல வெற்றிகளை குவிக்க உள்ளீர்கள். இப்போதைக்கு இந்த வெற்றியை அனுபவியுங்கள்” என 20 கிராண்ட் ஸ்லாம் வென்ற பெடரர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு பிறகு நடால்!

“வெற்றியோ, தோல்வியோ இறுதி வரை போராடி பார்த்துவிட வேண்டுமென்ற முடிவுடன் விளையாடினேன். ஐந்தாவது செட்டின் போது களைப்படைந்து விட்டேன். மெத்வதேவ் கடுமையான போட்டி கொடுத்தார். வரும் நாட்களில் அவர் நிறைய வெற்றிகளை குவிப்பார். இந்த வெற்றியின் மூலம் நான் இன்னும் சில காலம் டென்னிஸ் விளையாடுவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நான் சார்ந்துள்ள விளையாட்டை அனுபவித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். 2012, 2014, 2017 மற்றும் 2019 என நான்கு முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதியில் விளையாடி வெற்றி பெற முடியவில்லை. அதனால் இந்த வெற்றி எனக்கு ஸ்பெஷல்” என நடால் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக 2009-இல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com