சிறப்புக் களம்
'ஆப்' இன்றி அமையா உலகு 15: ‘What3Words’ இருப்பிடத்தை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 15: ‘What3Words’ இருப்பிடத்தை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் செயலி!
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் இருப்பிடத்தை (லொகேஷன்) சார்ந்தே இயங்குகிறது. நண்பர்களிடம் லொகேஷனை ஷேர் செய்ய, ஜிபிஎஸ் லொகேஷனை அடிப்படையாக வைத்து உணவு ஆர்டர் செய்ய, ஆன்லைன் பர்சேஸ், பயணத்தின்போது வழிகாட்டியாக என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இத்தகைய சூழலில் இருப்பிடத்தை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது ‘What3Words’ என்ற மொபைல் போன் செயலி.
பூமிப் பந்தினை 3க்கு X 3 மீட்டர் சதுரங்களாக பிரித்து அடையாளப்படுத்துகிறது இந்த செயலி. இதன் மூலம் இருப்பிடத்தை யாரிடத்தில் வேண்டுமானாலும் வெறும் மூன்றே வார்த்தையில் சொல்லிவிடலாம் என சொல்கின்றனர் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்தவர்கள். அது எப்படி?
நிலம், நீர் என பூமியின் மொத்த பரப்பளவான 510 மில்லியன் கிலோ மீட்டர் ஸ்கொயரையும் 57 டிரில்லியன் சதுரங்களாக பிரித்து, அந்த ஒவ்வொரு சதுரத்திற்கும் மூன்று வார்த்தைகள் அடங்கிய பிரத்யேக பெயர்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தீராது, வரப்பு, ஆடியது என்பது இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் உள்ள ஒரு விடுதியின் 3க்கு X 3 மீட்டர் சதுர ‘What3Words’ லொகேஷன். இப்படியாக உலகின் ஒவ்வொரு 3க்கு X 3 மீட்டர்களையும் இந்த அப்ளிகேஷன் பிரித்து காட்டுகிறது. முன்பு சொன்னதுபோல ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமிக்க பெயர்.
Latitude and Longitude (புவியியல் ஆள்கூற்று முறை) மற்றும் புவியிடங்காட்டி மாதிரியானவற்றை அடிப்படையாக கொண்டுதான் இப்போது ஒரு இருப்பிடத்தை அறிந்து கொண்டு வருகிறோம். What3Words செயலியும் இதைதான் அடிப்படையாக வைத்து இயங்குகிறது. ஆனால் 27.2046° N, 77.4977° E என்பதற்கு மாற்றாக ஒவ்வொரு இடத்திற்கும் பிரத்யேக மூன்று வார்த்தைகளை தருகிறது.
“இந்த லேண்ட் மார்க்குக்கு பின்கோடு இல்ல ஸ்டாம்ப் கூட தேவையில்லை!” என கே.ஜி.எஃப் படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்கு ஏற்ற படி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மூன்றே மூன்று வார்த்தைகள்தான். அது இருப்பிடத்தார் விலாசம். Proprietary Geocode System என்ற சிஸ்டத்தின் கீழ் What3Words இயங்குகிறது.
இதன் சிறப்பம்சங்கள் என்ன?
▶️ உலக மொழிகளில் சுமார் 50 மொழிகளில் What3Words இயங்குகிறது.
▶️ இந்திய மொழிகளில் தமிழ் உட்பட வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு என 11 மொழிகளில் What3Words செயல்படுகிறது.
▶️ What3Words பயன்பாட்டை மொபைல் போன் செயலி மற்றும் வலைதள முகவரியின் கீழ் பயனர்கள் பயன்படுத்தலாம்.
▶️ மொழிகளுக்கு ஏற்ற வகையில் What3Words-இல் கொடுக்கப்படும் மூன்று வார்த்தைகளும் எளிய வடிவில் கொடுக்கப்படுகின்றன.
▶️ ஆங்கில மொழியில் What3Words பயன்படுத்தினால் நிலம் மற்றும் கடல் என பூமியின் மொத்த பரப்புக்குமான ஒவ்வொரு 3க்கு X 3 மீட்டர் சதுரத்திற்குமான வார்த்தைகள் கிடைக்கின்றன. மற்ற மொழிகளில் நிலப்பரப்பிற்கு மட்டும் What3Words கிடைக்கின்றன.
▶️ இந்த செயலி விலாசம் தெரிந்த பகுதி அல்லது இடங்களை காட்டிலும் விலாசமே அறிந்திடாத பகுதிகளை எளிதில் அடையாளப்படுத்தி அடுத்தவர்களுக்கு எளிதில் சொல்லி விடலாம். ஆள் அரவமற்ற காட்டுப் பகுதிகளில் சிக்கிக் கொண்ட சிலரை What3Words உதவியுடன் மீட்டு வந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
▶️ What3Words கொடுக்கும் மூன்று வார்த்தையை இருப்பிட லொகேஷனாக எளிதில் அடுத்தவர்களுக்கு பகிரும் வசதியும் உள்ளது.
▶️ ஆப்பிள் iOS, ஆண்ட்ராய்டு, இணையதளம் என மூன்று விதமாக What3Words பயன்படுத்தலாம்.
▶️ எளிய வழியில் அனைவருக்குமான மற்றும் எல்லா இடங்களுக்குமான முகவரியாக உள்ளது What3Words.
▶️கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் 10 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். பெரும்பாலான பயனர்கள் இந்த கான்செப்டை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.what3words.android&hl=en_GB
ஆப்பிள் iOS லிங்க் : https://apps.apple.com/gb/app/what3words/id657878530
முந்தைய அத்தியாயம் > 'ஆப்' இன்றி அமையா உலகு 14: தமிழ் சமையல் குறிப்புகளை வழங்கும் கைப்பேசி செயலி!