இப்போதான் கொஞ்சம் அமைதியானோம்; அதுக்குள்ள அடுத்த புயலா? -தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்

இப்போதான் கொஞ்சம் அமைதியானோம்; அதுக்குள்ள அடுத்த புயலா? -தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்
இப்போதான் கொஞ்சம் அமைதியானோம்; அதுக்குள்ள அடுத்த புயலா? -தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்

நிவர் புயல் கரையக் கடந்த நிலையில், புதிய புயல் உருவாகும் என்ற தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அது குறித்தான சந்தேகங்களை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜேஷ் அவர்களிடம் முன் வைத்தோம். 

வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயலானது நேற்று நள்ளிரவு 2 1/2 மணி அளவில் கரையைக் கடந்தது. புயலின் காரணமாக கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில் சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 29 ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது புயலாக மாறுமா போன்ற தகவல்களானது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனிடையே மீண்டும் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே அது குறித்தான சந்தேகங்களை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர் கூறும் போது, “ மற்றொரு புயலானது உருவாக பாதிக்கு பாதி வாய்ப்பு இருக்கிறது. புயல் உருவானாலும் அதனால் வீரியத்தன்மையோடு இருக்க முடியாது என்பது என்னுடைய இப்போதையக் கருத்து. அந்தப் புயல் இப்போதிலிருந்து டிசம்பர் இறுதி வரையிலான காலக்கட்டங்களில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவையனைத்தும் மார்கழி மாத குளிர் காலத்தை பொருத்து அமையும்.

ஏனெனில் குளிர் கடுமையாக இருந்தால் புயல் உருவாக வாய்ப்பு இருக்காது. அப்படியே உருவானாலும் அதனால் பெருமளவு பாதிப்பு இருக்காது. அதற்கு முந்தையக் காலக்கட்டங்களில் புயல் உருவானால் பாதிப்பு இருக்கும். புயல் உருவாகும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்கும். குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புயலின் வீரியம் அதிகமிருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com