“தலிபானிடம் தப்பி நிற பேதம் பார்ப்பவர்களிடம் சிக்கி உள்ளோம்”-ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள்

“தலிபானிடம் தப்பி நிற பேதம் பார்ப்பவர்களிடம் சிக்கி உள்ளோம்”-ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள்
“தலிபானிடம் தப்பி நிற பேதம் பார்ப்பவர்களிடம் சிக்கி உள்ளோம்”-ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தலிபான். இருப்பினும் ஆப்கனை தலிபான் கைப்பற்றியபோது அந்த நாடே அமைதியற்ற நிலையில் இருந்தது. வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி வந்தனர். இந்நிலையில் ஆப்கன் மண்ணிலிருந்து தப்பிய ‘திக்.. திக்’ அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளனர் ஆப்கான் நாட்டை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள். 

கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட காதலால் தற்போது தாய்நாட்டை விட்டு பிரிட்டனில் குடியேறியுள்ள அவர்கள் ஆப்கனிலிருந்து எப்படி தப்பினார்கள்? 

“ஹெராத் மாகாணம்தான் எனது பூர்வீகம். 13 வயது முதல் கால்பந்து விளையாடி வருகிறேன். எங்கள் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றியபோது நான் வேலையில் இருந்தேன். என்னை எனது கணவர்தான் மீட்டுக் கொண்டு சென்றார். அப்போது வீதி முழுவதும் தலிபான் படையினர் மட்டுமே ஆயுதங்களுடன் நின்றுக் கொண்டிருந்தனர்.

துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் மட்டுமே எங்களது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களது ஆட்சியில் பெண்கள் கால்பந்து விளையாட நிச்சயம்  அனுமதிக்க மாட்டார்கள். எங்களுக்கு அதை விட மனமில்லை. அதனால் எங்கள் நாட்டிலிருந்து தப்புவது என நானும், எனது அணியினரும் முடிவு செய்தோம்” என்கிறார் ஆப்கானிஸ்தான் தேசிய இளைஞர் மேம்பாட்டு பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் சபேரியா (Saberyah). 

தொடர்ந்து பேசிய அவர் “பின்னர் எங்கள் அணியில் உள்ள வீராங்கனைகள் அனைவரும் காபூலில் இணைந்தோம். அங்குள்ள விடுதியில் யார் கண்ணிலும் படாத வகையில் 30 நாட்கள் கழிந்தன. இருப்பினும் எப்படியாவது வெளியேற வேண்டுமென நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. விமான போக்குவரத்து முடங்கியது. அப்போது நாங்கள் பாகிஸ்தான் வழியாக செல்வது என முடிவு செய்து ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அடைந்தோம். 

அங்கு எங்களைப் போல பல மக்கள், நாட்டை விட்டு தப்பி செல்ல வேண்டும் என விரும்பினர். அந்தக் கூட்டத்தில் புர்கா அணிந்திருந்த நாங்கள் முகத்தை மறைக்க தவறிய காரணத்தால் தலிபான்களால் சித்திரவதைக்கு ஆளானோம். சுட்டெரிக்கும் வெயில், மக்கள் கூட்டம் மாதிரியான காரணத்தால் மூச்சு விட சிரமமாக இருந்ததால் அப்படி செய்தோம். 

அப்போது எங்கள் கையில் நாங்கள் வைத்திருந்த கடிதம் தலிபான் படையினரிடம் சிக்கியது. அதை எங்களுக்கு ஆப்கானிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு கொடுத்திருந்தது. அதை பார்த்ததும் ‘நீங்கள் யாரும் இஸ்லாமியர்கள் இல்லை. நீங்கள் இங்கு இருந்தால் தூக்கு தண்டனை உறுதி’ என தலிபான்கள் தெரிவித்தனர். நல்ல வேளையாக பாகிஸ்தான் தரப்பு எங்களுக்கு விசா கொடுத்தது. நாங்கள் ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் வழியாக பிரிட்டன் வந்தோம். இப்போது ஒரு விடுதியில் தங்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.  

நிற பேதம் பார்க்கும் மக்களிடமிருந்து எப்படி காக்கப் போகிறேன்? - கலிதா போபல் 

ஆப்கன் நாட்டிலிருந்து அவர்கள் தப்ப உதவியுள்ளார் ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கலிதா போபல் (Khalida Popal). “அவர்கள் ஆப்கனிலிருந்து தப்ப உதவி செய்தேன். ஆனால் இப்போது அவர்களை நிற பேதம் பார்க்கும் மக்களிடமிருந்து எப்பாடி காக்கப் போகிறேன் என்பதை எண்ணி வருந்தி வருகிறேன். அவர்கள் இங்கு வந்த நாளிலிருந்து எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. வெறுப்புணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என வந்தவர்கள் சொல்லமாளாத தூயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்” என சொல்கிறார். கடந்த 2011-இல் நாட்டை விட்டு வெளியேறியவர் கலிதா.

“கடைசியாக நாங்கள் கால்பந்து பயிற்சியை எங்கள் தாய்மண்ணில் மேற்கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அடுத்த நொடி ஆம்புலன்ஸ், துப்பாக்கி சத்தம், மக்களின் அழுகுரல்கள் என அந்த இடமே மாறியது. எங்கள் பயிற்சியாளர்தான் எங்களை காத்தார்” என்கிறார் சபேரியாவுடன் அணியில் விளையாடி வரும் சாஹர்.   

எங்கள் நாட்டை தலிபான்கள் கைபற்றிய போது கூட அவர்கள் துப்பாக்கிகளை இயக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கொண்டாட்டத்தில் குண்டடி பட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்ததை என் கண் முன் பார்த்தேன் என சொல்கிறார் மற்றொரு வீராங்கனையான பாத்திமா. 

தங்கள் தாய்நாட்டு மண்ணில் கடைசியாக கால்பந்து பயிற்சி மேற்கொண்ட நினைவுகளை வைத்துக் கொண்டு ‘அடுத்து என்ன நடக்கும்?’ என தெரியாமல் உயிர் வாழ்ந்து வருகின்றனர் அந்த வீராங்கனைகள்.    

தகவல் உறுதுணை : The Independent

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com