”இந்து மதத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்யத்தான் நினைக்கிறோம்” கே.எஸ் அழகிரி பேட்டி!

”இந்து மதத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்யத்தான் நினைக்கிறோம்” கே.எஸ் அழகிரி பேட்டி!
”இந்து மதத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்யத்தான் நினைக்கிறோம்” கே.எஸ் அழகிரி பேட்டி!

“காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு நடக்கிறது” என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகனும், ”30 கோடி மதிப்புள்ள பா.ஜ.கவின்  தலைமை அலுவலகத்தை 3 கோடிக்கு மிரட்டி வாங்கிக்கொண்டது பா.ஜ.க” என்று காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரியும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி அறிக்கையால் தெறிக்க விடுகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் எந்த மக்கள் நல பிரச்சனைகள் என்றாலும் உடனுக்குடன் அறிக்கையிட்டு ’அறிவு’கிரி என்று நிரூபிப்பவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி. அவர், தலைவராக பதவியேற்ற, இந்த ஒன்னரை வருடத்தில் கோஷ்டி பூசலுக்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருந்தாலும் பூசலைப் பார்க்க முடிவதில்லை. அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்

பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகன் காங்கிரஸ் அறக்கட்டளை மீது முறைகேடு புகார் கூறியிருக்கிறாரே?

காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைக் குறித்து பா.ஜ.க பேசியிருப்பது ஏற்புடையதும் அல்ல: நாகரீகமும் அல்ல. இந்த அறக்கட்டளை பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டது. எங்கள் அலுவலகத்தில் ஒட்டடை இருந்தால், நாங்கள் சுத்தம் செய்துகொள்வோம். பக்கத்து வீட்டுக்காரர் கவலைப்பட வேண்டாம். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர் வீடே சாக்கடையால் நாறிக்கிடக்கிறது. அதனை, சுத்தம் செய்யாமல் குறுகிய மனம் கொண்டு பொய் சொல்கிறார்கள். பெருந்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட, இந்த அறக்கட்டளையில் யாரும் தவறு செய்ய முடியாது. தனது சுற்றுப்பயணங்களில் கிடைத்த நன்கொடையான பத்து அணா, இருபது அணா என்று அணாக்களை சேர்த்துக்கொண்டு வந்து உருவாக்கிய அறக்கட்டளை இது. அவருடைய ரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனக்காக உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக உருவாக்கினார். சட்ட விதிகளோடு ஆரம்பிக்கப்பட்டு அரசால் கணக்கு தணிக்கை செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் அங்கிகாரம் கொடுக்கப்படுகிறது.

மது எதிர்ப்பு பிரச்சாரம், ஏழை மாணவர்களுக்கு கல்விச்செலவு, ஏழை மக்களுக்கான மருத்துவச் செலவு இவைகளைத் தவிர வேறு எந்தக் காரியங்களுக்கும் அறக்கட்டளையிலிருந்து செலவு செய்ய முடியாது. நான்  தலைவரான பிறகு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1 கோடியும், ஏழை மக்களுக்கு மருத்துவ உதவித்தொகையாக 1 கோடியும் கொடுத்திருக்கிறேன். மேலும், சென்னை அடையார் மருத்துவமனைக்கு எனக்கு முன்பிருந்த தலைவர்கள் 50 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார்கள். வேலூர் சி.எம்.சிக்கு 50 லட்சமும், ஒரு கண் மருத்துவமனைக்கு 50 லட்சமும் அளித்திருக்கிறார்கள். மற்றவர்களால் கவனிக்கப்படாத ஆனால், ஏழைகளுக்கு உதவக்கூடிய பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு எங்கள் உதவித்தொகை போகிறது.

எங்களைப் போன்று பா.ஜ.கவின் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில், இதுபோல் ஏதாவது நலத்திட்டங்கள் செய்திருக்கிறதா? என்று இவர்கள் கூறவும். அதேபோல, பி.எம் கேர்ஸ்க்கு யார் நன்கொடை அளித்தார்கள்? எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிய முடியாது. இவர்களும் சொல்ல மாட்டார்கள். இதுபோன்றவர்கள் பெருந்தலைவர் காமராஜர் ஆரம்பித்த அறக்கட்டளையில் புழுதி வாரி தூற்றுவது கீழ்மையானது. கேவலத்திலும் கேவலம். மேலும், நாங்கள் புதிய கட்டுமானம் கட்டுகிறோம் என்கிறார்கள். அப்படியொன்றும் நடக்கவில்லை. ஆனால், அப்படி நடந்தாலும் தவறில்லை. காங்கிரஸ் கட்சியை வளர்க்க கட்டிடங்கள் கட்டுவது கடமை. இதனை பெரிதுபடுத்துவது வேடிக்கையாக உள்ளது.

’பா.ஜ.க 30 கோடி இடத்தை 3 கோடிக்கு மிரட்டி வாங்கிவிட்டது’ என்று எதன் அடிப்படையில் சொன்னீர்கள்?

முக்தா சீனிவாசன் கட்சியில் மிக முக்கியமான தலைவர். இடையில் ஒரு திரைப்படம் எடுத்து நொடிந்துவிட்டார். அந்த நேரத்தில் அவருக்கு பண உதவி தேவைப்பட்டது. அதனை, பா.ஜ.க நன்றாக பயன்படுத்திக்கொண்டு 30 கோடி மதிப்புள்ள சொத்தை 3 கோடிக்கு எழுதி வாங்கிக்கொண்டது. ஒருவர் கஷ்டத்தில் நொடிந்து போயிருக்கும்போது, அவருடைய சொத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கிறது பா.ஜ.க. இதனையே, முக்தா சீனிவாசன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எங்கள் மீதான பொய் குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை.

கர்நாடகா, மத்திய பிரதேசம், தற்போது ராஜஸ்தானில் பிரச்சனை என்று ஆளும் மாநிலங்களை காங்கிரஸ் இழந்து வருகிறதே?

பா.ஜ.க அதிகாரத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால் 30 கோடிவரை கொடுக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஆட்சியை சீர்குலைக்க முயற்சிக்கும்போது தற்காலிக வெற்றி கிடைக்கிறது. ஆனால், அது நிரந்தரமல்ல. ’எங்கள் செயல்திறன் வேறு: புதிய பாதை’ என்பவர்கள் மோசமான கரடு முரடான பாதைகளில் செல்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்துவது என்பது வெட்கக்கேடானது.

ஆனால், காங்கிரஸ் தனது கட்சியை வலிமைப்படுத்த தவறிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

அரசியல் விமர்சகர்கள் 90 சதவீதம்பேர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள். நேரடியாக சப்போர்ட் செய்தால் அங்கீகாரம் கிடைக்காது என்பதற்காக நடுநிலையாளர்கள் வேடம் போடுகிறார்கள். உண்மையான அரசியல் விமர்சகர்கள் 10 சதவீதம் பேர் நேர்மையோடு பேசுகிறார்கள்.

ஒரு மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்தால் பரவாயில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்தால் காங்கிரஸ் தனது கட்சியை சரிப்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம்?

கட்சி சரியாகத்தான் உள்ளது. பணத்தையும் அதிகாரத்தையும் காட்டுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் சாதாரண நிலையிலிருந்து வந்து கலக்கமடைந்து பணத்திற்கு விலைப்போகிறார்கள். நாம் என்னதான் வடிக்கட்டிப் போட்டாலும், அதைப் போன்ற ஆட்கள் வந்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால், கொள்கைகளோடு இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாமே?

இந்தியாவில் காங்கிரஸ் கட்சிபோல் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சி எதுவும் கிடையாது. எல்லா இடங்களிலும் கருப்பு ஆடுகள் இருப்பது இயல்புதான்.

ராகுல் காந்தி இளைஞர்களை விரும்பக்கூடியத் தலைவராக இருக்கும்போது ஜோதிராத்ய சிந்தியா – சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்களுக்கு முதல்வர் பொறுப்பை கொடுத்திருக்கலாமே? என்னத் தயக்கம்?

தயக்கமெல்லாம் இல்லை. இளைஞர்கள், அவர்கள் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியது கடமை. கட்சிக்காக உழைத்த சீனியர்களையெல்லாம் தூக்கியெறியச் சொல்கிறீகளா? நான் பத்து ஆண்டுகள் உழைத்திருக்கிறேன் என்று முதல்வர் பதவி கேட்கிறார்கள். கட்சிக்காக 20 வருடம் உழைத்தவர்களுக்கு என்ன பதவி கொடுப்பது? சச்சின் பைலட் இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால், 70 வயது ஆனவர்கள்கூட கட்சியில், இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை. அதேபோல, சிந்தியாவும் உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார். அவரின் குடும்பம் முப்பாட்டனார் காலத்திலிருந்தே இப்படித்தான் இருந்தது. அவர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் போட்டுக் கொடுத்துக்கொண்டும் செயல்பட்டவர்கள். அந்தக் குடும்பத்திற்கே இந்தமாதிரி பழக்கங்கள் உண்டு. அது  ரத்தத்திலேயே வந்த விஷயம்.

நீங்கள் காங்கிரஸ் தலைவரான பிறகு கோஷ்டி பூசலை அதிகம் பார்க்க முடிவதில்லையே?

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் என பலரின் தலைமையில் நான் பணியாற்றியிருக்கிறேன். இவர்கள் அனைவருடனும் அன்பாகவும் நட்பாகவும் இருக்கிறேன். எங்கள் கட்சியில் கருத்து வேறுபாடுகள் வரும்போது நான் வெளியில் சொல்வதில்லை. கடந்த காலத்தில் உடனுக்குடன் வெளியில் வந்துவிடும். ஆனால், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்போதுதான் ஜனநாயகத்தன்மை நிலைக்கும். நான் எதையும் வெளியில் சொல்வது கிடையாது. அதேபோல, அவர்களும் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்கிறார்கள்.

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை எதிர்கட்சிகள் இப்போது கையில் எடுத்திருப்பது சட்டமன்றத் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று பா.ஜ.க கூறுகிறதே?

தேர்தல் எல்லா நேரத்திலும்தான் வருகிறது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரவில்லை. பா.ஜ.க வந்தபிறகுதான் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது.

அதேபோல, கந்தசஷ்டி கவசம் பிரச்சனையையும் சொல்லப்படுகிறதே?

காங்கிரஸ் கட்சி ஒரு மதசார்பற்றக் கட்சி. ஆனால், நாங்கள் நாத்திகர்கள் அல்ல. கடவுள் நம்பிக்கையை நாம்தான் வைத்துக் கொள்ளவேண்டும். யாரிடமும் திணிக்கக்கூடாது. ’இந்தியாவை இந்து நாடாக அறிவிப்பீர்களா?’ என்று காந்தியிடம் கேட்டபோது, ’எனக்கு மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உண்டு. ஆனால், அதனை எனது அரசு திணிக்கக்கூடாது. பொதுவானதாக  எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடியதாக இருக்கவேண்டும்’ என்றார். இந்தியாவிற்கு உலகத்திலேயே மதசார்பற்ற நாடு என்ற வார்த்தையை முதன்முறையாக கொடுத்தார். அவரின், பாதையில் எங்கள் கட்சியை எடுத்துச் செல்கிறோம். அண்ணாவும் ’ஒன்றே குலம்: ஒருவனே தேவன்’ என்றார். தி.மு.கவில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்: இல்லாதவர்கள் என இரு தரப்பினரும் இருக்கிறார்கள். திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று கொண்டுவர பா.ஜ.க முயற்சிக்கிறது. நாங்கள் இந்து மதத்தில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்யத்தான் நினைக்கிறோம். நம் வீட்டைத்தானே முதலில் சுத்தம் செய்யவேண்டும்?  மற்ற மதங்களை ஏன் சொல்வதில்லை என்கிறார்கள், பலர். அடுத்தவர் வீட்டை சென்று சுத்தம் செய்ய முடியாது. நம் வீட்டைத்தான் முதலில் சுத்தம் செய்யச் சொல்கிறோம். இந்து மதத்தில் இருக்கும் சாதிகளை ஒழிக்கச் சொல்கிறோம். அது தவறானதா? கோயில்களில் எல்லோரையும் செல்ல அனுமதி கேட்பதும் தவறானதா?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் என்ன?

கொரோனா சூழலில் இ பாஸ் எடுத்துவிட்டு 5000 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறேன். சாத்தான்குளம் பென்னிக்ஸ் குடும்பத்தை சந்தித்து 10 லட்சம் நிதியுதவியை எங்கள் கட்சி சார்பாக கொடுத்தோம். விவசாய பிரச்சனைகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்தது, வேலூரில் முதல் சிப்பாய் புரட்சியின் நினைவிடம் சென்று மலரஞ்சலி வைத்தது, பெங்களூரில் எங்கள் கட்சியின் மாநிலத்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்விற்கு சென்று வந்தது என்று கட்சியை வளர்க்கும் பயணத்திலேயே இருந்தேன். எங்கள் கூட்டணி மிகச்சிறப்பாக செயல்படுகிறது. நிச்சயம் வெற்றி பெறுவோம்.   

பா.ஜ.கவில் நடிகர்களாக சேர்கிறார்களே? ஏன் காங்கிரஸில் சேரவில்லை?

நாங்களாக யாரையும் இழுக்க முடியாது. அது குற்றம். பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் நடிகர்கள் சேர்கிறார்கள். தேவைக்காக போய் சேர்கிறார்கள். கொள்கைக்காக சேர்ந்திருந்தால் எப்போதேயல்லவா சேர்ந்திருப்பார்கள்?

ப.சிதம்பரத்திலிருந்து பெரிய தலைவர்கள் இருக்கும்போது நேரு குடும்பத்திருந்தே ஏன் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேடுகிறீர்கள்?

நாங்கள் நினைக்கவில்லை. தொண்டர்கள்தான் யார் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ராகுல் காந்தியை ஏராளமான தொண்டர்கள் விரும்புகிறார்கள். நேரு குடும்பத்திலிருந்து வருவதில் என்ன தவறு உள்ளது. ஜவகர்லால் நேரு சிறையில் இருந்திருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் அரசியலுக்காகத்தான் உயிரிழந்தார்கள். ஏன் மற்றக் குடும்பங்கள் உயிரை விடவில்லை? இந்த கேள்விகளை ஏன் கேட்பதில்லை. அந்தத் தியாகத்திற்கு மக்கள் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். தலைமை என்பது மக்கள் ஏற்றுக்கொள்பவர்களிடம்தான் போகும். ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் போகாது.

உடல்நிலை அடிக்கடி சரியில்லாத சூழலில் சோனியா காந்தியிடமே பொறுப்புகளை அடுக்குவது சுமையாகிவிடாதா?

அதில் ஒன்றும் தவறில்லை. கட்சி ஒரு கூட்டுப் பொறுப்பில் நடைபெறுகிறது. நிறைய பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். மலேஷியாவில் ஜனாதிபதியின் வயது 89 ஆகிறது. அன்னை சோனியா காந்தியாவை விட வயதானவர், அவர். அதேபோல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் உலகிலேயே வல்லரசு நாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரும் வயதானவர்தான். அன்னை சோனியா காந்தி உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்.

ராகுல் காந்தி மெலிந்து காணப்படுகிறாரே?

கடுமையாக உழைக்கிறார். இளைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மசமசன்னு இருந்தால்தான் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் என்று அர்த்தம்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com