கொரோனா கால மாணவர் நலன் 12: ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள்... வெளிவராதது ஏன்?

கொரோனா கால மாணவர் நலன் 12: ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள்... வெளிவராதது ஏன்?
கொரோனா கால மாணவர் நலன் 12: ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள்... வெளிவராதது ஏன்?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 43,000 போக்சோ குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, கிட்டத்தட்ட ஒவ்வொரு 12 நிமிடத்துக்கு ஒரு குற்றம் என்ற விகிதத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் புகார், காவல்துறையில் பதிவாகிறது. ஆனால் பதிவு செய்யப்படும் புகார்களைவிடவும் - பதிவுசெய்யப்படாத புகார்கள்தான் அதிகம் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். குறிப்பாக, ஆண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், மிக மிக குறைவாகவே வெளிச்சத்துக்கு வருகிறது எனச் சொல்கின்றார்கள். இதுகுறித்தே இந்த அத்தியாயத்தில் தெளிவாகப் பார்க்கப் போகிறோம்.

'ஆண் குழந்தைகள் இதுகுறித்து பேசுவது குறைவாக உள்ளது' எனும் செயற்பாட்டாளுடைய கூற்றின் நம்பகத்தன்மையை அறிய, சமீபத்திய இந்திய தரவுகள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தோம். ஆனால், ஆண் குழந்தைகள் மத்தியிலான பாலியல் துன்புறுத்தல்கள் எந்தளவுக்கு நிகழ்கிறது என்பதற்கு, நம்மிடையே விரிவான தரவே இல்லை. இருந்தால்தானே அவர்கள் பேசுகிறார்களா இல்லையா என்பதே தெரியவரும் என்ற நிலை உள்ளது. இருப்பினும், இரண்டு பழைய தகவல்கள் கிடைத்தன. அவை இங்கே:

கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, யுனிசெஃப் மற்றும் ப்ரயாஸ் (Prayas) ஆகியவற்றின் உதவியுடன் வெளியிட்டிருந்த ஒரு தரவு: அன்றைய நிலவரப்படி, 53% குழந்தைகள், தங்கள் வாழ்வில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர். அவர்களில் சரிபாதி பேர் ஆண் குழந்தைகள். இதன் வழியாக, 'பெண் குழந்தைகளுக்கு இருப்பது போலவே தான், இந்த சமூகம் ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற இடமாக இருக்கிறது' என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு, துளிர் என்ற 'குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் மற்றும் மீட்கும்' அமைப்பொன்று சென்னையை சேர்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மாநகர பள்ளிகளில் செய்த ஆய்வு: 48% ஆண் குழந்தைகள்; 39% பெண் குழந்தைகள் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை / துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறினர். இந்த ஆய்வின் முடிவுக் கட்டுரையில், 'துளிர்' அமைப்பு கூறிய விஷயம்: 'இந்தச் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் - துன்புறுத்தல்கள் நடப்பதில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறது. அதை அந்த குழந்தைகளிடையே பெற்றோர் வழியாகவோ, குடும்பத்தின் உதவியுடனோ இந்தச் சமூகம் ஆபத்தான முறையில் கற்பிக்கவும் செய்கிறது.'

துளிர் இந்தக் கருத்தை சொல்லி, 15 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், இன்றளவும் ஆண் குழந்தைகளுக்கு மத்தியிலான முன்னேற்றம் மிக மிக குறைவாகவே உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம், இன்றளவும் ஆண் குழந்தைகள் 'என்னிடம் இந்த நபர் தவறாக நடந்துகொண்டார்' என தனக்கு நம்பிக்கைக்குரிய நபரிடம் சொல்வது மிக மிக அரிதாகவே உள்ளது. ஒப்பீட்டளவில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் மிக குறைந்த இடமே தரப்பட்டுள்ளது. பல நேரங்களில், ஆண் குழந்தைகளுக்கு தங்களுக்கு நேர்ந்தது பாலியல் துன்புறுத்தல்தான் என்பதே தெரிவதில்லை என்பதும், அதனால்தான் அவர்கள் அதுபற்றி பேசவும் முன்வருவதில்லை என்பதும், நாம் இங்கே கவனிக்க வேண்டியது.

பொதுவாக, ஆண் குழந்தைகளுக்கு இந்திய கலாசார வீடுகளில் பேச்சுரிமை என்றுமே மறுக்கப்படுவதில்லை. பெண் பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படும் 'அமைதியா பேசு - அடக்க ஒடுக்கமா இரு - யாரிடமும் அதிகம் சிரித்து பேசாதே' போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகள் தொடங்கி, 'முன் பின் தெரியாத நபர்களுடன் வெளியே தனியாக போகாதே' என்பது போன்ற அத்தியாவசிய கற்பிதங்கள் வரை, ஆண் குழந்தைகளுக்கு இந்தியாவில் சொல்லப்படுவது மிக மிக குறைவுதான். அதிலும் பதின்ம வயது ஆண் பிள்ளைகளுக்கு, பெரும்பாலான வீடுகளில் இப்படியான கற்பிதங்கள் மிக மிக குறைவு.

இந்த இடத்தில் கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டு வாழும் ஒரு ஆண் குழந்தையை, சுதந்திரமாக வாழ்கிறான் என்று நாம் நினைக்க முடியாது. மாறாக, 'புரிதலின்றி வளர்க்கப்படுகிறான்' என்றே புரிந்துக்கொள்ள வேண்டும். "சொல்லப்போனால் ஆண் குழந்தைகள் பதின்ம வயதில் சமூகத்துடனும் ஒட்டமுடியாமல், குடும்பத்தோடும் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்" என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதனாலேயே புரிதல் ஏதும் இன்றி 'தனக்கு நிகழ்வது துன்புறுத்தல் / வன்கொடுமை' என தெரியாமல், அவர்கள் வளர்கின்றனர் / வளர்க்கப்படுகின்றனர் என்பதுதான் இங்கு வேதனைகுரிய விஷயம்.

குழந்தைகள் செயற்பாட்டளரான அனுஜா குப்தா என்பவர், தன்னுடைய ஒரு பேட்டியில், "குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது, நம்மை சுற்றி அமைதியாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய்தான். அது ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தலைமுறையிலும் நம்மை சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். இந்த சத்தமில்லா உயிர்க்கொல்லியை, தொடக்கத்திலேயே கிள்ளி எறிவது நம் கடமைதான். அதில் இப்போதுதான் ஓரளவு பெண் குழந்தைகளை நோக்கி நகர்ந்திருக்கிறோம். இனி, ஆண் குழந்தைகளையும் நோக்கி நகர வேண்டியுள்ளது.

குழந்தைகள் உளவியல் ஆலோசகர் ராஜவர்மன் ஜெய்சங்கர் நம்மிடையே இதுகுறித்து பேசுகையில், "ஆண் குழந்தைகளை நோக்கி பாலியல் கல்வியை முறையாக கொண்டு சென்றாலேவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களை நம்மால் எளிதாக கையாள முடியும். இதை நான் சொல்கையில், 'எனில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தரப்படுகிறதா' என்று சிலர் நினைக்கலாம். உண்மையில், ஒப்பீட்டளவில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி ஓரளவு நன்றாகவே சென்று சேர்கின்றது. ஏனெனில் உடல் ரீதியான வெளிப்படையான நிறைய மாற்றங்கள் அவர்களின் வயதுக்கேற்ப வந்துவிடும் என்பதால், பெரும்பாலான அம்மாக்கள் தாமாக முன் வந்து அந்தரங்க விஷயங்களை, பாலியல் தொடர்பான மிக அடிப்படையான சில விஷயங்களை (மாதவிடாய் ஏற்படுவது - பெண் உடலில் கர்ப்பப்பையின் பணி - மார்பக வளர்ச்சி உள்ளிட்டவை) 6 - 7 வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க தொடங்கி விடுகின்றார்கள். வயது ஏற ஏற பெண் குழந்தைகள் மீதான அம்மாக்களின் கவனமும் அதிகரிக்கிறது. சொல்லிக்கொடுப்பதும் ஓரளவு அதிகமாகிறது.

ஆனால் ஆண் குழந்தைகளுக்கு, பருவமடைதல் என்பது வெளிப்படையான எந்தவித பெரிய மாறுதலும் இல்லாமல் நிகழும் ஒரு விஷயம். பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு, அவர்கள் டீனேஜுக்குள் நுழையும்போதுதான் பருவமடைதல் தொடங்கி, உடலில் மாற்றங்கள் நிகழும் (8, 9 வயதில் நிகழாது). அப்போதும் அதைப்பற்றி பேசும் அளவுக்கு அவர்களுக்கு குடும்பத்தில் இடம் தரப்படுவதில்லை. அங்கிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ஆண் பருவமடைதல் குறித்து ஆண் குழந்தைகளிடம் பேசுவது ஏன் முக்கியம் என்பது பற்றியும், என்னவெல்லாம் பேச வேண்டும் என்பது பற்றியும் பேசினார் மருத்துவர்.

"ஆண் பருவமடைதல் பற்றிய அறிவு, குடும்பங்களில் மிக மிக குறைவு. இந்த விஷயத்தில், அம்மாக்களை விடவும் மகன்களிடத்தில் பருவமடைதல் குறித்து அப்பாக்கள் பேச வேண்டுமென்பதே நான் சொல்ல விரும்பும் விஷயம். ஏனெனில் அவர்தான் சூழல் உணர்ந்து, விஷயத்தை சரியாக புரியவைப்பார். எப்படி ஒரு அம்மா தன் மகளிடம் 'நாப்கின் உபயோகிப்பது எப்படி?' என்று கற்றுக்கொடுத்தால் சரியாக இருக்குமோ... அப்படி ஒரு அப்பாதான் மகனுக்கு 'உன்னையறியாமல் விந்து வெளியேறுதல் இயல்பான விஷயம்தான்' என்றும் கூறுவதும் சரியாக இருக்கும். ஒருவேளை அப்பா இல்லையென்றாலும்கூட, வேறு ஏதேனும் நம்பிக்கைக்குரிய ஒரு ஆணோ அல்லது ஏதேனுமொரு மருத்துவரோ அந்த சிறுவனிடத்தில் அறிவியல் ரீதியாக 'இது நீ ஆண் என்பதால், உன் உடலில் நிகழும் ஒரு சிறு மாற்றம்; இதேபோல பெண் குழந்தைகளுக்கும் நிகழும். இது இயற்கைதான் என்பதால், நீ பயப்பட வேண்டியதில்லை' என்று புரிய வைப்பது நல்லது. ஒருவேளை அம்மாவிடம்தான் மகன் சற்று ஆரோக்கியமான உறவில் இருக்கிறார் - அம்மா சொன்னால்தான் நிதானமாக செவிகொடுத்து கேட்பார் என்றால், அம்மாக்களே 'மகன் பருவமடைதல்' குறித்து, கற்று தெரிந்துக்கொண்டு அதை சொல்வது நல்லது.

ஆண் பருவமடைதல் என்பது, மிகப்பெரிய டாபிக் என்றாலும்கூட, அடிப்படையாக - தவிர்க்க கூடாத சில விஷயங்கள் அதிலுள்ளது. அவை, அவர்களின் 'குரல் மாறுதல் - பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைதல் - ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் வியர்வை மற்றும் நாற்றம் - தூக்கத்தில் அவர்களே அறியாமல் விந்து வெளியாகுதல் - அது சார்ந்த கனவுகள் வருதல் - தாடி, மீசை போன்றவை வளர்தல் - அதிக கோபமோ / எரிச்சலோ / கூச்சமோ படுதல் - வெட்கப்படுதல் - அதிகமாக தனிமையை விரும்புதல்' இவையெல்லாம் ஆண் குழந்தைகளுக்கு அவர்களின் பதின்ம வயதில் கட்டாயம் கற்பிக்கவேண்டியவை.

இவற்றுடன், எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு 'பதின்ம வயதில் மற்றொரு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான் என்று சொல்லிக்கொடுப்பதும் முக்கியம். ஈர்ப்பு என்பது, ஹார்மோன் மாற்றங்களால் தற்காலிகமாக ஏற்படும் ஒரு உணர்வு மட்டுமே' என்ற புரிதலை அம்மாக்களோ அப்பாக்களோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பெரும்பாலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள், எதிர்பாலின ஈர்ப்பாளர்கள் என தான் எந்த வகையை சேர்ந்தவன்/ள் என்பதையெல்லாம் குழந்தைகள் பதின்மவயதில்தான் கற்பார்கள் என்பதால், அவர்களுக்கு 'ஈர்ப்பு இயல்புதான். அதில் வீழ்ந்துவிட வேண்டாம்' என்ற புரிதலை தெளிவாக கொடுக்கவும்.

அதேபோல பல குழந்தைகள் இந்த வயதில் சுய இன்பம் செய்ய முயல்வர். அப்படியான குழந்தைகளிடம், வன்முறையை பதிலாக காட்டாமல் 'இதுபோன்ற எண்ணங்கள் இந்த வயதில் வருவது இயல்புதான். ஆனால் அடிக்கடி இந்த செயலில் ஈடுபடாதே' என்று சொல்லவும். இந்த விஷயத்தில், பல பெற்றோர்களுக்கு போதிய புரிந்துணர்வு இருப்பதில்லை என்பதால், சுய இன்பம் காணும் பிள்ளைகளின் பெற்றோர்கள், அவர்களை மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் அழைத்து செல்வது நல்லது. மருத்துவர், பெற்றோர் - குழந்தைகள் என இருவருக்குமே புரிந்துணர்வை நேர்த்தியாக தருவார். இதுபோன்ற விஷயங்களில், மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.

பதின்ம வயதிலுள்ள ஒரு சில ஆண் குழந்தைகள், உடலுறவு குறித்து பேசுகையில், அதுபற்றி அதிகமாக சிந்திக்கவும் வாய்ப்புண்டு என்பது மறுப்பதற்கில்லை. அதுபோன்ற நேரத்தில், அவர்கள் அதை செய்து பார்க்கவும் நினைக்கும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய, 'பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் நோய்த்தொற்று' அபாயங்களை அவர்களுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கு முன்னதாக 'பாதுகாப்பான உடலுறவு' என்றால் என்ன என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் எனும்பட்சத்தில், 'வளரிளம் பருவத்தில் குழந்தை பெற்றெடுப்பதால், உடலில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்' என்பதையும் சேர்த்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கான மேற்கூறிய பாடங்களையெல்லாம் அவர்களுக்கு சொல்லித்தருவதால் என்ன பயன் என்றால், இவற்றையெல்லாம் சொல்வதன் மூலம், சுய இன்பம் என்பதை தாண்டி, உடலுறவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது இந்த வயதுக்கானதில்லை என்ற புரிதல் அவர்களுக்கு வரும். மட்டுமன்றி, தன் உடல் மீது தாங்களே ப்ரைவசியை செலுத்த தொடங்குவார்கள் அவர்கள். ஆகவே, தங்களிடம் மற்றொரு நபர் தவறாக உரிமை எடுத்துக்கொண்டு தன்னை தொடுகின்றார் என்கையில், அந்த தவறான தொடுதலை அவர்கள் உணர்வார்கள். எந்தச் சூழலிலும் தன்னுடன் உடலுறுவில் ஈடுபட விரும்பும் / மிரட்டும் நபரை அவர்கள் எதிர்த்து நிற்பர். குரல் கொடுப்பர். அதன்மூலம், அவர்களுடைய குரலும் எழும்பும். ஆண் குழந்தைகள் மீது நிகழும் பாலியல் அத்துமீறல்கள், அவர்களின் அறியாமையை பயன்படுத்தியே இருக்கிறது. தவிர, சில நேரங்களில்தான் அவர்களின் ஒடுக்கப்பட்ட குரலை பயன்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே அறியாமையை ஒழித்தாலேவும் நம்மால் அவர்களை மீட்க முடியும்.

பதின்ம வயதுக்கான (குறிப்பாக ஆண் பருவமடைதலின்போது) பாலியல் கல்வி எப்படி அமையவேண்டும் என்று மட்டுமே இங்கு நான் கூறியுள்ளேன். ஏனெனில், பருவமடைதலுக்கு முன்பான காலத்தில் ஆண் - பெண் என இருதரப்பு குழந்தைகளுக்கும் ஒரேமாதிரியான பாலியல் கல்விதான் தேவைப்படும். அதில் வேற்றுமை ஏதுமில்லை" என்றார் மருத்துவர் ராஜவர்மன் ஜெய்சங்கர்.

பெண் குழந்தைகளுக்கு நிகழ்வதுபோலவே, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன என்பதை மனதிற்கொண்டு, அவர்களை நோக்கிய மேற்கூறிய செயல்பாடுகளை பெற்றோர்கள் தொடங்கவேண்டும். 'ஆனால், ஆண் குழந்தைகள் யாரும், இப்படி புகார் சொல்வதாக பெரிதாக செய்தியோ வழக்கோ தெரியவில்லையே' என்று சொல்லக்கூடாது. 'புகார் சொல்லக்கூட தெரியாத அளவுக்கு, அறியாமையில் இருக்கின்றார்கள் அவர்கள்' என்றே இதை நாம் பார்க்க வேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க சட்டம் எந்தளவுக்கு முக்கியமோ, அதேயளவுக்கு அதை எதிர்த்துக் கேட்கும் குழந்தைகளின் புரிதலும் முக்கியம். இந்தப் புரிதலென்பது, குழந்தைகளுக்கு (ஆணோ பெண்ணோ) பொதுச்சமூகத்திலுள்ள பெரியவர்கள் கொடுக்கும் தகவல்களை சார்ந்ததுதான். அந்தவகையில் பெரியவர்களாகிய நாம், ஆண் குழந்தைகளுக்கு எந்தவித புரிதலையும் தரவில்லை என்பதே உண்மை. வரும் காலத்திலாவது, அதை அவர்களுக்கு கொடுப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com