“அதிமுகவில் ஆதரவான அலை..?” - சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தால் என்ன நடக்கும்?-ஓர் அலசல்

“அதிமுகவில் ஆதரவான அலை..?” - சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தால் என்ன நடக்கும்?-ஓர் அலசல்

“அதிமுகவில் ஆதரவான அலை..?” - சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணத்தால் என்ன நடக்கும்?-ஓர் அலசல்
Published on

தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் சசிகலா, அரசியல்ரீதியாக அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுதான். சமீபத்திய சசிகலா குறித்த ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு பிறகு ஒட்டுமொத்தமாகவே அதிமுக தொண்டர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இச்சூழலில் சசிகலாவின் சுற்றுப்பயணம் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி பார்க்கலாம்…

ஆரவாரமாக சிறையிலிருந்து திரும்பிய பின்னர், அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று  எதிர்பார்க்கப்பட்ட சசிகலா அமைதியாகிப்போனார்.  சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வெற்றி பெறவைக்கவேண்டும் என்பதற்காக தான் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அவர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால், மீண்டும் தனது ஆட்டத்தை ஆடியோ மூலமாக தொடங்கினார். பல அதிமுக, அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேசி அவர் எடுத்த ஆடியோ அஸ்திரம் ஓரளவு பலனையும் கொடுத்தது. ஆனாலும் இபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆடியோவில் பேசியவர்களின் நீக்கம் படலமும் உடனடியாகவே நடந்து முடிந்தது.

பொன்விழா ஆண்டில் வெடித்த பூகம்பம்:

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ஆல் 1972 இல் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவுக்கு இது பொன்விழா ஆண்டு, இதனை கொண்டாட அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டது, இந்த சூழலில்தான் தனது புதிய அதிரடியை தொடங்கினார் சசிகலா. அக்டோபர் 16 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், பொன்விழா ஆண்டு தொடங்கும் 17 ஆம் தேதி ராமவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் கொடியேற்றியதுடன், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “ நீர் அடித்து நீர் விலகாது – பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவேண்டும்” என்று தெரிவித்தார். ஆனால் , அதற்பின்னரும்கூட இபிஎஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சசிகலா மீது காட்டமான விமர்சனத்தையே முன்வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான், சில நாட்களுக்கு முன்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “ சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை நிர்வாகக்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார். ஓபிஎஸ்ஸின் பேச்சு தமிழக அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக பல அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது, இந்த சூழலில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தையும் தொடங்கியுள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் கட்சி பலம்பெறும் என்று அனைத்து தரப்பு அதிமுக தொண்டர்களிடம் மனநிலை உருவாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். வரப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற அனைவரையும் ஒருங்கிணைப்பதே அவசியம் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

சசிகலா வந்தால்தான் வெற்றிபெறலாம் என்பதே தொண்டர்கள் மனநிலை:

சசிகலாவின் சுற்றுப்பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பேசும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், “ ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் தோல்வியில் துவண்டு போயிருந்த அதிமுக தொண்டர்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் திக்குத்தெரியாத நிலையில் உள்ளனர். பொன்விழா ஆண்டு கொண்டாட வேண்டிய இப்போதும்கூட கட்சி இபிஎஸ் –ஓபிஎஸ் – சசிகலா என மூன்று பிரிவாக பிரிந்துகிடப்பது குறித்து அவர்கள் கவலையில் உள்ளனர்.

இபிஎஸ்ஸின் கீழ் இருப்பதை விடவும், சசிகலாவுடன் இணக்கமாக செல்லலாம் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவந்தால் தங்கள் இருப்பு ஆபத்து வந்துவிடும் என்று எடப்பாடி குழுவினர் நினைக்கின்றனர், அதனால் இபிஎஸ் தொடர்ச்சியாக சசிகலா வேண்டாம் என்கிறார். ஆனால், ஒபிஎஸ் தற்போது சசிகலாவை இணைப்பதில் ஆதரவான சைகையை காட்டியுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கு அதிமுகவினரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை. அதிமுக தொண்டர்களின் நோக்கம் என்பது அதிமுக வெல்லவேண்டும், இரட்டை இலை வெல்லவேண்டும் என்பதுதான். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர், கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாகவும் இதுதான் உள்ளது.

கடந்த சில தேர்தல்களின் தோல்வி மூலமாக அதிமுகவுக்கு வெற்றியை கொண்டுவரும் ஆளுமைத்தன்மை ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரிடமுமே இல்லை என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள். கட்சி அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றியை பெறவேண்டும் என்றால்  தேர்தல் வெற்றி குறித்த அனுபவமுள்ள சசிகலா வந்தால்தான் நல்லது என்றும் விரும்புகின்றனர். சசிகலாவை இணைத்தால் அதிமுக – அமமுக இணைந்து பலம் வாய்ந்த கட்சியாக மாறும் என்பது உண்மை, இதனையெல்லாம் அடிமட்ட தொண்டர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்.  எனவே சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் என்பது நிச்சயமாக அதிமுகவில் தாக்கத்தை உருவாக்கும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான அலை உருவாகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. அதற்கு அச்சாரம் இடுவதாக இந்த சுற்றுபயணம்” எனத் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com