சிக்கிமில் பிளாஸ்டிக் பாட்டில், கேன் குடிநீருக்கு தடை: சூழலியலுக்கு உகந்த முன்னுதாரணமா?

சிக்கிமில் பிளாஸ்டிக் பாட்டில், கேன் குடிநீருக்கு தடை: சூழலியலுக்கு உகந்த முன்னுதாரணமா?
சிக்கிமில் பிளாஸ்டிக் பாட்டில், கேன் குடிநீருக்கு தடை: சூழலியலுக்கு உகந்த முன்னுதாரணமா?

பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கேன்களில் குடிநீர் விற்க வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் வகையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை குறித்த சாதக பாதகங்களை பார்ப்போம்.

உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பேசு பொருளாக உள்ளது. அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்பி வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருப்பதில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தியாவிலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருப்பது இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தான். மக்காத இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் நீர் நிலைகள் சீரழிவு, நிலத்தின் தன்மை மாறுபாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தான் சிக்கிம் மாநில அரசு அதிரடியான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அம்மாநில முதலமைச்சர் பிஎஸ்.தமாங் தங்கள் மாநிலத்தில் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கபடும் எனவும், இந்த தடை 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து சிக்கிம் வரக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களையும் முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இமய மலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இயற்கையாகவே நல்ல, சுத்தமான குடிநீர் கிடைப்பதால் மக்கள் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் மினரல் குடிநீரை விட இயற்கையாக கிடைக்கும் குடிநீர் சுகாதாரமானது எனவும் அவர் தெரிவித்தார். தண்ணீருக்கான தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு மாநிலத்தில் அனைத்து வளங்களும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தடை அமலுக்கு வர இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் மினரல் வாட்டர் நிறுவனங்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ள அனைத்து பாட்டில்களையும் காலி செய்து கொள்ள அறிவுறுத்தினார். சிக்கிம் அரசின் இந்த முடிவுக்கு சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்திய அளவில், பாட்டில்கள் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வர்த்தகம் எந்தஅளவுக்கு நடக்கிறது?

அடைக்கப்பட்ட குடிநீர் உலக அளவில் முறைசார்ந்த தொழிலாக உருவெடுத்திருக்கிறது. அடைக்கப்பட்ட குடிநீரின் வர்த்தகம் உலக அளவில் 20.26 லட்சம் கோடியாக இருந்தது. இந்த வணிகம் 2020ல், 22.11 லட்சம் கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை 25.79 லட்சம் கோடி இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி லிட்டர் அளவில் அடைக்கப்பட்ட நீரின் விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

2017ம் ஆண்டு தனி மனிதர், ஒரு ஆண்டில் அடைக்கப்பட்ட தண்ணீருக்குச் செலவிட்ட தொகை ரூ. 2,380

2021-ல் தனிமனிதர் அடைக்கப்பட்ட குடிநீருக்கென ஆண்டுக்கு ரூ. 3,338 செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் தண்ணீர் கேன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் குறித்து மருத்துவர் சபரிநாத் பேசுகையில், ''மாநகராட்சியிலிருந்து வரும் தண்ணீரை சற்று மாற்றி, டேஸ்ட்டுக்காக சில பொருட்களை சேர்த்து விளம்பரப்படுத்துவது தான் கேன் தண்ணீர். பொதுவாக குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தூய்மையான நீரை அசுத்தமாக மாற்றுவதும் நாம் தான். சுத்தமான தண்ணீர் என்பது என்ன.. மழையிலிருந்து நமக்கு வரும் நீர் ஆறுகளில் கலந்து ஓடுகிறது. சுத்தமான தண்ணீரான அதில் எல்லா மினரல்ஸ்களும் தேவைக்கு ஏற்ப இருக்கிறது.

இயற்கையே நமக்கு தேவையான சுத்தமான நீரைத்தருகிறது. அதை சூடுபடுத்தி குடித்தால் போதுமானது. ஆனால் டேஸ்ட் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு வகையில் உருமாற்றி நல்ல தண்ணீர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று மூளைக்கு பழக்கப்படுத்தி விடுகிறோம். இதனால் மழை நீரை குடிக்கும்போது அதையே சந்தேகப்படுகிறோம். இந்த தண்ணீர் சரியில்லையே என்று. இது ஒரு விளம்பர யுக்திதான்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com