மனிதர்களின் அமைதியை குலைக்கும் போரும், இயற்கை சீற்றங்களும்: இன்று உலக அமைதி நாள்!

மனிதர்களின் அமைதியை குலைக்கும் போரும், இயற்கை சீற்றங்களும்: இன்று உலக அமைதி நாள்!
மனிதர்களின் அமைதியை குலைக்கும் போரும், இயற்கை சீற்றங்களும்: இன்று உலக அமைதி நாள்!

எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற “அமைதியான வாழ்வு” வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி, “உலக அமைதி நாளாக” ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

1961ம் ஆண்டும் ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவு கூறும் விதமாக செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடித்து வந்தது. பின்னர், 2002ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினம் என்று ஐக்கிய நாடுகள் சபை கடைபிடித்து வருகிறது.

போர், பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய் நெருக்கடிகள்,பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு என உலகமெங்கும் வாழும் மக்கள் அன்றாடம் அமைதியற்ற சூழலில் வாழும் நிலையில் உலக அமைதி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள், காற்று - நீர் மாசுபாடு, அபரிமிதமான இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியை தொலைத்துள்ளன. ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் பலவும் இப்போதும்கூட வறுமை காரணமாக அமைதியை தொலைத்து உழல்கின்றன.

உள்நாட்டு போரால் அமைதியை தொலைத்த நாடுகள்:

உள்நாட்டு போரால் அமைதியை தொலைத்த நாடுகளுக்கு சமீபத்திய உதாரணமாக ஆப்கானிஸ்தானை சொல்லலாம், அங்கு நடந்த உள்நாட்டு போர் காரணமாக சாமானிய மக்களின் அமைதி தொலைந்து போனது. மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அமைதியின்றி தவிக்கின்றனர். சிரியா, ஏமன், ஈரான், லிபியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் தொடர்ச்சியாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றன, இதில் பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பின் தாக்கமும் உள்ளது.

எத்தியோப்பியா, கினியா, தெற்கு சூடான், சோமாலியா, காங்கோ, நைஜீரியா, கொலம்பியா, புருண்டி உள்ளிட்ட பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டு போர், வறுமை காரணமாக பல ஆண்டுகளாகவே மக்கள் அமைதியை தொலைத்து வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை போன்ற சில ஆசிய நாடுகளிலும் இப்போதும் உள்நாட்டு சிக்கல்கள் புகைந்துகொண்டேதான் இருக்கின்றன. சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் உள்நாட்டு சூழல்கள் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளன. உலகில் மக்களின் அமைதியை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது போர்கள்தான். எனவே போரற்ற, உள்நாட்டு மோதல்களற்ற வாழ்வுதான் மக்களுக்கான அமைதிக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

அமைதியை கெடுக்கும் இயற்கை சீற்றங்கள், காலநிலை மாற்றங்கள்:

போர்களைவிடவும் மக்களை அதிகம் கொல்லும் ஆபத்தாக தற்போது இயற்கை சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு வரலாறு காணாத சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்ததன் காரணமாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதுபோலவே துருக்கி, கனடா, இத்தாலி, வட அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த ஆண்டு காட்டுத்தீ கோரதாண்டவம் ஆடியது. மேலும் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளின் ஏற்பட்ட பெருவெள்ளமும் மக்களின் அமைதியை சூரையாடியது. சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் சில பகுதிகளிலும் கடும் வெள்ளபாதிப்புகள் மக்களின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இப்படி உலகமெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் “ உலக அமைதி” என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்கான உன்னத தேவையாகிறது என்பதே உண்மை.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com