வதந்திகளின் கூடாராமா சமூக வலைதளங்கள்? - பாதிப்புகளும் காரணங்களும் என்ன?

வதந்திகளின் கூடாராமா சமூக வலைதளங்கள்? - பாதிப்புகளும் காரணங்களும் என்ன?
வதந்திகளின் கூடாராமா சமூக வலைதளங்கள்? - பாதிப்புகளும் காரணங்களும் என்ன?

சமூக ஊடகங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பொய்ச் செய்திகள் சுதந்திரமாக பரப்பப்படுவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மத மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டவர்களால்தான் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததாக ஒரு சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானது. இதை எதிர்த்தும் பொய்ச் செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

நாட்டில் நடக்கும் ஒவ்வொன்றையும் ஊடகங்களில் ஒரு பிரிவு மத ரீதியான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்றும் இது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது என்றும் நீதிபதிகள் கூறினர். சாதாரண மக்கள் புகார் தெரிவித்தால் அதுகுறித்து கவலைப்படாத சமூக ஊடகங்கள் அதிகாரத்தில் இருக்கும் சக்தி வாய்ந்தவர்களின் குரலுக்கு மட்டுமே மதிப்பளிக்கின்றன என்றும் கவலை தெரிவித்தனர்.

சமூக ஊடகங்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் பொய்ச் செய்திகளை பரப்பி வருவது கவலையளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள் இப்போதெல்லாம் எவ்வித பொறுப்புமின்றி நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக பொய்ச்செய்திகள் சுதந்திரமாக பரப்பப்படுகின்றன என்றனர். யூடியூப் சேனல்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்க முடிகிறது என்றும் சமூக ஊடகங்கள், பொய்ச் செய்திகளை பரப்பும் கருத்துக்களை தடுக்க எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் பரப்பினால் என்ன தண்டனை?

சமூக வலைதளங்களில் பொய்செய்திகளை வெளியிட்டால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் விதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.

சமூகவலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு66D மூலமாக நடவடிக்கை எடுக்க முடியும். வதந்தியை பரப்பி அதன்மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வதந்தியால் ஏற்படும் தாக்கத்துக்கான சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். உதாரணமாக, பூகம்பம், சுனாமி வரும் என வதந்தி பரப்பினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் தான் பொறுப்பு. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறை பரப்புவதன் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும். வன்முறைகளை தூண்டும் வகையில் தகவல் பரப்பினால் இந்திய தண்டனை சட்டம் 505இன் கீழ் நடவடிக்கையும், தவறான தகவல்களை பரப்புவோர் மீது அவதூறு வழக்குகளும் பதியப்படுகின்றன.

இது தொடர்பாக யூடியூபர் ஐயன் கார்த்திகேயன் பேசுகையில், ''அரசுக்கு ஆதரவான பொய் செய்திகள் குறித்து எந்தவித பிர்சனையும் வருவதில்லை. அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். தப்லீக் ஜமாத் வந்துதான் கொரோனா பரவியது என்கிறார்கள். மும்பை உயர்நீதிமன்றம் தெளிவாக, தப்லீக் ஜமாத்தை நீங்கள் பலியாடுகளாக பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று கூறியுள்ளது. அரசு பேரிடர்காலங்கள் வரும்போதெல்லாம் யாரை கைகாட்டுவது என யோசித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு கைகாட்டப்பட்டவர்கள் தப்லீக் ஜமாத் என நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

குறிப்பிட்ட மதத்தின் மீது அத்தனை பொய்கள் பரப்பியிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பரவுகிறது. தட்டுகளை தடவி சாப்பிட்டு கொரோனா பரப்புகிறார்கள் என தப்லீக் ஜமாத் மீது கடுமையான பொய்யான விமர்சனங்கள் வதந்திகளாக பரவின. இது போன்ற பொய் செய்திகளை தடுப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. அதிகாரத்தின் துணையுடன் வதந்தி செய்திகள் இருந்தால் அதை வளரவிடுவது, சாமானியனாக இருந்தால் தண்டிப்பது, வெறுப்பையும், பொய்யையும் பரப்ப பெரும் செலவு செய்கிறார்கள். அப்பாவி மக்கள் இதை நம்பிவிடுகிறார்கள். குறிபிட்ட மதங்கள் மீது வெறுப்பை எளிதாக உண்டாக்கிவிடுகிறார்கள். இதை பலரும் பரப்புவதால் அந்த வதந்தியை தொடங்கியவரின் எண்ணம் நிறைவடைந்துவிடுகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com