ஆர்வத்தை தூண்டி போதைக்கு இணையாக மாறும் ஆன்லைன் கேம்கள்.. பாதிப்புகள் என்ன? - அலசல்

ஆர்வத்தை தூண்டி போதைக்கு இணையாக மாறும் ஆன்லைன் கேம்கள்.. பாதிப்புகள் என்ன? - அலசல்
ஆர்வத்தை தூண்டி போதைக்கு இணையாக மாறும் ஆன்லைன் கேம்கள்.. பாதிப்புகள் என்ன? - அலசல்

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட வேண்டும் என்ற விதிமுறை இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் வீடியோ கேம்ஸ்களால் ஏறபடும் பாதிப்புகள் குறித்து பார்ப்போம். 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். இது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக சீன அரசு முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி 18 வயதுக்குட்பட்டோர் ஒரு வாரத்திற்கு 3 மணி நேரத்திற்கு மேல் ஆன்லைனில் விளையாடக் கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளது. 18 வயதுக்கு கீழானோருக்கு ஆன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இந்த கட்டுப்பாட்டு விதியை பின்பற்ற வேண்டும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை மட்டும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சீனாவில் 11 கோடி சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் அவர்களை கட்டுப்படுத்த தினசரி ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாடலாம் என்ற விதி தற்போது அமலில் உள்ளது. அது இனி வாரத்திற்கு 3 மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது. சீனா கொண்டு வந்துள்ள கட்டுப்பாடு இந்தியாவில் எப்போது வரும் என்பது இங்குள்ள கோடிக்கணக்கான பெற்றோரின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக உள்ளது

இது தொடர்பாக சைபர் நிபுணர் ஹரிஹரசுதன் பேசுகையில், ''ஆன்லைன் கேமிங்கில் சீனா தான் நம்பர் 1ஆக உள்ளது. இந்த சூழலில் சீனாவில் புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளன. சீனா போன்ற நாடுகள் இந்த கட்டுபாடுகளை கடுமையாக பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்ப ரீதியாக 3 மணி நேரம் மட்டும் ஆன்லைனில் விளையாட அனுமதிப்பது சாத்தியம்தான். அவர்கள் ஆன்லைன் கேம் விளையாடுவதால் தான் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து 6 மணி நேரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மொபைல் போன்கள் குறித்து நம்மிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை'' என்கிறார்.

கல்வி மனநல ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் பேசுகையில், ''ஆன்லைன் வீடியோ கேம்களுக்கான பயன்பாடு ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே குழந்தைகள் கேம் விளையாடி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாவது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆற்றல் பயன்படுத்தபடவேண்டும். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதால்தான் கூடுகிறது. இப்போது அப்படியில்லை. அவர்களின் டோபோமைன் வீடியோ கேம்ஸின் மூலமாகத்தான் தேடுகிறது. அதனால் ஈர்க்கப்படுவதால் அதிலிருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. தொடர்ந்து கேம்விளையாடுவதால் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தும் மனநிலைக்கு அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள்.

குழந்தைகள் அதிக அளவில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசமாட்டார்கள். தனிமையை அதிக அளவில் விரும்புவார்கள். அவர்களின் கண்விழி நம்மை பார்த்து பேசாது. அங்கும் இங்குமாக பார்த்து பேசுவார்கள். இதெல்லாம் ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை. கேம்ஸ்களை பொறுத்தவரை அளவாக விளையாட முடியாது என்பது தான் உண்மை. இது ஒரு போதை பழக்கம்போல. அதைவிட மோசமானது. குழந்தைகளுக்கு ஆன்லைன்  கேம்ஸ்களை அறிமுகப்படுத்தாதீர்கள். அதிலிருந்து விடுபட முடியாமல் குழந்தைகள் தங்களைத்தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிடும்'' என்றார்.

குழந்தைகளால் ஆன்லைனில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகள் என்னென்ன?

சிறார்களால் அதிகம் விளையாடப்படும் ஆன்லைன் கேம்

பப்ஜி

டெம்பிள் ரன்

சப்வே சர்ஃபர்

போக்கிமான் கோ

கேண்டி க்ரஷ்

காயின் மாஸ்டர்

லூடோ கிங்

கால் ஆஃப் ட்யூட்டி

க்ளேஷ் ஆஃப் க்ளேன்ஸ்

கார்/பைக் ரேஸ்

சாகச விளையாட்டுகள், க்ரைம், ஃபேன்டசி விளையாட்டுகள் அதிகம் விளையாடப்படுகின்றன. ஆர்வத்தைத் தூண்டி அடிமையாக்கும் வகையில் விளையாட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. இலவசமாக பதிவிறக்கம் செய்யும் விளையாட்டுகளில் சில நிலைகள் வரை மட்டுமே கட்டணமின்றி விளையாட முடியும். விளையாட தேவையான கூடுதல் அம்சங்களைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு கிரெடிட் கார்ட் தகவல்கள் இணைக்கப்பட வேண்டும். ஒருமுறை இணைத்துவிட்டால், மறுமுறை நம்மை கேட்காமலேயே நம் பணம் பறிபோகும் அபாயம் உள்ளது. ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறார்கள், பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தீமையான எண்ணங்களுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள். அது பெரும் சிக்கல்களை அவர்களது வாழ்வில் கொண்டுவந்துவிடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com