”திமுகவில் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தவருக்கு வழங்கலாமே?” – வி.பி துரைசாமி பேட்டி!

”திமுகவில் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தவருக்கு வழங்கலாமே?” – வி.பி துரைசாமி பேட்டி!
”திமுகவில் பொதுச்செயலாளர் பதவி பட்டியலினத்தவருக்கு வழங்கலாமே?” – வி.பி துரைசாமி பேட்டி!

தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்குப்பிறகு, அப்பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துரைமுருகன் வகித்துவந்த பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு பதிவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

        தி.மு.க பொதுக்குழு வரும் 9 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், தி.மு.கவில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமீபத்தில், பா.ஜ.கவில் இணைந்த தி.மு.கவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவருமான வி.பி துரைசாமியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நிதானமாக பேச ஆரம்பித்தார்.

தி.மு.கவின் பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலு வேட்புமனு தாக்கல் செய்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது திமுகவின் உட்கட்சி விவகாரம். யாருக்கு வேண்டுமென்றாலும் பதவி வழங்க, அவர்களின் குடும்பத்தினருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவுக்கு அல்ல. எனவே, நான் அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால், பொருளாளர் பதவிக்கு உள்ளுக்குள் போட்டாப்போட்டி நடப்பது அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும். பதவியை எதிர்ப்பார்த்து காத்திருப்பவர்களுக்கு, இந்த முடிவு பெரிய ஏமாற்றத்தையே தரும். மனத்தளர்ச்சியைக் கொடுக்கும். அதனால், அவர்கள் தேர்தலில் முழு மூச்சாக செயல்பட வாய்ப்பு இல்லை. அதேசமயம், திமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அப்படிக் கொடுத்தால் என்னைவிட மகிழ்ச்சியடைபவன் யாரும் இருக்க முடியாது. இப்பதவிகளை அடைவதற்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களிலேயே தகுதியும் திறமையும் கொண்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், திமுக கொடுக்காது. அங்கு சாதிக்கொரு நீதிதான்.

உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம். ஒரு உறுப்பினரை திமுகவில் இருந்து விலக்கினால் உரிய நோட்டிஸ் கொடுத்து நீக்கவேண்டும் என்பது திமுகவின் சட்டதிட்ட விதிகளில் தெளிவாக இருந்தும்கூட, எனக்கு அதுபோன்ற நோட்டிஸ்கூட அனுப்பவில்லை. அனுப்பத் தேவையில்லை என்பதை சொல்வதற்காக ஒருவர் அங்கேயே அமர்ந்திருக்கிறார். அது யாரென்று அவருக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். இயற்கையான நீதிகூட என்னிடம் கடைபிடிக்கவில்லை. இப்படியிருக்கும் ஒரு தலைமை பட்டியலினத்தவர்களை மதிப்பார்களா? பாஜகவில் மாநிலத் தலைவர் பதவியை பட்டியலினத்தவர்களுக்கு வழங்கும்போது, பொதுச்செயலாளர் பதவியை பட்டியலினத்தவருக்கு திமுக வழங்கலாமே?

தமிழக பா.ஜ.கவின் முதல் பட்டியலினத் தலைவர் டாக்டர் கிருபாநிதி

ஆனால், தமிழக பாஜகவின் முதல் பட்டியலினத் தலைவரான டாக்டர் கிருபாநிதி தன்னை இல.கணேசன் அடித்துவிட்டதாக கூறினாரே? பாஜகவில் பட்டியலினத்தவர்களுக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு மதிப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக இருக்கிறதே?

என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. பாஜகவை பிடிக்காதவர்கள் பாஜக தமிழகத்தில் வளரக்கூடாது என்று பரப்புகிற ஒரு பொய் செய்தி. இல.கணேசன் ஒரு மூத்த தலைவர். அவர் அதுபோன்ற காரியத்தில் எப்போதும் ஈடுபடமாட்டார். வார்த்தைகளைக்கூட பக்குவமாகவும் நாகரீகமாகவும் பேசுவதில் வல்லமைப் பெற்றவர். எனவே, இதுக் கட்டுக்கதை. பட்டியலின மக்களை உண்மையிலேயே மதிக்கின்ற கட்சி பாஜகதான். வேண்டுமென்றால் கமலாலயத்தில் வந்துப் பாருங்கள்.  எத்தனை பட்டியலின மக்கள் வருகிறார்கள் என்பது தெரியும். மதிக்கவேதானே வருகிறார்கள்?

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை பாஜகவில் இணைந்தவுடனேயே ’உங்களுக்கு இணையாக’ மாநிலத் துணைத்தலைவர் பதவி கொடுத்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

அண்ணாமலை ஒரு மிகச்சிறந்த அறிவாளி என்பதை யு.பி.எஸ்.சி கமிஷனே ஏற்றுக்கொண்டு, அவருக்கு பதவி வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகால அவருடைய அனுபவ அறிவு கட்சியின் வளர்ச்சிகு பயன்படும் என்ற நம்பிக்கையில் மாநிலத் தலைவர் எல்.முருகன் அந்தப் பதவியை வழங்கியிருக்கிறார். அவரைப் பற்றியும் பாஜகவைப் பற்றியும் சமூக வலைதளங்களில் ஊடகங்களில் தொடர்ச்சியாக எழுதுவது, இக்கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது நிதர்சனமாக கண்களுக்குத் தெரிகிறது. அண்ணாமலைக்கு உடனடியாக துணைத்தலைவர் பதவிக் கொடுத்ததில் எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது. ஒரு இளைஞருக்கு துணைத்தலைவர் கொடுத்திருப்பதில் நான் 100 சதவீத மகிழ்ச்சியை அடைகிறேன்.

கு.க செல்வத்தை நீங்கள்தான் திமுகவில் இருந்து பிரித்ததாக சொல்லப்படுகிறதே?

நான் அவரைக் கூட்டிக்கொண்டு வரவில்லை. பாஜகவின் கொள்கை கோட்பாடு சாதனைகளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டுள்ளார். நான் எந்த சிறப்பு ஏற்பாடும் செய்து அழைத்து வரவில்லை. ஆனால், கு.க செல்வம் எனக்கு நீண்டகால நண்பர். அந்த வகையில் ஒருமித்தக் கருத்து இருக்கலாமே தவிர, நான் அழைத்து வருவதாக கூறுவது சரியான கருத்து அல்ல.

அப்படியென்றால், அவர் ஏன் இன்னும் பாஜகவில் சேரவில்லை?

அதில், சட்டசிக்கல் இருக்கிறது.  வெளிப்படையாக சொல்ல முடியாது.

தி.மு.கவில் மூத்த தலைவர்கள் ஒதுக்கபடுவதாக கு.க செல்வம் கூறியிருக்கிறாரே?

திமுகவில் கூடவுள்ள பொதுக்குழு முடிந்தபிறகு இதற்கு பதில் தெரியும். பதவி  கிடைக்காதவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் தெரியும்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமயில்தான் கூட்டணி என்றீர்களே? இப்போதும், அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

ஆளுக்கொரு கருத்துச் சொல்லி அமைப்பு குலைந்துவிடக்கூடாது. தேர்தல் நேரத்தில் எங்கள் தலைவர் முடிவு எடுப்பார். நான் அப்போது சொன்னேன். இப்போது மாற்றிகொண்டேன்.

பா.ஜ.கவில் இணைந்து நான்கு மாதங்கள் ஆகிறதே? செயல்பாடுகள் எப்படி போகின்றன?

பாஜக கண்ணியமான கெளரவமான கட்சி. வயதுக்கேற்ற மதிப்பு, மரியாதை, அன்பு, உழைப்பு, தியாகம் ஆகியவை நான் முன்னாள் இருந்த திமுகவில் இல்லாததால், அவை அத்தனையும் இங்குக் கிடைக்கிறது. இது கொரோனா காலம் என்பதால் வெளியூர் கூட்டங்களுக்கு நாங்கள் செல்ல முடியவில்லை. பாஜக தமிழகத்தில் முன்பை விட வளர்ந்திருக்கிறது. தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அது விமர்சனம் ஆனாலும் சரி வேடிக்கையாக பேசினாலும் சரி அரசியலில் வளர்ச்சியாக உள்ளது. விமர்சனம் என்பதே வளர்ச்சிக்குண்டான வழிவகைதான். கட்சித் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், மற்றும் தொண்டர்கள் அத்தனைப் பேரும் பாஜகவின் வளர்ச்சிக்காக அவரவர்கள் சக்திக்கேற்ப உழைக்கிறோம்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com