வெண்புள்ளி எனும் நிறக்குறைபாடு... தவறான புரிதல்களும் சரியான பார்வையும்!
உலக வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தினம் இன்று (ஜூன் 25). வெண்புள்ளிகள் (Vitiligo) பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த விழிப்புணர்வை, இக்கட்டுரை இன்று இங்கு உங்களுக்கு வழங்கக்கூடும்.
வெண்புள்ளியை, ஒரு தொற்று வியாதியாகவே நம்மில் பலரும் புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. “இது நிச்சயம் தொற்றுநோய் இல்லை. மேலும், தொடக்க நிலையில் மருத்துவரை ஆலோசித்தால், இதற்கு நிச்சயம் நல்ல தீர்வு காணலாம்" என்கிறார் தோல் நோய் நிபுணர் ஷரதா. வெண்புள்ளிகள் குறித்து, அவரிடம் விரிவாக பேசினோம்.
"தோலுக்கு நிறத்தை கொடுக்கும், மெலனின் என்ற நிறமி, குறைவதுதான், வெண்புள்ளி ஏற்படுவதன் பின்னணியிலுள்ள அடிப்படை அறிவியில காரணம். உடலில் எந்தப் பகுதியிலெல்லாம் மெலனில் குறைகிறதோ, அங்கெல்லாம் பாதிப்பு தெரியவரும். ஆகவே இதுவொரு, நிறமிக்குறைபாடுதான். இந்த மெலனின் குறைபாடு ஏற்பட பல காரணம் இருக்கும். ஒருசிலருக்கு குடும்ப வழியில் மரபு காரணமாகவும் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு, வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்து குறைபாடு (அ) சர்க்கரை – தைராய்டு குறைபாடுகள் (அ) தீவிர முற்றிய நிலையிலான ரத்தசோகை போன்றவற்றால் ஏற்படலாம்.
காரணத்தை பொறுத்து, சிகிச்சை அளிக்கப்படும். மரபு காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவோர், தீர்வு காணும் விகிதம், குறைவாக இருக்கும். இருந்தாலும், மேற்கொண்டு பாதிப்பு தீவிரமாகாமல் இருக்க, சிகிச்சைகள் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு தீர்வு காண்பது, கொஞ்சம் சுலபமாக இருக்கும்.
எதுவாக இருப்பினும் 30 – 40 % பரவிவிட்டால்தான், தீர்வு காண்பதில் சிக்கல் அதிகம். புரிதலின்மையால், பலரும் தாமதமாக வருகின்றனர்.
குழந்தை முதல் பெரியவர் வரை, யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய சாதாரண பாதிப்புதான் இது. மக்கள் இதுபற்றி அச்சப்படாமல் இருப்பதே, முக்கியம். ஒருசிலர், பாதிப்பு வந்தவுடன் இதை குணப்படுத்தவே முடியாது என நினைக்கிறார்கள். அப்படியல்ல. தொடக்கத்தில் அணுகினால், மருந்து – தெரபி மூலம் இதை சரிசெய்யலாம்.
உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், இந்த வெண்புள்ளி ஏற்படலாம். கை, கால், முகம், உதடு தொடங்கி மார்பகம், பிறப்புறுப்பு, நெஞ்சுப்பகுதி என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எங்கு ஏற்படுகிறதோ, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். பெரும்பாலும், ஸ்டீராய்டு மாத்திரைகள் மூலமாகவே குணப்படுத்திவிடுவோம். ஸ்டீராய்டு அற்ற மருந்துகளும் இப்போது வழக்கத்திலுள்ளது. அதுவும் தரப்படும். மற்றபடி, தேவைக்கேற்ப தோல் சார்ந்த அறுவைசிகிச்சை, போட்டோ தெரபி போன்ற சிகிச்சைகள் தரப்படும்” எனக் கூறினார் அவர்.
இந்திய வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த திருவள்ளூர் பகுதி செயலாளர் நளினி பாபு இதுபற்றி பேசுகையில், “இதுபற்றி நிறைய தவறான புரிதல்கள் மக்கள் மத்தியில் உள்ளன. குறிப்பாக, மாணவர்களிடம் அதிகமாக உள்ளன. இதை அருவருக்கத்தக்க வகையில் பார்க்கும் பழக்கம், சில மாணவர்களுக்கு இருக்கிறது. இதையெல்லாம் போக்க, நாங்கள் மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு எங்கள் இயக்கம் சார்பில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோவை, தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ளார். 2023 ம் ஆண்டுக்குள், இந்தியாவில் வெண்புள்ளிகள் பற்றிய அதிக விழிப்புணர்வுமிக்க மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டுமென்பதே, எங்கள் இயக்கத்தின் நோக்கம்” என்றார்.
இவரின் கணவர் கண்ணன் ராமசாமி பேசுகையில், “வெண்புள்ளி ஏற்படுத்தும் மிகப்பெரிய தடை, திருமண தடைதான். அதை ஒழிக்க எண்ணி இந்திய வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினர், வெண்புள்ளி உள்ளோருக்கு சுயம்வர முறையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அங்குதான், நான் என் மனைவியை பார்த்தேன். வெண்புள்ளி இல்லாத நான், வெண்புள்ளி இருக்கும் அவரை திருமணம் செய்துகொண்டு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறோம். வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல. ஆகவே, தயவுசெய்து யாரும் அதுபற்றிய தவறான புரிதலோடு ஒருவரை அணுக வேண்டாமென நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இது ஒரு நிறமி குறைபாடு, அவ்வளவே. இதை, நோயென்றே சொல்லக்கூடாது. இதற்கென சில சிகிச்சைகள் உண்டு. குணப்படுத்த முடியாதென்றாலும், இதை கட்டுப்படுத்தலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு, இது புரியும். என் வேண்டுகோளெல்லாம், ‘இதற்கு சம்பந்தமில்லாத நபர்கள், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவரை ஏளனமாகவோ தொடக்கூடாத நபராகவோ பார்க்காமல் இருங்கள். இது அவரவர் வாழ்வு. உங்களின் புரிதலின்மையால் வெளிப்படும் அருவருப்பான பார்வையும் வார்த்தையும், அவர்களின் வாழ்வை சிதைத்துவிடும் ஆபத்து கொண்டது. அப்படி மற்றவர் வாழ்வக் சிதைக்கும் தவறை செய்யாதிருங்கள்’ என்பதுதான். ஏனெனில், வெண்புள்ளி பாதிப்பு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை விட, மனதில்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.
இதுபற்றிய மருத்துவ விழிப்புணர்வை குறவாக உள்ளது” என்றார் அவர்.
இனியாவது, வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டம் விலக வேண்டும்.