”உயிருள்ளவரை இந்த சேவை தொடரும்” - 70 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவில் தொண்டாற்றி வரும் விசிறி தாத்தா!

"மண்ணில் என் உடல் போகும் வரை இந்த சேவையை நான் செய்வேன். மக்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக இருக்க, மக்களுக்கும் சேவை செய்வேன் பகவானுக்கும் சேவை செய்வேன்".
விசிறி தாத்தா
விசிறி தாத்தாPT

பக்தர்களின் பக்தியானது பலவகைப்படும். ஒருவரின் பக்தி போல் மற்றொருவரின் பக்தியானது இருக்காது. ஒவ்வொருவரின் பக்தியும் சிறப்பு வாய்ந்ததே. அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களில் ஒருவர் தான் விசிறி தாத்தா. அடியாருக்கு அடியேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் கூறியதைப்போல் பக்தர்களுக்கு பக்தனாகி 70 வருடமாக சிவத்தொண்டாற்றி வருகிறார் 90 வயதை கடந்த முதியவர் ஒருவர்.

70 ஆண்டுகளாக சித்திரைத்திருவிழாவில் பக்தர்களை விசிறி வீசி ஆசீர்வதிக்கும் நடராஜன் எனும் 90 வயதான விசிறி தாத்தா.

சித்திரை திருவிழா என்றாலே மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரருக்கு அடுத்து மதுரைக்காரர்களுக்கு நன்கு அறிந்த பெயர் விசிறி தாத்தா. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பவர் விசிறி தாத்தா.

கோவிலுக்கு வரும் மக்கள் கோடை வெயிலில் தவிக்கும்போது தன்னுடைய விசிறியால் மக்களின் மனதையும் உடலையும் குளிர்விப்பவர் தான் இந்த விசிறி தாத்தா.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக செல்கிற எல்லோரும், விசிறி தாத்தா நடராஜனை பார்த்திருப்பார்கள். புதிதாக செல்பவர்கள், அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.

சாமி தரிசனத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வியர்த்துக் கொட்டும் நேரத்திலும் கூட்டம் அதிகமாகும்போது புழுக்கத்தால் மூச்சுவிடக் கூட முடியாமல் பக்தர்கள் தவிக்கும்போதும் அவர்கள் அருகே சென்று விசிறி தாத்தா நடராஜன், தன் கையில் பிடித்திருக்கும் மயில்தோகை விசிறியால் அவர்களை விசிறிக் குளிர்விப்பார். அதற்காக சன்மானம் எதுவும் அவர் கேட்கமாட்டார்.

ஒரு புன்னகையுடன் அவர்களைக் கடந்து சென்று அடுத்தடுத்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இப்படி விசிறிக் கொண்டே இருப்பார்.

மதுரை மீனாட்சிம்மனுக்காக இந்த சேவையை 70 ஆண்டுகளாக இந்த விசிறி வீசும் சேவையை நடராஜன் எனும் விசிறி தாத்தா செய்து வருகிறார்.

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளதால், முதல்நாளான இன்று வியர்க்க விறுவிறுக்க நின்ற பக்தர்கள் மீது விசிறி வீசி குளிர்வித்து ஆசீர்வாதம் செய்தார்.

1941ல் இருந்து தற்போது வரைவிசிறி வீசி சேவை செய்வதாகவும், தனக்கு 93 வயதுக்கு மேல் ஆவதாகவும், சித்திரை திருவிழா தொடங்கி உள்ளதால் விசிறி தாத்தா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு,

“மண்ணில் என் உடல் போகும் வரை இந்த சேவையை நான் செய்வேன். மக்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக இருக்க, மக்களுக்கும் சேவை செய்வேன் பகவானுக்கும் சேவை செய்வேன். இங்கு வரும் பக்தர்களுக்கு நான் மிகவும் பரிச்சயம். எல்லொரும் விரிசி தாத்தா வரவில்லையா? என்று கேட்பார்கள். இந்த உடலில் உயிர் உள்ள வரையில் எனது இந்த சேவையானது தொடரும்” என்று கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com