சினிமாவில் வில்லன்: நிஜத்தில் ஹீரோ...சோனு சூட்டின் கொடையுள்ளத்திற்கு காரணம் இதுதானாம்..!

சினிமாவில் வில்லன்: நிஜத்தில் ஹீரோ...சோனு சூட்டின் கொடையுள்ளத்திற்கு காரணம் இதுதானாம்..!
சினிமாவில் வில்லன்: நிஜத்தில் ஹீரோ...சோனு சூட்டின் கொடையுள்ளத்திற்கு காரணம் இதுதானாம்..!

ரஜினியின் சந்திரமுகி, அருந்ததி, தபாங் போன்ற எண்ணற்ற தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட் இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மொழி மக்களுக்கும் கொரோனா பேரிடரில் உதவிசெய்து ’ரியல் ஹீரோ’ என்று பாராட்டப்படுகிறார். இன்று அவரின் பிறந்தநாள்.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால், இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் நடந்தே சொந்த ஊரை நோக்கி படையெடுக்கத் தொடங்கினார். இதனைக் கண்ட நடிகர் சோனு சூட், கடந்த நான்கு மாதங்களாக புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் மகத்தான சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

 பாலிவுட் மற்றும் கோலிவுட் சூப்பர் ஹீரோக்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான்கான், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் என ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர்தான், இன்று நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக புகழப்படுகிறார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தனிப்பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு, கேரளாவில் சிக்கியிருந்த ஆயத்த ஆடைத் தொழிலாளர்களான 147 பெண்களும் 20 ஆண்களும்  தங்கள் மாநிலமான ஒடிசாவிற்கு செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்து அவர்களின் விமானச்செலவுகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனாவால் கிர்கிஸ்தான் நாட்டில் மாட்டிக்கொண்ட 135 இந்தியர்களுக்கு தனிவிமானம் ஏற்பாடு தனது சொந்த செலவில் இந்தியா அழைத்துவந்தார். தற்போது மும்பையில் வசித்தாலும் பஞ்சாபை சேர்ந்த சோனு சூட்டை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் முதற்கொண்டு பாராட்டி வருவதோடு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியும் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நேரில் அழைத்து பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சமீபத்தில் ஆந்திராவில் மகள்களை மாடுகள்போல்  கலப்பை பூட்டி உழவு செய்த ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, காய்கறி விற்றப் பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது, கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு ’பிரவாசி ரோஜ்கர்’ என்ற புதிய செயலியை உருவாக்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது என்று, சோனு சூட் சேவைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. இவர் குறித்த மதிப்பீடும் மக்கள் மனதில் உயர்ந்துகொண்டே செல்கிறது.

குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்காமல், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் களத்தில் 18 மணிநேரம்  உழைத்துக்கொண்டிருக்கும் சோனு சூட்  பேசும்போது,

”புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகள் பெற்றோருடன் சாலைகளில் நடப்பதை பார்த்ததுதான், என் வாழ்க்கையின் மிகவும் சோகமான காட்சிகள். தூக்கம் இல்லாத இரவுகளாக இருந்தது. வீட்டில் உட்கார்ந்துகொண்டு அதைப் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். நான் நாக்பூரில் படித்துக்கொண்டிருக்கும்போது முன்பதிவு இல்லாமல் பேருந்துகளிலும் ரயில்களும் பயணம் செய்திருக்கிறேன். என் அம்மா மாலையில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச டியூஷன் எடுப்பார். எனது அப்பா எங்கள் துணிக்கடைக்கு வெளியே ஏழைகளுக்கு இலவச உணவளித்தார். ‘நீங்கள் யாருக்கும் உதவ முடியாவிட்டால் உங்களை வெற்றிகரமாக கருதவேண்டாம்’ என்று என் அம்மா சொல்லி சொல்லியே எங்களை வளர்த்தார். ஆரம்பத்தில், மும்பையில் இருந்து கர்நாடகாவுக்கு 350 பேரை சொந்த ஊருக்குச்செல்ல பேருந்து வசதி செய்துகொடுத்து அனுப்பினேன். அது இப்போது 20 ஆயிரம் பேருக்கு மேலாக உயர்ந்துள்ளது. மேலும், மும்பையில் உள்ள எனது ஹோட்டலை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கவும் ஓய்வெடுத்துக்கொள்ளவும் இடம் கொடுத்துள்ளேன். புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவே, தற்போது  ஹெல்ப்லைன் எண் ஆரம்பித்திருக்கிறேன்.  ஊருக்குப்போய் சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி தங்கள் குழந்தைக்கு ’சோனு சூட் ஸ்ரீவாஸ்தவ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அது எனக்கு நெகிழ்ச்சியை கொடுத்தாலும் இதற்கெல்லாம் காரணம் எனது பெற்றோர் வளர்ப்புதான். அவர்கள் பாதையில்தான் நடப்பேன்.” என்று சொல்லும் சோனு சூட்  தனது தந்தையின் பெயரில்  ‘சக்தி சாகர் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தையும் மற்றும் தாயின் பெயரில் வறிய குழந்தைகளின் கல்விக்கும் நிதியளிக்கிறார். எல்லோரும் சோனுவை ஒரு பெரிய நடிகராக பார்க்கிறார்கள். ஆனால், அவர் புலம்பெயர்தொழிலாளர்களுடன் தரையில் இருக்கிறார். மேலும், அவர்

 ”உதவி கேட்கும் நபர்களிடமிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மெயில்கள் மற்றும் செய்திகளை எனது தொலைபேசியில் பெற்று வருகிறேன். நான் மும்பைக்கு ஒரு புலம்பெயர்ந்தவனாகத்தான் வந்தேன். அதனால், அவர்களின் வலி எனக்கு  புரியும். எல்லோரும் நகரங்களுக்கு ஒரு கனவுடன் வந்து குடும்பத்தை பெருமைப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால், அது இந்த கொரோனாவால் தடைபட்டுவிட்டது” என்கிறார்.

சோனுசூட் தங்கை மால்விகா பேசும்போது,

“ எனது அண்ணன் நாக்பூரில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தார். பஞ்சாபிலிருந்து நாக்பூர் செல்ல ரயிலில்தான் பயணம் செய்வார். அவர் ரயில் பெட்டிகளின் கழிவறைகளுக்கு அருகில் உள்ள காலியாக உள்ள இடங்களில் தரையில் தூங்கிக்கொண்டு வீடு திரும்புவார். எங்கள் அப்பா அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்தாலும் அதனை இல்லாதவர்களுக்கு கொடுத்துவிடுவார். உதவும் குணம் என்பது அவருக்கு இப்போது ஏற்பட்டதில்லை. சிறு வயதிலிருந்தே இருந்து வருகிறது. மும்பையில் தனது மாடலிங் வாழ்க்கையை தொடங்கும்போது, ஒரு அங்குலம் இடம்கூட இல்லாத சிறிய அறைகளில் வாழ்ந்துதான் இந்நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார். அதனாலேயே, புலம் பெயர்ந்தோர்களின் கண்ணீரையும், அவர்கள் வீடு போய்சேரவேண்டும் என்ற ஏக்கத்தையும் புரிந்துகொண்டு உதவி வருகிறார். எனது அப்பா சக்தி சாகர் சூட் ஒரு துணிக்கடை நடத்தி வந்தார். அதில், 15 பேர் பணிபுரிந்தார்கள். அவர்களின் மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு என்று அனைத்து உதவிகளும் செய்தார். அம்மா சரோஜ் பாலா சூட் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக வேலைபார்த்தார். கல்விக்கட்டணம் என்று வரும் ஏழைகளுக்கு எப்போதும் அவர் உதவ தவறியதில்லை. அந்தக்குணம் எனது அண்ணனிடம் உள்ளதில் பெருமையாக உள்ளது. ஆனால், இதனைக் காண எனது பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை. அப்பாவின் நினைவாக நடத்திவந்த  துணிக்கடையை இப்போதும் நடத்தி வருகிறோம். ஆனால், அவர்களின் கடின உழைப்பை எப்போதும் மறக்காமல் இருப்பவர் எனது அண்ணன்.

அவர் ரயிலில் தரையில் படுத்து வந்ததையெல்லாம் எங்களுடன் பகிந்துகொண்டதில்லை. அவரது முதல்படம் வெளியானபோதுதான் பகிர்ந்துகொண்டார். எனது அக்கா மோனிகா சர்மா அமெரிக்காவில் இருக்கிறார். அவரும் இப்போது பெருமையடைந்துள்ளார். கடந்த ஆண்டு அண்ணன் பஞ்சாபிலுள்ள எங்கள் பூர்வீகமான மோகாவுக்கு வந்தபோது ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நூற்றுக்கணக்கான சைக்கிள்களை கொடுத்தார்.  ஊரடங்கு ஆரம்பித்தவுடன் ஏழைகளுக்கு முதலில் உணவுதான் அண்ணன் அளித்து வந்தார். அப்போது, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி அழுதுகொண்டே இருந்தார். என்னவென்று கேட்டபோது ’உணவை விட எங்கள் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும். நடக்கவிருக்கிறோம்’ என்றார். மும்பையில் இருந்து கர்நாடகா 550 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அவ்வளவு தூரம் எப்படி நடப்பார்கள்? ’இரண்டு நாட்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றுக்கூறி உதவிகளை செய்ய ஆரம்பித்தார். அதுவும் அண்ணனை கடுமையாக பாதித்தது. இரண்டு நாட்கள் கழித்து கர்நாடகாவில் அனுமதி வாங்கிக்கொண்டு பேருந்தின் முன் தேங்காயை உடைத்து அவர்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார் ” என்கிறார்.

நடிகரும் தயாரிப்பாளருமான சோனு சூட் 1973 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் ஜூலை 30 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பையெல்லாம் அங்கேயே முடித்துவிட்டு நாக்பூரிலுள்ள யஷ்வந்த் ராவ் சவான் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். இவரது, தந்தை சக்தி சாகர் சூட் துணிக்கடை வைத்திருந்தார். மிடில் க்ளாஸ் குடும்பம்தான். நடிகராக இருந்தாலும் தனது பேருதவிகளால் இந்தியா முழுக்க அறியப்படும் சோனு சூட்டை முதன்முதலில் நடிகராக அறிமுகப்படுத்தியது நம் தமிழகம்தான். முதன் முதலில் நடிகராக விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படத்தில் 1999 ஆம் ஆண்டு அறிமுகமானவர், அடுத்ததாக விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் நடித்தார். அதன்பிறகுதான் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி என்று பல்வேறு மொழிப்படங்களில் நடித்துக் ஃபேமஸானார்.  பிரசாந்தின் மஜ்னு, சாகசம், ரித்திக் ரோஷனின் ஜோதா அக்பர், சிம்புவின் ஒஸ்தி, சல்மான்கானின் தபாங், தேவி-2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள சோனு சூட்டுக்கு இஷாந்த், அயன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சோனாலியும் சேவையுள்ளம் கொண்டவர்தான். கணவரின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com