இதனையும் கவனித்திருக்கலாமே! ‘விலங்கு’ தமிழ்சினிமா வெப்சீரிஸின் அழுத்தமான படைப்பு?

இதனையும் கவனித்திருக்கலாமே! ‘விலங்கு’ தமிழ்சினிமா வெப்சீரிஸின் அழுத்தமான படைப்பு?
இதனையும் கவனித்திருக்கலாமே! ‘விலங்கு’ தமிழ்சினிமா வெப்சீரிஸின் அழுத்தமான படைப்பு?

வெப்சீரிஸ் பார்மெட்களில் புகழ்பெற்றது க்ரைம் திரில்லர் பாணி தான். மற்ற கதைக்களங்களைக் காட்டிலும் சுவாரஸ்யத்தை அளிக்க கூடியது என்பதாலும், எல்லா தரப்பு மக்களையும் எளிதில் எட்டிபிடிக்கும் சூத்திரம் க்ரைம் திரில்லருக்கு உண்டு. நீண்ட நேரம் கொண்ட எபிசோடுகளை சோர்வடையவிடாமல், விறுவிறுப்பாக அடுத்த கட்டங்களுக்கு நகர்த்த க்ரைம் த்ரில்லர் வகை கதைக்களங்கள் பெரிய அளவில் கைகொடுக்கின்றன.

இந்திய அளவில் வெப்சீரிஸ்கள் அடுத்தடுத்த கட்டத்தை எட்டிவரும் நிலையில், தமிழ்சினிமா தற்போது தான் சிறிது சிறிதாக நடைபழகி வருகிறது. அந்த வகையில் ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது 'விலங்கு' வெப்சீரிஸ்.

திருச்சியின் புறநகரில் உள்ள வேம்பூர் காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் பரிதி (விமல்). டீகம்போஸான நிலையில் இருக்கும் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று காட்டுப்பகுதியில் இருப்பதாக எக்ஸ்ட்ரா ட்யூட்டியில் இருக்கும் பரிதிக்கு ஒரு போன்கால் வருகிறது. தனது டீமூடன் சமந்தபட்ட இடத்திற்கு செல்கிறார் பரிதி. திடீரென பிணத்தின் தலை காணாமல் போக, கொலை நடந்தது ஏன்? செய்தது யார்? என்பது மட்டுமில்லாமல், அந்த தலையை கண்டுபிடித்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் விமல் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே விலங்கு வெப்சீரிஸின் கதைக்களம்.

முதல் எபிசோட் முழுவதும் காவல்நிலையம், அதன் தினசரி செயல்பாடுகள், விமல் குடும்பம் என அறிமுகத்திலேயே செல்கிறது. முதல் எபிசோட்டின் இறுதியில் திரைக்கதை சூடுபிடிக்கிறது. ஆனால், அந்த விறுவிறுப்பு தொடர் முழுவதும் இல்லை என்பது தான் சிக்கல். நான்கே எபிசோட்களில் சுருங்க கூடிய திரைக்கதையை 7 எபிசோட்களாக இழுத்திருப்பது சோர்வைத்தருகிறது. மையக்கதையை பொறுத்தவரை சிறப்பாகவே வந்திருக்கிறது. ஆனால் பிரச்னை என்னவென்றால், மையக்கதையை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை எழுதியிருக்கும் விதம் ஈர்க்கவில்லை. கதாபாத்திர தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 'கிச்சா' கதாபாத்திர தேர்வு சிறப்பு.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்திற்கு பலமே புலனாய்வு செய்பவரின் உடல்மொழிதான். அது விமலுக்கு கைகூடவில்லை என்றே தோன்றுகிறது அல்லது அந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதத்தில் மேம்படுத்தியிருக்கலாம். அதற்காக நம்ப முடியாத ஸ்மார்ட் போலீசாகவும், துணிச்சலான, எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொண்டு தேடிக்கண்டறியும் போலீசாக இல்லாம் இருப்பது ஒரு ஆறுதல்.

ஒருபுறம் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், வேலைப்பளு, அழுத்தம் காரணமாக காவல்துறையினரின் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்பதையும் உண்ரத்தும் விதமாக 'வேலையாஇருகேன் பா", "வந்துறேன் பா' என விமல் சொல்லும்காட்சிகள் ஒருபுறமும், மற்றொருபுறம், காலில் சாக்கை கட்டி லட்டியில் அடிக்கும் காவல்துறையினரின் குரூரம் குறித்தும் காவல்துறையின் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் நெடுங்கிலும் லட்டிகளின் சத்தம் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பாலா சரவணனுக்கு நடிப்பதைக்காட்டிலும் அடிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது.

ஆனால், தனக்கான கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காமெடி நடிகராகவே அறியப்பட்ட பால சரவணன், கடுமையான காவலர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். பால சரவணனைபொறுத்தவரை அவர் புறம்பேசாத, மற்றவர்களை தப்பாக நினைக்காத நல்லவர். ஆனால், குற்றவாளிகளுக்கு லட்டி சார்ஜர். விமலின் கதாபாத்திரத்திற்கு எதிரானது பாலசரவணன் கதாபாத்திரம். அதிகாரம் அடிக்காது, அடித்தட்டு காவலர்களை ஏவி தான் நினைத்தை சாதிக்கும் என்பதை விமல் - பாலசரவணன் கதாபாத்திரத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

கொலைக்காரன் கதாபாத்திரத்தை எழுதிய விதம் ரசிக்க வைக்கிறது. அத்தனை கொலைகளையும் நிகழ்த்திட்டு அசால்ட்டாக நடந்துசெல்லும் காட்சி அப்லாஸ். கொலைக்கான காரணத்தை நியாயப்படுத்தாமல், அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பதை மட்டுமே காட்சிப்படுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருக்கும் ரவி மிரட்டியிருக்கிறார். மற்ற எல்லா கேரக்டர்களையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் மனுசன்.

அதேசமயம் திருச்சியைச்சுற்றியுள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவையும், சாதி ரீதியிலான பாகுபாடுகள் குறித்தும் பதிவிட்டிருப்பது எதார்த்தை நெருங்கும் முயற்சி. காவல் துறைக்குள் கூட 'உங்க ஆள்', 'அவங்க ஆள்' டயலாக்குகள் ஏராளம். சாதி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையும், மக்களைப் பாகுபடுத்துவதில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் படம் விவரிக்கிறது.

தனக்குள் மிருகத்தை மறைத்துவைத்திருக்கும் ஒருவனின் கைகளில் மாட்டப்படுகிறது என்பதை குறிக்கிறது விலங்கு. எப்படியிருந்தாலும் விலங்கு ஒரு தமிழ்சினிமா வெப்சீரிஸின் அழுத்தமான படைப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com