கைகுலுக்கிய எதிரெதிர் துருவங்கள்! - விஜய் வசந்த் - பொன்.ராதாகிருஷ்ணன் பரஸ்பரம் வாழ்த்து

கைகுலுக்கிய எதிரெதிர் துருவங்கள்! - விஜய் வசந்த் - பொன்.ராதாகிருஷ்ணன் பரஸ்பரம் வாழ்த்து

கைகுலுக்கிய எதிரெதிர் துருவங்கள்! - விஜய் வசந்த் - பொன்.ராதாகிருஷ்ணன் பரஸ்பரம் வாழ்த்து
Published on

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எதிரெதிர் துருவங்களான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகர்கோவிலில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் இருவரும் நாகர்கோவிலில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அப்போது ஏற்கெனவே கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டனர்.

அரசியல் நாகரிகம் போற்றும் வகையில், விஜய் வசந்த் நேரடியாக அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அருகில் சென்று கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்வை நேரில் பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தேசிய கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி, மிக முக்கியமானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று, மறைந்த வசந்த குமாரிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மறைந்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் தற்போது பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து களம் காணவுள்ளார். ஒருபக்கம் மறைந்த எம்பி மீது மக்கள் கொண்டுள்ள அனுதாப அலை மற்றும் மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தி ஆகியவை விஜய் வசந்த்துக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். இன்னொரு பக்கம், மத்திய அரசின் சாதனைப் பட்டியல் மற்றும் கிடப்பில் கிடக்கும் மத்திய அரசின் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை ஆகியவை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக இருக்கிறது என்றும் கணிக்கப்படுகிறது.

- எஸ்.நவுபல் அகமது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com