டிசம்பருக்கு முன்னே மிக விரைவில் விடுதலை ஆவார் சின்னம்மா - முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்
சசிகலா விடுதலை தொடர்பாக அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேலிடம் பேசினோம்,
சின்னம்மா சிறையின் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு வெளியில் வருவார். அவர் வருகைக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஆச்சார்யா எதனால் அப்படி ட்விட் செய்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதன்பிறகு அவர் ஒன்றும் சொல்லவில்லையே?
பா.ஜ.க சசிகலாவை விடுதலைசெய்யவிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?
அதுமாதிரி எல்லாம் எதுவுமே கிடையாது. கர்நாடக மாநில முதல்வருக்கே கொரோனா வந்துள்ளது. அதனால், சின்னம்மாவின் விடுதலை கொரோனாவால் தடைப்பட்டுள்ளது. தண்டனைக்காலம் எல்லாம் விதிமுறைகளால் ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதால், சின்னம்மா விடுதலை ஆவதில் இனி பெரிய சிக்கல் இல்லை. அவர், எந்த நேரத்திலும் விடுதலை ஆகலாம். நன்னடைத்தை மற்றும் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள், கர்நாடகாவின் அரசு விடுமுறைகள், கர்நாடக மொழியைக் சின்னம்மா கற்றுக்கொண்டால் கொடுக்கப்படும் சலூகை போன்ற போன்றவற்றின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலேயே வெளிவந்திருக்கவேண்டும். விடுதலை ஆவதற்கு எப்போதே, தகுதியாகிவிட்டார். அது தாமதமாவதற்கு கொரோனாதான் காரணம். அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது. யாரும் சென்று பார்ப்பதுமட்டுமில்லை. கடிதம் மூலமாகத்தான் பேசுகிறோம். மிக விரைவில் வெளிவந்துவிடுவார்.
அப்படியென்றால், இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளிவருவாரா?
ஏன், டிசம்பர் வரை காத்திருக்கவேண்டும் என்கிறீர்கள்? 100 சதவீதம் டிசம்பருக்கு முன்னே வந்துவிடுவார். ஆனால், நான் சரியான மாதத்தை சொல்ல முடியாது. ஆசிர்வாதம் ஆச்சாரி மாதிரி சொல்லி தப்பாகப் போய்விடக்கூடாது. ஆனால், டிசம்பருக்கு முன்னரே விடுதலை உறுதி.
சசிகலா மீது குற்றம் சாட்டிய ரூபா ஐ.பி.எஸ் உள்துறைச் செயலாளர் ஆனதால், அவரது குற்றச்சாட்டால் இன்னும் சசிகலாவுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?
ஓய்வுபெற்ற நீதிபதி வினய் கமிஷன் முன்பு ரூபாவே ’சசிகலா வெளியில் சென்றதை பார்க்கவில்லை’ என்று கூறிவிட்டார். அவர் வாக்குமூலம் அந்தக் கமிஷனில் நிரூபணம் ஆகிவிட்டது. சின்னம்மா மீது, இப்போது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
பா.ஜ.க துலைமையில்தான் கூட்டணி என்று வி.பி துரைசாமி கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
வி.பி துரைசாமிக்கு அப்படி சொல்ல எந்த அதிகாரமும் கிடையாது. அதை, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா சொல்லவேண்டும். பா.ஜ.க ஒரு தேசியக்கட்சி. மாநிலத் தலைவர் முருகன் சொல்லவேண்டும். யாரோ போறவங்க, வர்றவங்கச் சொல்லக்கூடாது. தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் போட்டி என்பபே கிண்டலாக உள்ளது.
- வினி சர்பனா