மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி! கொல்கத்தா வெற்றி!

மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி! கொல்கத்தா வெற்றி!
மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வெங்கடேஷ் ஐயர் - திரிபாதி! கொல்கத்தா வெற்றி!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், “நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். முதல் போட்டியில் எங்களுக்கு சேஸிங் கைகொடுத்தது. அதே பார்முலாவை இங்கும் அப்ளை செய்ய விரும்புகிறோம்” என சொல்லி இருந்தார். 

ரோகித் - டிகாக் தொடக்கம்!

மும்பை அணியின் கேப்டன் நடப்பு சீசனின் இரண்டாவது பாதியில் தனது முதல் ஆட்டத்தில் விளையாட இந்த ஆட்டத்தின் மூலம் களம் இறங்கினார். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. டிகாக் அவருடன் களம் இறங்கினார். 

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பவர்பிளே ஓவர் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 56 ரன்களை எடுத்தது மும்பை அணி. 

ரோகித் 30 பந்துகளில் 33 ரன்களை எடுத்து சுனில் நரைன் சுழலில் சிக்கி ஆட்டத்தின் 56-வது பந்தில் அவுட்டானார். பத்து ஓவர்கள் முடிவில் ஒரே ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்திருந்தது மும்பை. அப்போதைய சூழலில் எப்படியும் 170 ரன்களுக்கு மேல் மும்பை ஸ்கோர் போர்டில் ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

டிகாக் அசத்தல்!

மும்பை அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிகாக் அசத்தலாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் எடுத்தார். ஐபிஎல் அரங்கில் அவர் எடுத்த 16-வது அரைசதமாக இது அமைந்தது. 

ஏமாற்றிய மும்பை பேட்ஸ்மேன்கள்!

சூரியகுமார் யாதவ் 10 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை மட்டுமே எடுத்து பிரசித் கிருஷ்ணா வேகத்தில் விக்கெட்டை இழந்தார். டிகாக்கையும் பிரசித் கிருஷ்ணா 55 ரன்களில் வெளியேற்றினார். 

பின்னர் பொல்லார்ட் கிரீசுக்கு வந்தார். மறுபக்கம் இஷான் கிஷன் இருந்தார். 15 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்திருந்தது மும்பை. 

கடைசி 5 ஓவர்களில் எப்போதுமே அதிரடியாக மும்பை அணி ரன்களை குவிக்கும். அது போல இந்த ஆட்டமும் அமைய நல்ல வாய்ப்பிருந்தது. டெத் ஓவர்களில் விளையாட பொல்லார்ட் இருந்தார். அவருக்கு துணையாக கிஷன், குர்ணால் பாண்ட்யா, சவுரப் திவாரி இருந்தனர். 

பந்தை சரியாக கனெக்ட் செய்யும் வீரர்கள் இருந்தும் கடைசி 30 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் 3 பவுண்டரி மட்டுமே மும்பை விளாசி இருந்தது. 

கிஷன் 14 ரன்களிலும், பொல்லார்ட் 21 ரங்களிலும் (ரன் அவுட்), பாண்ட்யா 12 ரன்களிலும் அவுட்டாகினர். மும்பை அணி கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்தது. முடிவில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. 

ஒரு பிளாஷ்பேக்!

நடப்பு சீசனில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியதில் மும்பை அணி வென்றிருந்தது. அந்த போட்டியில் இதே போல டாஸை வென்று பவுலிங் தேர்வு செய்திருந்தது கொல்கத்தா அணி. முதலில் பேட் செய்த மும்பை 152 ரன்களை எடுத்தது. 153 ரன்களை விரட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் வெறும் 142 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. ராகுல் சஹார் 4 விக்கெட்டுகளை வீழத்தியிருந்தார். அந்த போட்டியை விட இந்த போட்டியில் 4 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. நாடு, மைதானம், ஆடுகளம் என அனைத்தும் மாறினாலும் மும்பை அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. போல்ட், பும்ரா, பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா, ராகுல் சஹார் என மும்பை அணியின் ஆஸ்தான பவுலர்கள் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றிருந்தனர். அதனால் அந்த பிளாஷ்பேக்கை கொஞ்சம் ரீவைண்ட் செய்து மும்பை அணி ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையுடன் பந்து வீசி இருக்கக்கூடும். 

கொல்கத்தா சேஸிங்!

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. ஷூப்னம் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 17 பந்துகளில் இருவரும் இணைந்து 40 ரன்களை சேர்த்தனர். கில் 13 ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்தார் ராகுல் திரிபாதி. 

பயம் அறியா வெங்கடேஷ் ஐயர்!

25 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார் வெங்கடேஷ் ஐயர். அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களை அவர் விளாசி இருந்தார். போல்ட், மில்னே, பும்ரா என கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் பவுலர்களை பந்தாடி இருந்தார் வெங்கடேஷ் ஐயர். 30 பந்துகளில் 53 ரன்களை குவித்து அவுட்டானார் வெங்கடேஷ். 

ஆட்டத்தை திருப்பிய திரிபாதி!

வழக்கமாக ஒரு பேட்ஸ்மென் அடித்து ஆடினால் மறுபக்கம் விளையாடும் பேட்ஸ்மேன் அவருக்கு நல்ல கம்பெனி கொடுப்பார். ஆனால் வெங்கடேஷ் ஐயருடன் விளையாடிய திரிபாதியும் அதிரடியாக ஆட்டத்தை அணுகினார். 42 பந்துகளில் 74 ரன்களை குவித்தார் அவர். 8 பவுண்டரி, 3 சிக்சர்களை அவர் விளாசி இருந்தார். இறுதி வரை அவர் அவுட்டாகவில்லை.

15.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நான்காவது இடத்திலும், கொல்கத்தா ஆறாவது இடத்திலும் இருந்தது. 

கொல்கத்தாவின் வெற்றிக்கு காரணம் என்ன?

கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் அற்புதமாக பந்து வீசி இருந்தனர். இருவரும் இணைந்து மொத்தம் 42 ரன்களை தான் லீக் செய்திருந்தனர். இதில் நரைன் வீழ்த்திய ரோகித்தின் விக்கெட் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

மறுபக்கம் கொல்கத்தா அணிக்கு பெரிய சிக்கலாக இருந்ததே டாப் ஆர்டர் தான். இப்போது அது நன்றாக செட்டாகி உள்ளது என தெரிகிறது. கில், வெங்கடேஷ் ஐயர், திரிபாதி,  நித்திஷ் ராணா என நான்கு பேர். வலது, இடது என செம காம்பினேஷன். அதுவும் இப்போது அவர்கள் ரன் குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது கூடுதல் பிளஸ். இதற்கு முன்னதாக தொடக்க இணையராக கில் உடன் பரிசோதனை முயற்சியாக பலர் வந்து விளையாடினாலும் இப்போது அந்த இடத்தை தனக்கான இடமாக கெட்டியாக பிடித்துள்ளார் வெங்கடேஷ். 

மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

ரோகித் - டிகாக் கொடுத்த அமர்க்களமான தொடக்கம் மட்டும் இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு கிடைத்த வெற்றி. 

“நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை இறுதி வரை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டோம். சின்ன சின்ன பார்ட்னர்ஷிப் அமைந்தும் அதை பெரிதாக மாற்ற முடியவில்லை. கிரீசுக்கு வந்தவுடன் பந்தை கனெக்ட் செய்வது புதிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான காரியம். அதே போல எங்களது பந்துவீச்சின் போது ஆரம்பம் முதலே அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இந்த தவறுகளை எல்லாம் கடந்த போட்டியிலும் செய்திருந்தோம். அதை விரைவில் திருத்திக் கொள்வோம். மீண்டு வருவோம்!” என மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தோல்விக்கு பிறகு சொல்லி இருந்தார். 

இன்று நடைபெறுகின்ற 35-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com