மதுரை வேண்டாம்; திருச்சியைத்தான் இரண்டாம் தலைநகராக்கவேண்டும் – வேல்முருகன் பேட்டி!
‘தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை மாற்றவேண்டும்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூவும், ’இல்லை… இல்லை… திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக்கவேண்டும்’ என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் மாறி மாறி கருத்து யுத்தம் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனிடம் இதுகுறித்து பேசினோம்.
“தமிழகத்தில் இரண்டு தலைநரகரங்கள் இருப்பதில் தவறில்லை. ஆந்திராவுக்கும் தெலங்கானாவுக்கும் என்று இரண்டு மாநிலங்களுக்கு ஹைதராபாத் ஒரே தலைநகராக இல்லையா? கடந்த காலங்களில் திருச்சியை மையமாகக் கொண்டு இரண்டாம் தலைநகரை அமைக்கவேண்டும் என்று ஏற்கனவே, தலைவர்கள் கூறியதுதான். அந்த வகையில், மதுரையைவிட தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியைத்தான் தலைநகராக அமைக்கவேண்டும். அதுதான் சிறந்ததும்கூட.
மதுரை
தென்மாவட்ட மக்களும், கொங்குமண்டல மக்களும் வந்துசெல்ல மையப்பகுதி திருச்சிதான். ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் இருக்கிறது. அதனால், தலைநகரத்தை திருச்சியில் அமைக்கலாம். திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு மரியாதை அளித்ததோடு ,அவர்களையும் திருப்தி படுத்தியதுபோல் இருக்கும். அதேநேரத்தில் சென்னைதான் முதன்மை தலைநகராக இருக்கவேண்டும். ஒரேடியாக சென்னையில் இருந்து அடியோடு தலைநகரை மாற்றுவது நல்லதல்ல. சென்னை, திருச்சி என இரண்டு தலைநகரங்கள் இருக்கலாம். இரண்டு தலைமையகங்கள் இயங்கலாம். துறைத் தலைவர்கள் இங்கேயும் செயலாளர்கள் அங்கேயும் இருக்கும்படி பண்ணலாம். அரசும் சென்னையிலேயே இயங்கலாம்.
திருச்சி
அரசு இதுகுறித்து மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சியினர் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்கேட்கலாம். ஐரோப்பிய நாடுகளில் ஒரு சாதாரண கேபிள் புதைப்பதற்குக்கூட மக்கள் வாக்கெடுப்பில்தான் விட்டுவிடுகிறார்கள். அதேபோல, இந்த திட்டத்தை எதிர்கட்சி செயல்படுத்தியது என்று அப்படியே விட்டுவிடும் கீழ்த்தரமான அரசியலையும் அவர்கள் செய்வதில்லை. மக்களுக்கான திட்டங்களை ஆரோக்கியமாக செயல்படுகிறார்கள்.
அப்படி இருக்கும்போது, இப்பிரச்சனைக்கு மக்கள் கருத்து அவசியம். திருச்சி தலைநகராகவேண்டும் என்று எம்.ஜி.ஆர், கலைஞர் காலத்திலிருந்தே வைக்கப்பட்ட கோரிக்கைகள்தான். அதனால், மதுரையைவிட திருச்சிதான் தலைநகரத்திற்கு பொறுத்தமானது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியப் பகுதி. இதில், எந்தப் பிரச்சனையும் வராது. அரசுக்கும் ஒரு நல்லப் பெயர் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. பெரும்பான்மை மக்களின் கருத்துகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகள் கேட்டு செயல்படுத்தினால் மக்களின் போக்குவரத்து அலைச்சல் எல்லாம் தவிர்க்கப்படும்” என்கிறார், அவர்