வனம் - திரைப் பார்வை: சின்ன பட்ஜெட்டில் நிறைவான சினிமாவை தரும் 'முயற்சி' மட்டுமே!

வனம் - திரைப் பார்வை: சின்ன பட்ஜெட்டில் நிறைவான சினிமாவை தரும் 'முயற்சி' மட்டுமே!
வனம் - திரைப் பார்வை: சின்ன பட்ஜெட்டில் நிறைவான சினிமாவை தரும் 'முயற்சி' மட்டுமே!

வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் சினிமா 'வனம்'. ஸ்ரீகாந்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை கோல்டன் ஸ்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இரு வேறு காலகட்டங்களில் நடப்பதாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை சமஸ்தானத்தில் வாழ்ந்த ஜமீந்தாரராக வேல ராமமூர்த்தி வருகிறார். 1960 காலக்கட்டத்தில் நடப்பது போல அவரது காட்சிகள் காட்டப்படுகின்றன. பிறகு தற்காலத்தில் நுண்கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவராக அறிமுகமாகிறார் வெற்றி. அக்கல்லூரியின் குறிப்பிட்ட அறையில் தங்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கான காரணத்தை தேடப் போகும் வெற்றிக்கும், ஸ்மிருதி வெங்கட்டுக்கும் கிடைக்கும் அதிர்ச்சிகரமான காரணங்களை நோக்கி ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நகர்கின்றன.

முன்ஜென்ம தொடர்பு, வனவாழ் மக்களை துன்புறுத்தும் ஜமீந்தாரர் என பல முறை கேட்டு சலித்த கதைதான் என்றாலும், இதனை சுவாரஸ்யமாக வழங்கி இருக்க முடியும். அதற்குத் தகுதியான மையக் கருவை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வனத்தில் தொலைந்து போயிருக்கிறது படக்குழு. அனு சித்தாராவின் நடிப்பும் கதாபாத்திர வடிவமைப்பும் அருமை. அனு சித்தாரா கையில் வைத்திருக்கும் கிராபிக்ஸ் மான் க்யூட்டான மாயமான்., கிராபிக்ஸ் குழுவிற்கு பாராட்டுகள். ஸ்மிருதி வெங்கட், வெற்றி இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் மனதை ஈர்க்கவில்லை.

ஆண்கள் ஹாஸ்டலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நுழையும் வெற்றி, அங்கு அம்பேத்கர் படத்தை ஒட்டுகிறார். இந்தக் காட்சி கதைக்கு எந்த வகையிலும் தொடர்புடையதாக இல்லை என்ற போதும், வலிந்து இதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

அழகம் பெருமாளின் முன்ஜென்மம் என்ன? வெற்றியின் முன்ஜென்ம வாழ்க்கை என்ன? - இவை ரிவீல் ஆகும் க்ளைமாக்ஸ் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது ஆனால், அது மொத்த சினிமாவையும் தாங்கி நிற்கும் பலத்தில் இல்லை. மாயக் கண்ணாடி ஐடியா ரசிக்க வைக்கிறது. விக்ரம் மோஹனின் ஒளிப்பதிவு இதம். ஆனால் அது 1960-க்கும் சமகாலத்துக்கும் இடையிலான வேறுபாட்டை எந்த வகையிலும் பிரித்துக் காட்டுவதாக இல்லை.

சின்ன பட்ஜட்டில் சிறப்பான சினிமாவை தர முயன்றிருக்கிறார்கள் படக்குழுவினர். அது ஓரளவு வெற்றியினையும் கொடுத்திருக்கிறது. வித்தியாசமான முன்ஜென்மக் கதைகள், தந்திரக் காட்சிகள் கொண்ட சினிமாவை ரசிக்கிறவர்களுக்கும் 'வனம்' நல்ல விருந்து.

வனம் - நாளை (வெள்ளிக்கிழமை) தியேட்டர்களில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com