கதைகளின் சுல்தான் ‘வைக்கம் முகம்மது பஷீர்’ - வாழ்க்கை வரலாறு.

கதைகளின் சுல்தான் ‘வைக்கம் முகம்மது பஷீர்’ - வாழ்க்கை வரலாறு.
கதைகளின் சுல்தான் ‘வைக்கம் முகம்மது பஷீர்’ - வாழ்க்கை வரலாறு.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மலையாள இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு ராஜாங்கத்தை உருவாக்கிக் கொண்டவரும், ஒப்பற்ற கதை சொல்லியும், கதைகளின் சுல்தானுமான வைக்கம் முகமது பஷீர் பற்றி அறிந்து கொள்வோம்.

உண்மையில் படைப்பாளிகள் மறைவதில்லை என்றாலும் காலம் பலரை மெல்ல மறக்கடித்துவிடுகிறது. ஆனால் பஷீரின் படைப்புகள் வேலி தாண்டும் மான் குட்டி போல காலத்தை தாண்டி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும்.

தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டார்.  துவக்கத்தில் தீவிர இடதுசாரி சிந்தனையாளராக இருந்த அவர் பிறகு காந்திய கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். தீவிரவாத இயக்கமொன்றை உருவாக்கி அதன் கொள்கைகளை வெளியிட “உஜ்ஜீவனம்” எனும் வாரப் பத்திரிக்கையை நடத்தினார்.

பத்ம விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட் பட்டம், பிரேம் விருது, நஸீர் விருது, சமஸ்கிருத தீபம் விருது, கேரள சாகித்திய அகாடமி விருது, மத்திய சாகித்திய அகாடமி விருது என எத்தனையோ விருதுகளை வாங்கினாலும்., புகழ் தன்னை பாத்தித்த சிறு சலனம் கூட இல்லாமல் வாழ்ந்து முடித்தவர் பஷீர்.

அவரது “பாத்துமாவின் ஆடு”, “பால்யகால சகி”, “உப்பப்பாவுக் கொரு ஆணை இருந்தது”, “மதில்கள்” போன்ற நாவல்கள் குறிப்பிட்டு சொல்லத் தக்கவை. இதில் “பாத்துமாவின் ஆடு” “பால்யகால சகி” இரண்டும் கிட்டத்தட்ட எல்லா இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இவரது படைப்புளை மொழி பெயர்ப்பு செய்ததில் குளச்சல் மு.யூசுப் மற்றும் சுகுமாரன் இவர்களது பங்கு முக்கியமானது.

பஷீரின் இலக்கிய உலகில் அவர் தன்னையே மைய பாத்திரமாக்கி கதைகளை சொல்கிறார். அவரது கதைகளில் அவரே நாயகன். எளிய மொழி நடையும், நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது.

அன்பின் பெயரால் தனிமனித உழைப்பு சுரண்டப்படுவது பற்றிய கதையாகத்தான் அவரது “பாத்துமாவின் ஆடு” நாவலை பார்க்க முடிகிறது. நகைச்சுவை உணர்வுள்ளவரிடத்தில் போராட்ட குணம் அதிகமாக இருக்கும் என்பது பஷீரை படித்தால் புரியும்.

பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். துறவியாக இந்தியா முழுக்க இலக்கின்றி அழைந்தார். பஷீர் சிறையில் இருந்த காலத்தில் தினமும் இரவு அவரது தாயார் பஷீருக்கு உணவு தயாரித்து காத்திருப்பாராம். அவரது இறுதிகால பேட்டியில் அதை குறிப்பிட்டு சொல்லியிருந்தார்.

மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி,ஆடு,பாம்பு,நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட “சிங்கிடி முங்கன்” ,”எட்டுகால் மும்முஞ்சு” என விசித்திரமாக இருக்கும். தன் முதுமையை பற்றிச் சொல்லும் போது கூட “நான் இப்போது ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்” என்கிறார் கிண்டலாக.
.
பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ராஜத்துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஷீர், அங்கு கிடைத்த அனுபவங்களையே ‘மதில்கள்' என்ற நாவலாக எழுதினார்.

பஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்களுக்கு இடையிலான உரையாடல் தான் மதில்கள் கதை. ஒரு முடிவாக பஷீர் நாராயணியை சிறை மருத்துவமனையில் சந்திக்க திட்டமிடுகிறார். சந்திப்பிற்கு முதல் நாள் பஷீருக்கு விடுதலை கிடைக்கப் போகும் செய்தியை சொல்கிறார் சிறைக்காவலர். ”Why Should I be free? Who wants freedom??” என்று சிறைக்காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் பஷீர்.

”மதில்கள்” நாவலை சினிமாவாக இயக்க அனுமதி கேட்டு ’அடூர் கோபாலகிருஷ்ணன்’ பஷீரிடம் வருகிறார். அப்போது பஷீர் “அந்த நாராயணி கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கிறதா உத்தேசம்?'' என்கிறார் கிண்டலாக.

அதற்கு ’அடூர் கோபாலகிருஷ்ணன்’ வாய்விட்டுச் சிரித்தார். ஒரு சிறை வாழ்க்கையை பஷீரை விட இவ்வளவு சுவாரஸ்யமாக ஒருவர் சொல்லிவிட முடியாது.

’அடூர் கோபால கிருஷ்ணன்’ திரைக்கதை எழுதி இயக்க, மம்முட்டி நாயகனாக நடித்து ’மதிலுகள்’ திரைப்படம் 1990’ல் வெளிவந்தது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த படம் என நான்கு தேசிய விருதுகளையும் ஒரு மாநில விருதையும் பெற்றது அந்த படம். அது மட்டும் இல்லாமல் வெனிஸ் உட்பட பல வெளிநாட்டு திரைப்பட விழக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.

ஒரு ஈஸி சேர், கொஞ்சம் கட்டஞ்சாயா, கையில் துண்டு பீடி அருகில் தனது கிராமா போன் இது தான் பஷீரின் புற அடையாளம்.

கேரள மாநிலம் திரிசூரில் பஷீர் தீமில் ஒரு உணவகமே இயங்கி வருகிறது. அவருடைய நையாண்டி எழுத்துகளை சித்தரிக்கும் வண்ணம் அந்த ரெஸ்டாரண்டின் சுவர்களில் கிராஃபிடி ஓவியங்கள் இடம் பெற்றிருக்கிறது.

அவர் வாழ்க்கையில் கடந்து வந்த கடுமையான பாதையையும் அவர் எழுதிய கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு மனிதன் இத்தனை இறுக்கமான சூழ்நிலைகளை எப்படி நகைச்சுவை உணர்வால் தர்த்து முன்நகர்ந்தார் என்று வியக்கத் தோன்றும்

கேரள எதிர்கட்சிகள் பற்றி தனது புத்தக முன்னுரையொன்றில் கிண்டலாக இப்படி எழுதியிருந்தார் பஷீர்.

"பிரபஞ்சத்தின் கர்த்தாவே, இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோமென்று அறியாமலிருக்கிறார்கள். இவர்களுக்கு மன்னிப்பு நல்குவீராக!"

வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 19-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்க தாலுகாவில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். ஜூலை 5, 1994’ல் மறைந்தார். அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும். இன்னும் பல நூற்றாண்டுகள் அவர் தனது கதைகளின் வழியே நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். அவர் தான் பஷீர்.

இறுதியாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் பஷீர் குறித்த கவிதை :

வைக்கம் முகம்மது பஷீர்
கேரளத்தின்டே சூஃபி
அவருக்கு ஆயிரம் வேலைகள் தெரியுமாம்
அவர் பார்த்த முதல் வேலை
குரங்குக்குப் பேன் பார்ப்பது
சாதாரணக் குரங்கு இல்லை
பைத்தியம் பிடித்த
பெரும் மசைக் குரங்கு
இன்னொரு வேலை
சுமை கழுதைகளை மலையேற்றுவது
பஷீர் கழுதை ஒன்றை
இழுத்துக்கொண்டு போகும்
சித்திரம்
சிலுவை சுமக்கும் தேவகுமாரனுக்கு
நிகரானது
வேறொரு வேலை
குட்டிச்சாத்தான்களைக் கட்டிவைப்பது
பஷீர்
ஒரு குட்டிச்சாத்தனை கட்டிவிட்டு
இன்னொன்றை துரத்திக்கொண்டு
ஓடும் போது
முதல் சாத்தான்
தப்பித்துக்கொள்ளும்
நான்காவது வேலை
கொஞ்சம் கவித்துவமானது
பேய்களைச் சிங்காரித்து
மேடைக்குக் கூட்டி வருவது
இப்படியாக
பஷீர்
தன் ஆயிரமாவது வேலையில்
மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது
அல்லா அவர் முன் தோன்றினார்
மோனே
பஷீர்!
என்னை தெரியலையா?
பஷீர்
ஸ்டைலாய் பீடி வழித்துக்கொண்டே
சொன்னார்
தெரியாம என்ன அச்சனே!
நான் கண்ட
குரங்கும், கழுதையும்
குட்டிச்சாத்தானும் பேயும்
நீ தன்னே...


வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com