கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீர்; எள்ளல் நாயகனை கொண்டாடுவோம்.!

கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீர்; எள்ளல் நாயகனை கொண்டாடுவோம்.!
கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீர்; எள்ளல் நாயகனை கொண்டாடுவோம்.!

கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு நாள் இன்று. மலையாள எழுத்துலகில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கின்றன பஷீரின் எழுத்துகள். சின்னச் சின்ன அழகான கதைகளை தனக்கேயான எள்ளல் நடையுடன் கச்சிதமான அரசியல் பார்வையுடன் முன்வைத்தவர் பஷீர். பஷீரின் கதைகளை தமிழில் அதே உயிர்ப்புடன் கொண்டு வந்து சேர்த்தவர்களில் முக்கியமான இரண்டு பேர் குளச்சல் மு.யூசுப், சுகுமாரன்.

பஷீர் தன் வாழ்வில் தான் கடந்த கடுமையான காலங்களையும் கூட நகைச்சுவையுடனேயே பதிவு செய்தார். "திண்பது, குடிப்பது, ஜாலியாக இருப்பது, தூங்குவது - இதுதான் வாழ்க்கை!” இப்படிச் சொன்னது யார்? யாராக இருந்தாலும், சொன்னவன் உண்மையிலேயே பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும். தெளிவான பார்வை கொண்ட ரசனை கொண்ட மனிதனாகத்தான் இருக்க வேண்டும்." என்றார் பஷீர்.

ஒரு முறை பஷீர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போனார் கைப்பிடி வளைந்த குடையை ஓட்டல் தாழ்வாரத்தில் தொங்க விட்டுவிட்டு அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பஷீருக்கு முன்னமே சாப்பிட்டு முடித்த ஒருவர் தான் கிளம்பும் போது பஷீரின் குடையை எடுத்தார். அதனைப் பார்த்த பஷீர் கேட்டார் “உங்கள் பெயர் பஷீரா.?” “இல்லை” என பதில் வந்தது. உடனே பஷீர் நக்கலாக “அப்படியானால் அந்தக் குடையை அங்கேயே வைத்துவிடுங்கள். அது பஷீருடையது” என்றார்.

பஷீரின் பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி, மதில்கள், உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது போன்ற கதைகள் என்றென்றும் போற்றத்தக்கது. பால்யகால சகியில் அவர் சொன்ன காதல் கதையை வாசித்து கண்கலங்காதவர்கள் குறைவு. அத்தனை அடர்த்தி கொண்டது அக்கதை. அதே போல மதில்கள் கதையில் ஒரு சிறை வாசியாக பஷீர் பெண் கைதி நாராயணியை காதலித்த கதையை வாசித்துக் கொண்டே இருக்கலாம். இக்கதையினை அடூர் கோபால கிருஷ்ணன் சினிமாவாக இயக்கினார். மம்முட்டி, கிருஷ்ணன் குட்டி நாயர், முரளி, திலகன் ஆகியோரது நடிப்பில் இந்த சினிமா 1990ல் வெளியானது. இதற்கான அனுமதி பெற பஷீரை அணுகினார் அடூர் . அப்போது பஷீர் “தாராளமா படம் எடுங்க.,” என்று சொன்னவர் மெல்ல “அந்த நாராயணி கேரக்டருக்கு யார போடப் போறிங்க’னு மட்டும் சொல்லுங்க.” என்றாராம் கிண்டலாக. அப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

நகைச்சுவை உணர்வுடன் நல்ல மனித தத்துவங்களையும் பதிவு செய்தவர் பஷீர் “ஜீவஜாலங்களில் ஆண்பெண் இனக்கவர்ச்சி, பரஸ்பர உடல் இணைவு, உற்பத்தி. இவற்றுக்கான வழிப்பாதைதான் காதல். சிறிதளவு வாசத்துடன் கூடிய அற்புதமான ஏமாற்றுவேலை.” இது பஷீரது மொழி. பஷீரின் இலக்கிய உலகில் அவர் தன்னையே மைய பாத்திரமாக்கி கதைகளைச் சொல்கிறார். இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியன. தன் முதுமையை பற்றிச் சொல்லும் போது கூட “இப்போது நான் ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்.” என்றார். கேரள எதிர்கட்சிகள் பற்றி தன்னுடைய புத்தக முன்னுரையொன்றில் "பிரபஞ்சத்தின் கர்த்தாவே, இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோமென்று அறியாமலிருக்கிறார்கள். இவர்களுக்கு மன்னிப்பு நல்குவீராக!" என்று எழுதியிருந்தார்.

அடூர் கோபாலகிருஷ்ணன் மட்டுமல்ல பஷீரது கதைகளை பல இயக்குநர்கள் சினிமாவக்க முயன்றார்கள். 1964 அம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பார்கவி நிலையம் என்ற ரொமாண்டிக் ஹாரர் சினிமா பஷீரது கதையே. இதே கதையின் தழுவலில் கிளிப்பேச்சு கேட்கவா என்றொரு சினிமாவை இயக்கினார் பாசில். 1993ல் வெளியான இந்த சினிமாவில் மம்முட்டி, கனகா ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான சினிமா அங்காடி தெரு. இதில் நாயகன் தனது கிராமத்தில் தான் காதலித்த ஒரு பெண் பற்றி அஞ்சலியிடம் ஒரு ப்ளாஸ் பேக் சொல்வார். அது பஷீர் எழுதிய ‘பர்ர்ர்ர்’ என்ற சிறுகதை. இப்படியாக பஷீர் பல தளங்களில் வாழ்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் பஷீர் தீமில் ஒரு ஓட்டல் இயங்கியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...? ஒரு எழுத்தாளனை மலையாள மண் எந்த அளவிற்கு கொண்டாடியது என்று நினைக்க நினைக்க வியப்புதான். பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு போராட்ட அமைப்புகளை உருவாக்கினார். சிறை சென்றார். தனது கொள்கைகளை வெளியிட ‘உஜ்ஜீவனம்’ என்ற வார இதழையும் நடத்தினார். அவர் துறவியாக இந்தியா முழுக்க இலக்கின்றி அலைந்தார். மனப்பிறழ்வு கொண்ட காலத்தில் அவர் எழுதியது தான் பாத்துமாவின் ஆடு என்கிறார்கள். வாசித்தால் யாரும் நம்பவே முடியாது.

பத்ம விருது, கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் டி.லிட் பட்டம், சாகித்ய அகாடமி விருது, மத்திய அரசின் சாகித்திய அகாடமி விருது என பல விருதுகள் பஷீரால் தன்னை அலங்கரித்துக் கொண்டன. புகழின் சலனம் சற்றும் பாதிக்காத வகையில் வாழ்ந்தார் பஷீர்.

1908ஆம் ஆண்டு வைக்கம் தலயோலப் பரம்பில் பிறந்த பஷீர் 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடை பெற்றார். கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரை இந்நாளில் நினைவு கூர்வோம். பஷிரை கொண்டாடுவோம்.

 - சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com