வடக்கு வாசல் - 5 | இமாச்சலை இறுக்கும் நிதி நெருக்கடி.. தள்ளாடும் காங்கிரஸ்.. தலைநிமிரும் பாஜக!
டெல்லிக்கு விசித்திர கடிதம் எழுதிய இமாச்சல் முதல்வர்
நடப்பாண்டிற்கான பருவமழை, தென்னிந்தியாவில் வழக்கத்தைவிடக் குறைவு என்றாலும், வட இந்தியாவில் குறிப்பாக எல்லையோர மாநிலங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதை ஊடகச் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருப்போம். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பெரும்பாலான மாநிலங்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லிக்கு ஒரு விசித்திரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தன்னுடைய மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் எண்ணிக்கையை 153லிருந்து 130ஆக குறைத்துவிடுமாறு கடிதத்தில் கேட்டிருந்தார்.
பொதுவாக மாநிலங்கள், அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கூட்டுமாறு டெல்லிக்கு கடிதம் எழுதுவார்கள். குறைந்தபட்சம், தற்காலிகமாக பணி நியமனம் செய்ய விரும்புவார்கள். ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலைமை வேறு. எண்ணிக்கையை 110 ஆகக் கூட குறைத்துவிடும்படி முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பார் என்கிறார்கள். ஆனால், காலியாக உள்ள இடங்களையே அவர் குறைக்குமாறு கேட்டுக்கொண்டதால் அதிகாரிகளைச் சமாளிக்க முடிந்திருக்கிறது. எந்த மாநிலமாக இருந்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் ஆட்குறைப்பு செய்ய முயற்சி எடுக்க மாட்டார்கள். வெள்ள நிவாரணப் பணிக்காக ஏகப்பட்ட அதிகாரிகள் தேவைப்படும் நேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக முதல்வர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவது ஏன்?
மாநிலத்தின் மோசமான நிதிநிலைதான் அதற்கு முக்கியமான காரணம். முதல்வர் சுகுவின் அதிரடியான சிக்கன நடவடிக்கைகள் பற்றிய பல மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கலகக்குரல்கள் எழுந்துள்ளன. சிக்கன நடவடிக்கைக்கு மாநிலத்தின் நிதி நெருக்கடி ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதுவே முக்கியமான காரணமல்ல என்று மறுக்கிறார்கள்.
இமாச்சலில் கவனத்தை ஈர்த்த பழைய ஓய்வூதியத் திட்டம்!
வட இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இமாச்சலப் பிரதேசம் ஒரு பணக்கார மாநிலம்தான். 2025-26ஆம் ஆண்டிற்கான அதன் தனிநபர் வருமானம் ₹2.83 லட்சத்தைக் கடந்துவிடும் என்கிறார்கள். இது தேசிய சராசரியான ₹2.19 லட்சத்தைவிட அதிகம். இந்தியப் பொருளாதாரம் 7.4% வளர்ச்சி காணும்போது, இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரம் 8.3% இருந்திருக்கிறது. சரி, பிரச்னைக்கு என்னதான் காரணம்?
மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயில் ஏறக்குறைய 88%, அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி கட்டுவதற்காக மட்டுமே செலவிட வேண்டியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே இதே நிலைதான் தொடர்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கான செலவு என்பது அதிகபட்சம் 55% மட்டும்தான். இதுதான் ஆளும் காங்கிரஸ் கட்சியை சிக்கன நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வைத்திருக்கிறது. முதல்வர், அவரது அமைச்சக உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளின் ஊதியம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத செலவுகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்று பாஜக ஆளுங்கட்சியாக இல்லாத மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதில் காட்டப்படும் பாரபட்சம் குறித்து இமாச்சலப் பிரதேசத்திலும் விமர்சனம் எழுந்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு என ஏகப்பட்ட புகார்கள்.
டெல்லி மீது சுகு சொல்லும் புகார்களில் முக்கியமானது, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பானது. ஓய்வூதியப் பிடித்த தொகையான ₹9,200 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தியதற்காக, மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பில் மத்திய அரசு அபராதமாக ₹2,000 கோடியைக் குறைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இமாச்சலப் பிரதேச தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் முக்கிய கவனத்தை பெற்றது. சுக்விந்தர் சிங் சுகு, முதல்வராவதற்கு அதுதான் முக்கியமான காரணம் என்றுகூட சொல்லமுடியும்.
ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள நதாவுன் பகுதியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த சுகுவின் தந்தை அரசுப் பேருந்து நடத்துநர். பால் வியாபாரியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த சுகு, தன்னுடைய 17-ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI மூலம் அரசியலில் இணைந்தார்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஷிம்லா மாநகராட்சி கவுன்சிலர், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என படிப்படியாக வளர்ந்து, அரசியலில் உச்சம் தொட்டிருக்கிறார். நதாவுன் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அவருடைய மக்கள் செல்வாக்கை புரிந்துகொள்ள முடியும்.
2022-இல் நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவராகச் செயல்பட்ட சுகு, 'பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)' மற்றும் மகளிருக்கான மாத உதவித்தொகையை பிரசாரத்தில் வலுவாக முன்வைத்தார். பாஜகவின் கடுமையான போட்டியை மீறி, 68 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் குடும்ப அரசியல் தந்த கசப்பைத் தாண்டி, அடிமட்ட தொண்டராக இருந்து கட்சியின் அபார வெற்றிக்கு காரணமான சுகுவுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. 2022 டிசம்பரில் இமாச்சால பிரதேசத்தின் முதல்வரானார்.
’பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவோம்’ என்கிற வாக்குறுதியை அளித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற ஒரே மாநிலம் இமாச்சலப் பிரதேசம்தான். இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவருவதாகக் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. 2023 இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது.
சரி, என்னதான் சிக்கல்? அரசு ஊழியர்களால்தான் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். 70 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் 2.5 லட்சம் அரசு ஊழியர்களும் 1.9 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் இருக்கிறார்கள்.
கடுமையான நிதி நெருக்கடியில் இமாச்சல் காங்கிரஸ்
இந்தியாவிலேயே மிக அதிக அளவிலான அரசு ஊழியர் விகிதம் கொண்ட மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 7.5 கோடி மக்கள்தொகைக்கு 10 லட்சம் அரசு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்; அதாவது, 75 பேருக்கு ஓர் அரசு ஊழியர் என்ற விகிதம் உள்ளது. ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேருக்கு ஓர் அரசு ஊழியர் இருக்கிறார்கள். மலைப்பாங்கான நிலப்பரப்பு, கடினமான புவியியல் சூழல், குறைவான தனியார் துறை வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களால் அரசுப் பணிகளையே பெரும்பாலானோர் நம்பியுள்ளனர். மாநில அரசின் மொத்த வருவாயில் சுமார் 88% தொகை அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டிக்கே செலவாகிறது. பழைய ஓய்வூதியத் திட்டமும் (OPS) அமலில் இருப்பதால், மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறியுள்ளது.
அரசியல் ரீதியாக இந்த வாக்குறுதி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை பெற்றுத் தந்த போதிலும், செயல்படுத்துவதில் ஏகப்பட்ட சவால்கள் நீடிக்கின்றன. நிதி நிலையில் கடுமையான செலவின சுமையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசைக் குற்றஞ்சாட்டும் பாஜக
நிதி நெருக்கடியையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் பாஜக, தன்னுடைய முக்கியமான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் அரசின் நிர்வாகத் திறன்மையை பாஜக குற்றம்சாட்டுகிறது. நில வருவாய் சரியான முறையில் வசூல் செய்யப்படுவதில்லை. கடந்த நிதியாண்டுகளைவிட மூலதனச் செலவினம் ஏறக்குறைய 22% குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து, மாநிலத்தைப் பொருளாதாரரீதியாக அழிவுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று பாஜக குற்றம்சாட்டி வருவது மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். காங்கிரஸ் மேலிடம் ஆரம்பத்தில் OPS வாக்குறுதியைக் தீவிரமாக ஆதரித்தபோதிலும், கட்சியின் மூத்த பொருளாதார வல்லுநர்களான ப.சிதம்பரம் மற்றும் மான்டேக் சிங் அலுவாலியா போன்றோருக்கு மாற்று கருத்து இருந்து வந்தது.
2024 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி காங்கிரஸ் எதுவும் குறிப்பிடவில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று. நடைமுறையில் சாத்தியமுள்ள ஓய்வூதியத் திட்டமே சரியானது என்கிற முடிவுக்கு காங்கிரஸ் கட்சியும் ஒருவழியாக வந்து சேர்ந்துள்ளது.
(வடக்கு வாசல் திறக்கும்..)

