‘அதிமுக தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை.. விரைவில் மீட்டெடுப்போம்’ - வி.கே. சசிகலா

‘அதிமுக தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை.. விரைவில் மீட்டெடுப்போம்’ - வி.கே. சசிகலா
‘அதிமுக தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை.. விரைவில் மீட்டெடுப்போம்’ - வி.கே. சசிகலா

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட  நடைமுறைகளும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக விவகாரம் குறித்து ‘இந்தியா டுடே’ ஆங்கில பத்திரிகையின் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள வி.கே. சசிகலா, அதிமுக தற்போது பாதுகாப்பானவர்களின் கைகளில் இல்லை என்றும், அதன் பெருமையை விரைவில் மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த வேளையில் உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள வி.கே. சசிகலா, “என்னைப் பொறுத்த வரையில், அவர் இப்போது உயிருடன் இல்லை என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போதும் என்னுடன் அவர் இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவை (ஜெயலலிதா) நினைவுகூரப்படாத நாளே இல்லை எனலாம்.

எல்லோரும் அவரை தங்கள் வீட்டின் தாய் அல்லது சகோதரியாகவே நினைக்கிறார்கள். எனவே, அவர் இன்னும் நம் அனைவருடனும் இருக்கிறார். அவர் தமிழக மக்களுடனும், அதிமுக தொண்டர்களுடன் இருக்கிறார். எப்போதும் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு - உச்சநீதிமன்றம்

மேலும், அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், “உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான பூசல்கள் பற்றியது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்துள்ள மனுவிற்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில், சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானதாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த முயற்சி செய்வோம். செப்டம்பர் 2022-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் நீடிக்க அனுமதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அதிமுக - எடப்பாடி

அத்துடன், அதிமுக தற்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக இல்லை. ஒரு கட்சிக்கு, அதன் தொண்டர்களின் பலம்தான் முக்கியம். 100-200 பேர் கொண்ட குறிப்பிட்ட குழு கட்சியை வழி நடத்த முடியாது. 

சலுகை பெற்ற பின்னணியில் இருந்து வந்தாலும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனுபவிக்காவிட்டாலும், அம்மா (ஜெயலலிதா) பொறுப்பேற்ற காலத்திலிருந்தே, அதனைப் புரிந்துகொண்டே செயலாற்றி வந்தார். நான் அவருடன் இருந்ததால், நானும் அதே வழியில் சென்றேன்.

இப்போது நான் நினைப்பது என்னவென்றால், செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நாங்கள் (ஜெயலலிதாவும் - நானும்) பேசும் போதெல்லாம், நாங்கள் செய்த விஷயங்களையும், செய்ய வேண்டிய விஷயங்களையும் பற்றியே விவாதிப்போம். அவர் விட்டுச் சென்ற விஷயங்களை முடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான், எத்தனை சண்டைகள் இருந்தாலும், கட்சியை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறேன். எனது நலனுக்காக கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தமிழக மக்களை காக்க வேண்டும். அது நிச்சயம் நடக்கும்” என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - சசிகலா

உங்களை விரைவில் சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக, அவர்கள் என்னிடமிருந்து பிரிந்துசென்றுவிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

தமிழக மக்களுக்கு உண்மையுடனும், உண்மையாகவும் அம்மா எல்லா திட்டங்களையும் செய்தார். ஆனால் திமுக அப்படியல்ல. அது எனக்கு உறுதியாகத் தெரியும். எனவே மக்களை பாதுகாத்து அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அதனால்தான் இந்த கட்சி தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதை கண்டிப்பாக செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் - அதிமுக

2024 தேர்தல் அடுத்த பெரிய சவாலாக உள்ளநிலையில், அதற்கு முன் அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேருமா என்று கேட்கப்பட்டதற்கு, “நிச்சயமாக, ஒன்று சேர்வோம். மத்தியில் ஆளும் கூட்டணியில் அம்மா இருந்தபோது, தமிழக மக்களுக்கு தேவையான விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒருவேளை அது செய்யப்படாவிட்டால், கூட்டணியை விட்டு வெளியேறவும் தயாராக இருந்தார். மேலும் முக்கியமான விஷயங்களைவிட, பதவியே முக்கியம் என்று நினைத்து அவர் ஒருபோதும் செயல்படவில்லை. அது எல்லோருக்கும் தெரியும். தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் பதவி - தலைமை

அப்படியானால், தற்போதைய தலைவர் இபிஎஸ் தனது பதவியை முக்கியமானது என்று கருதுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “அப்படி இருக்கக்கூடாது என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். பதவி என்பது நாம் நினைப்பது போன்று பெறுவது அல்ல. மாறாக, தலைமைத்துவம் என்பது எல்லோரிடமும் அன்பும், மரியாதையும் பெற்றால் மட்டுமே அது நல்ல தலைமை” என்று வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

நன்றி - இந்தியா டுடே

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com