“தடுப்பூசிக்கு ஏற்ப திட்டமிடாதது யார் தவறு?” - மாநிலங்களை விளாசி தள்ளிய மத்திய அமைச்சர்!

“தடுப்பூசிக்கு ஏற்ப திட்டமிடாதது யார் தவறு?” - மாநிலங்களை விளாசி தள்ளிய மத்திய அமைச்சர்!
“தடுப்பூசிக்கு ஏற்ப திட்டமிடாதது யார் தவறு?” - மாநிலங்களை விளாசி தள்ளிய மத்திய அமைச்சர்!

இந்தியா முழுவதும் பரவலாக தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், தங்களுக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க வேண்டுமென பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிவருகின்றன. அதைத்தொடர்ந்து, கடிதம் எழுதும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மந்தாவியா காட்டமான தனது பதில்களை ட்விட்டர் வழியாக இன்றைய தினம் தெரிவித்திருக்கிறார்.

தனது ட்விட்டர் பதிவில், மன்சுக் மந்தாவியா செய்த பதிவின் விவரங்கள் பின்வருமாறு:

“தங்களின் தடுப்பூசி தேவை குறித்து, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றேன். அதன்வழியாக அதுதொடர்பான விவரங்களை தெரிந்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் தடுப்பூசி இருப்பின் நிலவரத்தை தரவுகளின் வழியாகவே நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் நிலவரம் குறித்து மீண்டும் மீண்டும் அறிக்கை வழியாக கேட்கப்படுவதால், மக்களிடையே வீண் பீதியே ஏற்படுகிறது. அதைமட்டுமே அந்த பயனற்ற அறிக்கைகள் செய்கின்றன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி போட, ஜூன் மாதத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 11.46 கோடி தடுப்பூசி அளவுகள் தரப்பட்டன. இது, ஜூலை மாதத்தில் 13.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் மாநிலங்களில் எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்று மத்திய அரசு ஜூன் 19, 2021-லேயே மாநிலங்களுக்கு அறிவித்திருந்தது. இதன் பின்னர்,  ஜூன் 27 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில், ஜூலை முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து தினமும் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் தடுப்பூசி அளவை எப்போது, எந்த அளவில் பெறுவார்கள் என்பது மாநிலங்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட வாரியாக திட்டமிடுவதன் மூலம் மக்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருப்பர். அதற்காகவே மத்திய அரசு இதைச் செய்துள்ளது.

மாநில அரசுகள் முறையாக ஆலோசித்து சரியாக திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு இந்த தகவல்களை முன்கூட்டியே அளித்தது. ஆனாலும் தடுப்பூசி எடுப்பவர்களின் நீண்ட வரிசையை நாம் அன்றாடம் காண்கிறோம் என்றால், பிரச்சினை என்ன, அதற்கு காரணம் யார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

ஊடகங்களில் குழப்பத்தையும் கவலையையும் உருவாக்கும் அறிக்கைகளை வெளியிடும் தலைவர்கள், இதுவரை அவர்களின் மாநிலங்களில் ஆளுகை செயல்முறை மற்றும் தொடர்புடைய தகவல்களில் கிடைக்கப்பெறாமல் நீக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கல் தகவல்கள் குறித்து கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை”

இவ்வாறு மன்சுக் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் தங்களின் தடுப்பூசி தேவைகுறித்து பல முறை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதல்வர் இதுதொடர்பான பிரதமருக்கான தனது கடிதத்தில் ‘1000 பேரில் 302 பேருக்கு என செய்யப்படும் தமிழகத்துக்கான இந்த தடுப்பூசி ஒதுக்கீடு, மிக மிக குறைவாக உள்ளது. இதே எண்ணிக்கை குஜராத்தில் 533 டோஸ் – கர்நாடகாவில் 493 டோஸ் – ராஜஸ்தானில் 446 டோஸ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒப்பிடும்போது தமிழகத்தில் மிகவும் குறைவாகவே தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது. அந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்யவேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசியை ஒதுக்க வேண்டும். சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கவேண்டும்’ எனக்கூறியிருந்தார்.

இதேபோல டெல்லி அரசு, தடுப்பூசி தட்டுப்பாட்டால் தங்கள் மாநிலத்தில் பல இடங்களில் அரசு தடுப்பூசி மையங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தது. உடன் மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த அதிகாரிகளும் பேசியிருந்தனர். இந்தியா முழுக்க பல மாநிலங்களில், தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதும் உண்மை.

ஆனால் இதை முற்றிலும் எதிர்க்கும்விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் ட்வீட் செய்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக அவர் ‘ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், ஜூலையில் 13.5 கோடி என அதிகரிக்கப்பட்டு தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 11.46 கோடிதான் ஒதுக்கப்பட்டது’ எனக்கூறியிருந்தது விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது.

மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவிக்கையில், ‘தடுப்பூசி விநியோக அளவில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் சில கோடி தடுப்பூசிகளை கூடுதலாக தந்திருப்பதாக மத்திய அரசு சொல்வதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை போட்டுக்கொள்ள விரும்பும் மக்கள், கடந்த மாதத்தை விட பல கோடி அதிகரித்துள்ளனர். எனில், தடுப்பூசியின் தேவையும் அதிகரிக்கும்தானே? அதை எப்படி மாநில அரசின் தோல்வியாக பார்க்கமுடியும்? ’நாங்கள் கொடுக்கும் அளவு மக்கள் மட்டுமே தடுப்பூசி போடவேண்டும்’ என மக்களை நிர்ப்பந்தப்படுத்துவது எந்தவகையில் சரியாக இருக்கும்?

மக்களே ஆர்வமாக முன்வந்தாலும், அவர்களை புறக்கணிப்பது போலல்லவா இது இருக்கிறது. அதேபோல மத்திய அரசு 13.5 கோடி என ஒதுக்கீடு செய்து, அதற்கு மேலும் மக்கள் வருகின்றனர் என்றால், ஒருவேளை அரசு மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக முன்வருவர் என்பதை சரியாக கணக்கிட தவறியதோ என்ற கேள்வியும் எழுகிறது’ என விமர்சிக்கின்றனர்.

புதிய தடுப்பூசி கொள்கை அமலானதற்கு பிறகு, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகம் 60 விழுக்காடு குறைந்திருப்பதாக இன்று காலையில் தகவல் வெளியான நிலையில், ‘நாங்கள் கூடுதல் தடுப்பூசிகளை தந்துள்ளோம். மாநில அரசுகள் சரியாக அதை விநியோகிக்கவில்லை’ என்பதுபோல மத்திய அமைச்சர் பேசியிருப்பது பல்வேறு விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com