'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!

'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!
'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!

இதுவோ பெருமழைக் காலம். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை மழைநீர் வீடுகளையும், விளை நிலங்களையும் சூழ்ந்து கொண்டுள்ளன. அதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் நம் கைகளில் எந்நேரமும் இருக்கும் மொபைல் போன்களில் சில செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் வானிலை சார்ந்த தகவல்களை துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த செயலிகள் கொடுக்கும் விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளன. மக்களுக்கு உதவும் இந்த கைபேசி செயலிகள் குறித்த தொகுப்பினை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். இந்த செயலிகள் அனைத்தும் இலவசமாக பயன்படுத்தக் கூடியவை.

MAUSAM மொபைல் ஃபோன் அப்ளிகேஷன்: இந்திய வானிலை ஆய்வுத் துறை கடந்த ஆண்டு நாட்டு மக்கள் எளிய முறையில் வானிலை சார்ந்த தகவல்களை விரல் நுனியில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்த கைபேசி செயலிதான் MAUSAM. இந்தியாவின் பல்வேறு நகரங்களின் வானிலை நிலவரங்களை இந்த செயலியின் மூலம் அறிந்துகொள்ளலாம். அதாவது, காஷ்மீர் முதல் குமரி வரையில் உள்ள பெரும்பாலான நகரங்களின் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை பயனர்கள் அறிந்துகொள்ள முடியும். 

நம் லொகேஷனை அடிப்படையாக வைத்து இந்த செயலி இயங்குகிறது. இந்த செயலி இயங்க இணைய இணைய இணைப்பு அவசியம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், சூரிய வெப்ப நிலவரம், காற்றின் வேகம், மழை... மிதமான மழையா, கனமழையா, இடி மின்னலுடன் கூடிய மழையா முதலான வானிலை சார்ந்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை என சீரான நேர இடைவெளியில் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கீழ் இயங்கும் மையங்களின் அதிகாரிகளால் வானிலை சார்ந்த தகவலை கணித்து இந்த செயலியில் வெளியிடுகிறது. 

அன்றைய நாளுக்கான வானிலை நிலவரம் மட்டுமல்லாது, அடுத்து வரும் ஆறு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இந்த செயலியை பயனர்கள் இயக்கலாம். புயல் சார்ந்த எச்சரிக்கையையும் பயனர்களுக்கு இந்த செயலி தருகிறது. 

தமிழ்நாட்டில் ஆடுதுறை, செங்கல்பட்டு, சென்னை, கோவை, குன்னூர், ஈரோடு, ஓசூர், கள்ளக்குறிச்சி, கரூர், காஞ்சிபுரம், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை, மாமல்லபுரம், நாகை, நாமக்கல், உதகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், பெரியகுளம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சேலம், தென்காசி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருப்பூர், திருத்தணி, நெல்லை, திருச்சி, தொண்டி, தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர், ஏற்காடு, விருதுநகர் முதலான நகரங்கள் உட்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களின் வானிலை நிலவரத்தை இதில் அறிந்து கொள்ளலாம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய பகுதிகளின் வானிலை நிலவரமும் இதில் கிடைக்கிறது.

மேலும், ரேடார் பார்வையின் மூலம் மழை மேகங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் முதலானவற்றின் நகர்வுகளை அறிந்து கொள்ளமுடிகிறது. ஒரு பகுதியில் தற்போது மழை பொழிவு உள்ளதா அல்லது வெயில் உள்ளதா என்பதையும் ஐகான்கள் மூலம் டேஷ்போர்டில் இந்த செயலி சுட்டிக்காட்டுகிறது.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு விதமான இயங்கு தளம் கொண்ட போன்களிலும் MAUSAM செயலியை பயன்படுத்தலாம். இதில் கொடுக்கப்படுகின்ற தகவல் அனைத்தும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கொடுப்பதால் துல்லியமாக உள்ளன.

டவுன்லோடு செய்ய > ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.imd.masuam&hl=en_IN&gl=US

Skymet Weather: இந்திய நாட்டின் வானிலை முன்னறிவிப்பு நிலவரத்தை தெளிவாக விளக்கும் மற்றொரு அப்ளிகேஷன் இது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அப்ளிகேஷன். ஆட்டோமெட்டிக் வானிலை மையங்கள் மற்றும் சாட்டிலைட் துணை கொண்டு வானிலையை இந்த செயலி கணிக்கிறது. 14 நாட்களுக்கு முன்னதான வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். 

டவுன்லோடு செய்ய > ஆண்ட்ராய்டு https://play.google.com/store/apps/details?id=com.skymet.indianweather&hl=en_IN&gl=US  

AccuWeather: ஸ்மார்ட்போன் பயனர்கள் பரவலாக பயன்படுத்தும் அப்ளிகேஷனில் இதுவும் ஒன்று. இந்திய நகரங்களின் சூழலை அப்படியே கணித்து சொல்லி விடுகிறது. இதன் பெயருக்கு ஏற்ற வகையில் கணிப்புகள் அக்கியூரேட்டாக உள்ளன. 

டவுன்லோடு செய்ய > ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.accuweather.android&hl=en_IN&gl=US 

The Weather Channel: ஐபோன்களில் உள்ள வானிலை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அப்ளிகேஷனுக்கு தகவல்களை கொடுப்பதே இந்த அப்ளிகேஷன்தான். காற்றின் தரம் குறித்து தகவலையும் இந்த செயலி தருகிறது. 

டவுன்லோடு செய்ய > ஆண்ட்ராய்டு:  https://play.google.com/store/apps/details?id=com.weather.Weather&hl=en_IN&gl=US 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com