ஏ.ஐ கொடுக்கும் செயற்கைக் குரல் - ஆவணப்பட உலகில் தலைதூக்கும் புதிய பிரச்னை!

ஏ.ஐ கொடுக்கும் செயற்கைக் குரல் - ஆவணப்பட உலகில் தலைதூக்கும் புதிய பிரச்னை!
ஏ.ஐ கொடுக்கும் செயற்கைக் குரல் - ஆவணப்பட உலகில் தலைதூக்கும் புதிய பிரச்னை!

ஓர் ஆவணப்படம் கவனத்தை ஈர்த்து, சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்துவது புதிதல்ல. ஆனால், புகழ்பெற்ற சமையல் கலைஞர் ஆந்தோனி போர்டியன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அண்மையில் வெளியாகி இருக்கும் ஓர் ஆவணப் படம் தொடர்பான சர்ச்சை, முற்றிலும் எதிர்பாராததாக அமைந்து திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை, திரை உருவாக்கம் தொடர்பாக இதுவரை இல்லாத புதிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக அமைந்திருக்கிறது.

ஆவணப்பட படைப்பாளிகள் மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த சர்ச்சையில் தீவிரமாக பங்கேற்று வருவதில் இருந்தே, இந்த சர்ச்சை கண்டறியப்படாத எல்லைக்கு அப்பால் சென்று கொண்டிருப்பதை உணரலாம்.

அப்படியென்ன இந்த ஆவணப்படத்தில் பிரச்னை என்று கேட்டால், தகவல் பிழையோ, திரித்துக்கூறலோ, முக்கிய தகவல் விடுபடலோ எல்லாம் இல்லை. இதுபோன்ற தவறுகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லாமல், ஆவணப்பட இயக்குநர் மார்கன் நெவில்லே (Morgan Neville), மறைந்த சமையல் கலைஞர் போர்டியனின் வாழ்க்கையை கரைத்துக் குடித்துவிட்டுதான் படத்தை இயக்கியிருக்கிறார். தகவல்களை சரியாகவே கையாளவும் செய்திருக்கிறார்.

ஆனால், போர்டியன் வாழ்க்கையை அவரே விவரிப்பது போன்ற உத்தியில் அமைந்துள்ள படத்தில், ஒரு சில இடங்களில் செயற்கைக் குரலை பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் பிரச்னைக்கு காரணமாகி இருக்கிறது. ஆம், போர்டியன் பேசாத சில கருத்துகளை, ஆனால் அவர் எழுதிய விஷயங்களை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ - AI - artificial intelligence) நுட்பம் மூலம் செயற்கையாக உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்தத் தகவலை இயக்குநரே பேட்டி ஒன்றில் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சை வெடித்திருக்கிறது.

ஆவணப்படங்கள் எனும் வகையே வரலாறு மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை எனும்போது, ஏ.ஐ உருவாக்கிய செயற்கைக் குரலை, இயக்குநர் பயன்படுத்தியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

செயற்கைக் குரல் உத்தி பயன்பாட்டை ஒரு தரப்பினர் வரவேற்றிருந்தாலும், ஏ.ஐ உதவியோடு டீப்ஃபேக் (DeepFake) எனப்படும் போலி வீடியோக்கள் உருவாக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் காலகட்டத்தில், ஆவணப்படம் ஒன்றில் செயற்கைக் குரல் பயன்படுத்தப்பட்டிருப்பது பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

செயற்கைக் குரல் உத்தி பயன்பாட்டை விட, இதுதொடர்பான தகவலை இயக்குநர் ஆவணப்படத்தில் வெளிப்படையாக குறிப்பிடாதது முக்கிய பிரச்னை என்கின்றனர் விமர்சகரர்கள். இது எழுப்பும் அறம் சார்ந்த கேள்விகளை இயக்குநர் புறந்தள்ளிவிட முடியாது என விமர்சகர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

ஆந்தோனி போர்டியன் சமையல் கலைஞர்களில் ஒரு நட்சத்திரமாக விளங்கியவர். எழுத்தாளராகவும் விளங்கிய போர்டியன், உணவு மற்றும் பயணம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். அவரது குக் டிராவல், அந்தோனி போர்டியந் நோ ரிசர்வேஷன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் தொட்டவை.

சமையல் கலையை, பயண அனுபவத்துடன் இணைந்து, கலாசாரம் மற்றும் மனித இயல்பு சார்ந்த புதிய அனுபவத்தை அளித்த போர்டியன், 2018-இல் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துகொண்டார். ஆனால், இன்னமும் மறக்க முடியாத மனிதராக இருக்கிறார்.

இந்த பின்னணியில்தான், அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட ரோட்ரன்னர் (Roadrunner: A Film About Anthony Bourdain) ஆவணப்படத்தை மார்கன் நெவில்லே இயக்கி வெளியிட்டிருக்கிறார்.

பல அடுக்குகளைக் கொண்ட, இந்த ஆவணப்படம் போர்டியனின் வண்ணமயமான வாழ்க்கையையும், அவரது தற்கொலைக்கு காரணமான யாரும் அறியாத ஒரு இருள் பக்கத்தையும் எந்த அளவுக்கு சித்தரித்துள்ளது என்பது தொடர்பான விவாதம் ஒருபக்கம் இருக்க, இதில் போர்டியனின் செயற்கைக் குரல் இடம்பெற்றிருப்பது எனும் தகவல்தான் அதிக சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

போர்டியனின் வாழ்க்கை ஓர் ஆவணப்படத்திற்கு முழுத்தகுதி கொண்டது என்பது மட்டும் அல்ல, அதற்கான எல்லா தரவுகளையும் கொண்டிருக்கிறது என்பதுதான் விஷயம். போர்டியன் எழுத்தாளர் என்பதால் உணவு பற்றியும் பயணம் பற்றியும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது கருத்துகள் நேர்காணல்களாகவும் பதிவாகியிருகின்றன. இவைத் தவிர, தொலைக்காட்சி தொடர்கள் மூலம் அவர் பேசிய விஷயங்களும் மணிக்கணக்கில் இருக்கின்றன. தவிர, பாட்காஸ்டிங் நிகழ்ச்சி பதிவுகளும் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் கொண்டுதான், போர்டியனே விவரிப்பதுபோல ஆவணப்படத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். போர்டியன் வாழ்க்கை தொடர்பான தரவுகளை திரட்டியதன் மூலம், அவரைப்பற்றி அவரே கூறிய விஷயங்கள் 500 பக்கத்திற்கு தேறியது என்று கூறியிருக்கிறார் இயக்குநர். இந்த தரவுகளே, அவரது குரலிலேயே கதை சொல்லலாம் எனும் எண்ணத்தை கொடுத்தது எனக் கூறியுள்ள இயக்குநர், இந்த கட்டத்தில்தான், போர்டியன் குரலில் இல்லாத ஒரு சில விஷயங்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

இந்தக் குறையை ஈடு செய்வதற்காகத்தான், போர்டியனே பேசினால் எப்படி இருக்குமோ, அதேபோல அவரது குரலில் அந்த கருத்துகளை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கினார். இதற்காக மிகவும் மெனக்கெட்டதாக இயக்குநர் கூறியிருக்கிறார்.

இதற்காக ஏ.ஐ மாதிரிக்கு போர்டியன் குரலை பத்து மணி அளவிலான குரலாக கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குரல் மாதிரியை வைத்துக்கொண்டு அதேபோன்ற குரலை பேசிக்காட்டும் திறன் கொண்ட ஏ.ஐ அல்கோரிதம் போர்டியன் எழுத்துகள் சிலவற்றை அவரது குரலில் அளித்துள்ளது.

இந்த செயற்கை குரலே இயக்குநருக்கு கை கொடுத்துள்ளது. குறிப்பிட்ட இ-மெயில் ஒன்றை போர்டியன் வாசிப்பது உள்ளிட்ட மூன்று இடங்களில் செயற்கைக் குரலில் போர்டியன் பேச்சை கையாண்டிருக்கிறார்.

செயற்கை குரல் என்றாலும் இந்த உருவாக்கத்தை போலி என்று சொல்ல முடியாது. போர்டியன் எழுதிய கருத்துகளை அவரது குரலில் மறு உருவாக்கம் செய்துள்ளனர். இதை தொழில்நுட்ப அற்புதம் என்றும் சொல்லலாம். அந்த வகையில், திரைக்கதையில் ஏற்பட இருந்த ஒரு குறையை நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டு நிரப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக 'ஜிகியூ' எனும் இதழுக்கான விரிவான பேட்டியில் இயக்குநர் இதை எல்லாம் விவரித்திருக்கிறார். இந்த தகவல் தான், சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. போர்டியன் ரசிகர்கள் இந்த தகவலை குறை கூறியுள்ளனர் என்றால், விமர்சர்கர்கள் இந்த உத்தியை அறம் மீறிய செயல் என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த ஆவணப்படத்தை விமர்சனம் செய்த சீன் பர்ன்ஸ் எனும் விமர்சகர், டீப்ஃபேக் முறையில் செயற்கைக் குரலை பயன்படுத்தியதை இயக்குநர் வெளிப்படையாக தெரிவிக்காததை வன்மையாக கண்டித்துள்ளார். விமர்சனம் எழுதியபோது இந்த தகவல் தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக 'நியூயார்க்கர்' இதழில் வெளியாகியுள்ள விரிவான அலசல் கட்டுரையில், கம்ப்யூட்டர் சிமுலேஷன் மற்றும் டீப்ஃபேக் யுகத்தில், இறந்த மனிதரின் செயற்கைக் குரலை பயன்படுத்துவது தொழில்நுட்பத்தின் மிக மோசமான பயன்பாடு என்று சொல்ல முடியாவிட்டாலும், இதைக் கண்டுணர முடியாதத் தன்மை இனம் புரியாத உணர்வை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல வேறு பல விமர்சகர்களும் கடுமையான கருத்துகளை கூறியுள்ளனர். செயற்கைக் குரல் பயன்பாடு தொடர்பான தகவல் படத்தில் குறிப்பிடப்படாதது, ஆவணப்பட தகவல் பகிர்வு தொடர்பான அறம் சார்ந்த புதிய கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

வேறு பல திசைகளிலும் இந்த விவாதம் நீள்கிறது. 'வெல்கம் டூ செசீன்யா' எனும் படத்தில், செசீன்ய போராளிகள் அடையாளத்தை மறைக்க அவர்கள் முகங்களை டீப்ஃபேக் நுட்பம் மூலம் மாற்றியிருப்பதை 'நியூயார்க்கர்' கட்டுரை சுட்டிக்காட்டிவிட்டு, இது தொடர்பான குறிப்பு பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு வல்லுநரான கேத்தே ஹோ (Karen Hao), இவை எல்லாம் தொழில்நுட்பத்தின் படைப்பூக்கமான பயன்பாடுகள், ஆனால் ஆரம்பகட்டத்தில் இவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் எச்சரிக்கை தேவை என கூறியிருக்கிறார்.

ஆனால் ஒன்று, போர்டியனின் குரல் பயன்பாடு, இயற்கையும், செயற்கையும் கலந்திருப்பதாக அமைந்திருக்கிறது என்கிறார். இந்தக் குரல் போலியும் இல்லை, உண்மையும் இல்லை; இதில் உள்ளவை அவர் உண்மையில் எழுதியவை என்பது எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறது என அவர் கூறியுள்ளார்.

ஆம், நவீன தொழில்நுட்பமும், அதன் படைப்பூக்கமான பயன்பாடும் பல கதவுகளை திறந்திருப்பதோடு, எது உண்மை, அதை கண்டறிவது எப்படி? என்பது போன்ற சவாலான கேள்விகளையும் எழுப்புகிறது.

- சைபர்சிம்மன்

> தகவல் உறுதுணை: gq.com | newyorker.com

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com