அழிந்துவரும் மலைநெல் சாகுபடி: ஒரே குடும்பமாக மீட்டெடுக்க போராடும் மேல்மலை விவசாயிகள்..!

அழிந்துவரும் மலைநெல் சாகுபடி: ஒரே குடும்பமாக மீட்டெடுக்க போராடும் மேல்மலை விவசாயிகள்..!
அழிந்துவரும் மலைநெல் சாகுபடி: ஒரே குடும்பமாக மீட்டெடுக்க போராடும் மேல்மலை விவசாயிகள்..!

கொடைக்கானலில் அழிந்துவரும் மலைநெல் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மேல்மலை விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பீன்ஸ், அவக்கோடா, பலா, கொய்யா, உருளை, பூண்டு கேரட் என மலைக்காய்கறிகள் மற்றும் பழவகைகளை மட்டுமே விவசாயம் செய்வதாக நினைக்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியின மக்கள் பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராம பகுதிகளில் மலை நெல் சாகுபடியை பிரதானமாக செய்து வந்துள்ளனர்.

மலைவாழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக மலை நெல்லையே தங்களது உணவு தேவைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் மலைநெல் விவசாயம், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டதாக மேல்மலை கிராம மக்கள் கூறுகின்றனர். அதீத சத்துக்கள் நிறைந்த மலை நெல்லில் இருந்து கிடைக்கும் சிவப்பு அரிசியைப் பற்றி விவசாயி நாஞ்சில் மனோகரன் நம்மிடம் விளக்கினார்.

எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து விவசாயம் செய்துவருகிறோம். இதில் அதிகமாக மலைநெல் சாகுபடி செய்ததாக எங்க அப்பா சொல்லியிருக்கார்.; விதைத்த காலத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்துதான் அறுவடை செய்யமுடியும். அதனால் இந்த மலைநெல் விவசாயத்தை யாரும் விரும்பி செய்வதில்லை. அதேபோல மலைநெல் விவசாயத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும். மழையை நம்பி இந்த விவசாயத்தை செய்ய முடியாது. இப்படியாக யாரும் விரும்பி பயிரிடப்படாததால் அழிந்துவரும் இந்த மலைநெல் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கோம்.

ஆரம்ப காலத்துல விவசாயம் என்றாலே நெல் விவசாயம்தான் செய்வாங்க. அதுக்கு அப்புறம்தான் பூண்டு கேரட் என மலைபயிர்வகைகளை விவசாயம் செய்ய ஆரம்புச்சாங்க. இருபது வருசத்திற்கு முன்னாடிகூட மலையில இருக்குற எல்லாருமே மலைநெல் போட்டிருந்தாங்க அதற்குபிறகு தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைநெல் பயிரிடுவதை நிறுத்திவிட்டார்கள். அழியும் நிலையில் இருந்த மலைநெல் விவசாயத்தை மீட்டெடுக்க போனவருசம் 4 செண்டுல பயிரிட்டோம். இப்ப 40 செண்டுல போட்டிருந்தோம். இப்பதான் அறுவடை முடிந்தது. அடுத்து வருசம் ஒரு ஏக்கர்ல பயிரிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம்.


கார்த்திகை மாசம் நடவுசெய்து ஆடி மாசம் அறுவடை செய்யும் மலைநெல்லுக்கு நாட்டுமாட்டின் சாணத்தை மட்டுமே உரமாக பயன்படுத்துகிறோம். இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி சிவப்பு நிறத்தில் கேரளா அரிசிபோல இருக்கும். என்னோட சின்னவயசுல இந்த நெல்லுச்சோற சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப டேஸ்டா இருக்கும் கொஞ்சமாக சாப்பிட்டாலே போதும் நாள்முழுதும் நல்லா எனர்ஜியாக இருக்கும். சிவப்பு கலரில் இருக்கும் வடித்த கஞ்சியைகூட கீழே ஊற்றாமல் குடித்துவிடுவார்கள்.

கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் இந்த மலைநெல்லை நாங்கள் யாருக்கும் விற்பனை செய்வதில்லை. யாராவது கேட்டால் இலவசமாகவே நெல்லாகவோ சோறாகவோ கொடுப்போம். நாங்கள் மலைநெல் விவசாயம் செய்வதை பார்த்து அருகில் இருப்போரும் விதைநெல் கொடுங்கள் நாங்களும் போடுறோம் என்று கேட்டிருக்கார்கள். தருவதாக சொல்லியிருக்கோம் எப்படியோ மலைநெல் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com