தெரிவுகளில் தெளிவு... நடனத்தில் தெறிப்பு... - சாய் பல்லவி தடம் பதித்தது எப்படி?

தெரிவுகளில் தெளிவு... நடனத்தில் தெறிப்பு... - சாய் பல்லவி தடம் பதித்தது எப்படி?
தெரிவுகளில் தெளிவு... நடனத்தில் தெறிப்பு... - சாய் பல்லவி தடம் பதித்தது எப்படி?

திரையுலக வரலாற்றில் ஒரே படத்தில் காணாமல் போன நடிகைகள் பலர் உண்டு. அப்படியிருக்க, முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞராக வலம் வரும் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. ஆனால், ஒரே படத்தில் ஓஹோ என ஹிட்டடித்தவர் சாய் பல்லவி. 2015-ஆம் மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட 'பிரேமம்' படம் மூலமாக தென்னிந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படத்தில் மலர் டீச்சராக நடித்து மலையாளத்தில் மட்டுமில்லாது, தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் முதல் படத்திலேயே தன் வசப்படுத்தினார். இந்தப் பயணத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதில், அவரது நடனத் திறனும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது சமீபத்திய 'யூடியூப் ஹிட்ஸ்'களே சான்று.

மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை முதலில் அனைவரும் யாரோ மலையாள நடிகை என்றுதான் நினைத்தனர். ஒரு படத்தில் ஒரு நடிகையை பிடித்துவிட்டால், அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கத்தான் ரசிர்களால் முடியாதே. அப்படியொரு கியூரியாசிட்டியோடு தேடி அலைந்தவர்களுக்கு கிடைத்தது, ஓர் அடடே அப்டேட். 'இது நம்ம கோத்தகிரிக்காரப் பொண்ணுப்பா' என சாய் பல்லவியை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். சாய் பல்லவி வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் என்பதால் ரசிகர்கள் மனதுக்கு இன்னும் நெருக்கமானார்.

அத்துடன், சிறு வயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சாய் பல்லவி 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தததும் தெரியவந்தது. ஈ டிவி தெலுங்கில் ஒளிபரப்பான 'தி அல்டிமேட் டான்ஸ் ஷோ'விலும் கலந்து கொண்டு கலக்கியவர்.

அப்போதுதான் ரசிகர்களுக்கு மலர் டீச்சர் எப்படி அந்த ஒரே டான்ஸ் சீனில் மனதை கொள்ளையடித்தார் என்ற மர்மம் வெளியானது. பெற்றோரின் ஆசைக்காக மருத்துவம் படித்திருந்தாலும், சாய் பல்லவியின் விருப்பம் என்னவோ எப்போதும் நடனமாகவே இருந்தது. தன்னுடைய நடனத் திறமையை நிரூபிக்க காத்திருந்த சாய் பல்லவிக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' திரைப்படம் மிகப்பெரிய பிளாட்பார்மை அமைத்துக் கொடுத்தது.

'பிரேமம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, முழு நேர நடிகையாக மட்டுமே தொடர முடிவெடுத்தார். மருத்துவம் என்பது உயிர் காக்கும் சேவை என்பதால் நடிப்பையும், அதையும் ஒன்றாக தொடர சாய் பல்லவி விரும்பவில்லை.

மீண்டும் மலையாளத்திலேயே 2016-ஆம் ஆண்டு வெளியான 'கலி' என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். கோவக்கார கணவனைக் கண்டு அஞ்சி நடுங்கும் அஞ்சலி கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பினார். இரண்டாவது படமும் சாய் பல்லவி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தமிழுக்கு எப்போது வருவார் என கோலிவுட் காத்திருந்த சமயத்தில், டோலிவுட் முந்திக்கொண்டது. வருண் தேஜுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் 'பிடா' படத்தில் நடித்ததன் மூலம் 2017-இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் சாய் பல்லவி நடனமாடிய 'வச்சிந்தே' என்ற பாடல் இன்றளவும் யூடியூப்பில் 309 மில்லியன்களையும் கடந்து சக்கைப் போடு போட்டு வருகிறது.

மலர் டீச்சர் ஆடிய ஆட்டத்தை எல்லாம் 'பானுமதி' தூக்கி சாப்பிட்டுவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதையடுத்து நானி உடன் 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தில் நடித்தார். 

தமிழ்ப் பெண்ணான இவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' மூலமாக தமிழில் கால் பதித்தார். அறிமுக படத்தில் எந்தக் கதாநாயகிகளும் ஏற்க தயங்கும், அம்மா கேரக்டரை மிகவும் அழகாக கையாண்டார். அதுவும் அபார்ஷன் செய்யப்பட்ட குழந்தையின் ஆத்மாவிற்கு அம்மாவாகவும், காதல் கணவரின் உயிரை காக்கப் போராடும் மனைவியாகவும் நடிப்பில் வேற லெவலுக்கு மிளிர்ந்தார்.

அதே ஆண்டு 'கரு' படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு அப்படியே எதிர்மாறாக 'மாரி 2' படத்தில் நடித்து மிரள வைத்தவர். 'பிரேமம் மலர் டீச்சரா இது?' என ரசிகர்களே ஆச்சர்யப்படும் வகையில் ஆட்டோ டிரைவர் ஆனந்தியாக அராத்து கேரக்டரில் நடித்திருந்தார். பக்காவான சென்னை ஸ்லாங், நடை, உடை பாவனை என ஆட்டோ ஓட்டும் பெண்ணாகவே அசத்தியிருப்பார். மலர் டீச்சரை அடுத்து 'மாரி 2' ஆனந்தி கதாபாத்திரம் சாய் பல்லவி ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடன வேட்கைக்கு சரியான சவாலாக 'ரவுடி பேபி' பாடல் அமைந்தது. பிரபுதேவா கோரியோகிராபியில் தனுஷ், சாய் பல்லவி ஆட்டம் போட்ட 'ரவுடி பேபி' பாடல் தற்போது வரை 1200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் பாடலில் சின்ன, சின்ன ஸ்டெப்ஸ்களில் கூட தனுஷுக்கே டஃப் கொடுத்து அசத்தினார்.

அதன்பின்னர் சாய் பல்லவி தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை. இருந்தாலும் சாய் பல்லவி நடித்த மைதிலி கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சாய் பல்லவி மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2019-ஆம் ஆண்டு சர்வனாந்த் உடன் 'படி படி லேச்சே மனசு' என்ற படத்திலும், ஃபகத் பாசிலுடன் 'அதிரன்' என்ற மலையாள படத்திலும் நடித்தார். இரண்டு கதாபாத்திரங்களுமே சாய் பல்லவிக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

தற்போது சாய் பல்லவி ராணாவுக்கு ஜோடியாக விராடா 'பர்வம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 1990-களில் தெலங்கானா கிராமத்தில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. வேணு உடுகுலா இயக்கியுள்ளார். இதுவரை சாஃப்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய் பல்லவி, இந்தப் படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ரசிகர்கள் இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சாய் பல்லவி நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் 'லவ் ஸ்டோரி'. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள 'சாரங்க தரியா' பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது சாதனை படைத்து வருகிறது. பாவாடை, தாவணியில் வெடித்து சிதறும் மத்தாப்பூ சிரிப்புடன் சாய் பல்லவி ஆடிய நடனத்தில் ஒட்டுமொத்த ரசிகர்கள் பட்டாளமும் மயங்கி கிடக்கிறது. பிரபல நடிகர்களைப் போலவே 'சாய் பல்லவி நடனமாடினாலே அந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்' என பேச்சு கிளம்பியுள்ளது.

அலட்டல் மேக்கப், ஓவர் ஆக்டிங் இல்லாமல், நீண்ட தலைமுடி, முகத்தில் அங்காங்கே சின்னச் சின்ன பருக்கள், உதட்டோரம் எப்போதும் பளீச் புன்னகை என பாந்தமான அழகுடன் பக்கத்து வீட்டுப் பெண் போல் வலம் வருகிறார் சாய் பல்லவி. அத்தோடு கதையையும், தன்னுடைய கதாபாத்திரத்திரத்தையும் தெரிவுசெய்து நடித்து வருகிறார். தனது நடனம் மற்றும் நடிப்பை மட்டுமே நம்பி திரையுலகில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி மீது ரசிகர்களுக்கு துளியும் கூட கவனம் குறையாதது குறிப்பிடத்தக்கது.

- ஜெனிபர் டேனியல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com