கொரோனா கால மாணவர் நலன் 24:பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தில் தொடரும் முரண்... எது உண்மை?

கொரோனா கால மாணவர் நலன் 24:பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தில் தொடரும் முரண்... எது உண்மை?
கொரோனா கால மாணவர் நலன் 24:பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தில் தொடரும் முரண்... எது உண்மை?

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைய தொடங்கிய மார்ச் 2020 முதல் அக்டோபர் 2021 வரையிலான 20 மாத கால இடைவெளியில் (முதல் அலை மற்றும் இரண்டாவது அலை கொரோனா), இந்தியாவில் 19.17 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையோ இழந்திருப்பதாக லேன்செட்டின் (Lancet) சமீபத்திய ஆய்வறிக்கை சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு தற்போது முழுமையாக மறுத்துள்ளது. மத்திய அரசு தரப்பு வாதத்தையொட்டியே, இந்த அத்தியாயம் கொரோனா கால மாணவர் நலன் அமையவுள்ளது.

லேன்செட் ஆய்வில், “அனைத்து நாடுகளிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வு செய்தத்தில், 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் குறைந்தபட்சம் 52 லட்சம் பேராவது தங்களது பெற்றோர் / பாதுகாவலர் என யாராவது ஒருவரை கொரோனாவால் இழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு செய்யப்பட்ட காலத்திலேயே, இறுதி 6 மாத காலத்தில்தான் (அதாவது மே 1, 2021 - அக்டோபர் 31, 2021 வரை) இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பெரு, தென் ஆப்ரிக்கா, இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 10 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிகளவில் பெற்றோரை இழந்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் அப்படி 12.45 லட்ச குழந்தைகள் உள்ளனர். இதேபோல 0 - 4 வயதிலுள்ள குழந்தைகள் 2.66 லட்ச குழந்தைகளும், 5 - 9 வயதிலுள்ள குழந்தைகள் 2.66 லட்ச குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

லேன்செட்-டின் இந்த ஆய்வு முடிவு, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் `கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளை’ கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட `பால் சவராஜ் - கோவிட் கேர்’ என்ற தளம் அளிக்கும் தரவுகளின்படி 1,53,827 குழந்தைகள்தான் இந்தியாவில் கொரோனாவால் பெற்றோரில் ஒருவரையோ, இருவரையோ இழந்துள்ளனர்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் இருப்பதில்லை. மாறாக பிரத்யேகமாக வைக்கப்படும். ஆகவே இதற்கான உரிமையை பெற்று தரவை பெற்றிருக்கிறது `தி பிரிண்ட்’ என்ற ஆங்கில இணையதளம். அந்த தரவில், “கடந்த மார்ச் 1, 2020-லிருந்து 10,386 குழந்தைகள் ஆதரவற்று போயுள்ளனர். போலவே 1,42,949 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 492 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒடிசாவில் தான் அதிக குழந்தைகள் (26,318) பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்துள்ளனர். இதற்கடுத்த இடத்தில் மகாராஷ்ட்ரா (20,429) உள்ளது. மகாராஷ்ட்ராவில் அக்குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்தோ, கைவிடப்பட்டோ உள்ளனர். அடுத்தடுத்து குஜராத்தில் 14,934 குழந்தைகளும், தமிழ்நாட்டில் 11,908 குழந்தைகளும் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல இந்த பால் சவராஜ் தளத்தில், பெற்றோர் இருவரையும் குழந்தைகள் - பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை என பல தரவுகள் உள்ளன. இந்தத் தரவுகளை, ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் தங்கள் மாவட்ட பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய எண்ணிக்கை நிலவரத்தை பதிவேற்றுவர்.

தற்போது லேன்செட்டின் ஆய்வை கண்ட `பால் சவராஜ் - கோவிட் கேர்’ தளம் சார்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கனாகோவிடம், ஆங்கில தளமொன்று கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் “அவர்கள் தந்திருக்கும் தரவுகளின் அடித்தளத்தைப் பகிருமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்றுகூறியுள்ளார்.

மத்திய அரசின் கணக்கும், லேன்செட்டின் ஆய்வுக்கணக்கும் லட்சக்கணக்கில் பெருவாரியாக மாறுவது, அதிர்ச்சியளிக்கும் விஷயமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com