புதிய நாடாளுமன்றத்தில் கோலோச்ச போகும் சோழர்களின் செங்கோல்! நேரு காலத்திய வரலாற்று பின்னணி

ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடித்த பின் அச்செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.
அமித்ஷா, செங்கோல், நேரு
அமித்ஷா, செங்கோல், நேருPT Web

’செங்கோல்’ ஆட்சி என்ற சொல்லை கேள்விபட்டு இருக்கிறீர்களா?

ஓரு நாட்டை ஆளும் அரசன் நீதி, நேர்மை தவறாத நல்ல ஆட்சியை மக்களுக்கு வழங்குவதன் அடையாளமாக அவன் கையில் செங்கோல் இருக்கும். இந்த செங்கோல் கொண்டு ஆட்சி செய்பவன் நீதி நேர்மை தவறமாட்டான் என்பது நம்பிக்கை. அதேபோல் ஆட்சி மாறும் சமயத்தில், அரசன் தனது மணிமகுடத்தை, அரியணையை செங்கோலை, புதிய அரசரிடம் வழங்கும் முறையானது நம் தமிழ் நாட்டில் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது.

இதற்கு அடையாளமாக சிலப்பதிகாரத்தில், செய்யாத குற்றத்திற்காக கோவலன் தண்டிக்கப்பட்ட சமயம் கண்ணகி, பாண்டிய மன்னரை பார்த்து, “அரசரே, நீர் அறம் வழுவினீர், உன் செங்கோல் வளைந்தது” என்றாள்.

’இச்சொல்கேட்டு தான் செய்த தவறை உணர்ந்த பாண்டிய மன்னன், தனது உயிரை தந்து செங்கோலை நிமிர்த்தினான்’ என்ற செய்தியானது சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

’வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது’

(சிலப்பதிகாரம்: 25: 98-99)

அதேபோல், வள்ளுவரும் திருக்குறளில் செங்கோண்மை என்ற அதிகாரத்தில் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லியிருப்பார் வள்ளுவர்.

எடுத்துக்காட்டாக,

'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி’

அதாவது, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதேபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர் என்று செங்கோலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் உணர்த்துகிறார்.

இத்தகைய செங்கோல் எப்படி வந்தது? யார் இதை அறிமுகப்படுத்தினார்கள்?

மதுரையை தலைநகரமாகக்கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் தீவிர சிவ பக்தன் ஆக திகழ்ந்து வந்தான். அவன் தனது ஆட்சி காலத்தில், திகம்பர நாத சித்தருக்காக, பெருங்குளத்தில் ஆதீனம்(மடம்) ஒன்றை அமைத்து தந்தான். பாண்டிய மன்னரின் நீதி, நேர்மை, கடமை தவறாத ஆட்சியைக் கண்ட திகம்பர நாத சித்தர், மன்னரின் ஆட்சியை பாராட்டும் விதமாக செங்கோல் ஒன்றை தந்தார்.

அந்நிகழ்வுக்கு பிறகு கொற்கைப் பாண்டியர்கள் முடிசூடும் போது பெருங்குளம் மடாதிபதிகளிடமிருந்து செங்கோலைப் பெற்றுக்கொள்ளும் வழக்கம் உண்டாயிற்று. இதனைத்தொடர்ந்து மதுரைப் பாண்டியர்கள், திருமலை நாயக்கர் அவருக்கு பின் வந்த நாயக்க மன்னர்கள் அனைவரும் செங்கோல் ஆட்சியை பின்பற்றி வந்தனர்.

இதனால் ஆதினத்திற்கும் செங்கோல் ஆதினம் செங்கோல் மடம் என்ற பெயரும் உண்டாயிற்று. இது ஒரு பக்கம் இருக்க..

இந்திய சுதந்திரத்தின் போது நேருவின் கைகளில் தமிழகத்தின் செங்கோல்!

1947 ஆகஸ்ட் 13 நாள் மௌண்ட்பேட்டன் பிரபு, நேருவை சந்தித்து, “இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்போகிறோம்” என்றதும், நேரு இச்செய்தியை இராஜாஜியிடம் தெரிவித்து அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு தெரிவித்தார். மூதறிஞர் இராஜாஜி திருவாவடுதுறையில் இருந்த ஆதினத்தைத் தொடர்பு கொண்டு “நல்லாச்சி அமைய செங்கோல் கொடுத்து ஆசி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதன்படி ஆதினத்தின் சார்பாக, சைவச் சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று பிரத்தேகமாகச் செய்யப்பட்டு, ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி, தம்பிரான் சுவாமி, ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வரம் வித்வான் " நாதஸ்வர சக்கரவர்த்தி " திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இவர்கள் அனைவரும் தனிவிமானத்தில் செங்கோலுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடித்த பின் அச்செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள். ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தின் போது செங்கோலானது கடைப்பிடிக்கப்படவேண்டும்.

அரசுச்சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் இன்று பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள ஆனந்த பவனில், கண்ணாடி பேழையில் இருக்கிறது.

புதிய பாராளுமன்றத்தில் செங்கோலின் இடம்.. அமித்ஷா சொன்னது என்ன?

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. புதிய பாராளுமன்றத்தில் செங்கோலானது நிறுவும் திட்டம் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நாளில், புதிய பாரம்பரியமும் துவங்க உள்ளது.

சோழர் சாம்ராஜ்யத்தை சேர்ந்த செங்கோல் இந்திய சுதந்திரத்தை குறிக்கும் வகையில், முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து ஆதீன குழு டெல்லிக்கு பயணம் செய்து செங்கோலை பிரதமரிடம் ஒப்படைக்கும். இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோல் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும். செங்கோலுக்காக புதிய வலைத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வை அரசியலுடன் இணைக்கக்கூடாது. நல்ல நிர்வாகமானது சட்டத்தின் ஆட்சியில் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

சிறப்பு மிக்க இந்த செங்கோல் எப்படி தயார் செய்யப்பட்டது, அதன் பெருமைகள் என்ன என்பது குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் தரப்பில் நமக்கு அளித்த பேட்டியினை கீழே உள்ள காணொளி தொகுப்பில் பார்க்கலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com