அருண் ஜெட்லி சாதித்தாரா? சொதப்பினாரா?

அருண் ஜெட்லி சாதித்தாரா? சொதப்பினாரா?

அருண் ஜெட்லி சாதித்தாரா? சொதப்பினாரா?
Published on

மோடி அரசின் ஐந்தாவது பட்ஜெட்டும், ஆட்சியின் இறுதியான வரவு செலவு அறிக்கையும் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. பணமதிப்பிழப்பிற்கு பின்னான பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி உள்நுழைத்தலின் குழப்பங்கள், தொடர் மந்தநிலை, சரியும் ஏற்றுமதிகள் என்கிற சூழலில் இந்த பட்ஜெட் முக்கியமானதாகிறது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி சாதித்தாரா, சொதப்பினாரா என்பதைப் பார்ப்போம்

மோடி அரசின் முதல் நான்கு பட்ஜெட்கள் ‘இந்தியாவிற்கான’ பட்ஜெட்டாக இருந்தன. இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் கிராமங்களுக்கும், விவசாயிகளுக்கும் போதுமானதாக அவை இருந்ததில்லை. அதனாலேயே எதிர்க் கட்சிகளால் ‘கோட்டு சூட்டு சர்க்கார்’ என்கிற அவப்பெயருக்கு மத்திய அரசு ஆளானது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் நிதியமைச்சர் இந்த முறை முழுமையாக விவசாயம், பொது சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு என்கிற மூன்று தளங்களில் 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை அமைத்து இருக்கிறார். 

விளைப்பொருட்கள் சந்தைப்படுத்துதல் சாத்தியங்களுக்கு 2000 கோடிகள், விளைப் பொருட்கள் பதப்படுத்துதல் துறைக்கு அதிக ஒதுக்கீடு, குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு உயர்வு, ஆபரேஷன் க்ரீன் என்கிற திட்டத்தின் கீழ் 500 கோடிகள் என்று விவசாயத் துறையினையும், விவசாயிகளையும் குறி வைத்து சலுகைகளும், புதிய திட்டங்களையும் அருண் ஜெட்லி தந்திருக்கிறார். 

பொது சுகாதாரத்தில், தமிழகத்தில் இருக்கும் ‘முதல்வர் காப்பீட்டுத் திட்டம்’ போன்ற தேசிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் 10 கோடி பயனாளிகள் பயனடைவார்கள் என்றும், 5 லட்ச ரூபாய் வரைக்கும் காப்பீடு தரப்படும் என்று சொல்லி இருக்கிறார். ”ஆயுஷ்மான் பாரத்” என்கிற திட்டத்தின் கீழ் 1.5 இலட்சம் சுகாதார மையங்கள் வருமென்றும் திட்டம் இருக்கிறது. மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒன்று என்கிற விகிதத்தில் மருத்துவக் கல்லூரிகள் வரும் என்றும் சொல்லி இருக்கிறார். இதன் களரீதியான சாத்தியங்கள் பற்றி ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. முதலாவது பட்ஜெட்டில் பலத்த எதிர்ப்பார்ப்புகளோடு அறிவிக்கப்பட்ட 'ஸ்வச் பாரத்’ திட்டம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதும், எத்தனை கழிப்பறைகள் சொல்லப்பட்டது, கட்டப்பட்டது, ‘கணக்குக்’ காட்டப்பட்டதற்குமான இடைவெளிகளை பல்வேறு டேட்டாக்கள் படம் பிடித்துக் காடி இருக்கின்றன. 

தொழிலாளர் ப்ராவிடண்ட் பண்டில் புதிய பணியாளர்களுக்கான சேமிப்பில் 12% அரசே அடுத்த மூன்று வருடங்களுக்கு செலுத்தும். டிஜிட்டல் இந்தியாவிற்கான ஒதுக்கீடு 3073 கோடிகளாக இரடிப்பாகிறது. ரயில்வே மற்றும் விமானத் துறைகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு குறிப்பாக சாலைகள் மற்றும் ரயில்வேகளுக்கான ஒதுக்கீடு மேலெழுந்து இருக்கிறது. 

கேட்க பிரகாசமாக எல்லாமே இருந்தாலும், ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் சிக்கல்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு பத்து கோடி பேருக்கான காப்பீடு தொகை 5 இலட்சம், அதன் ப்ரீமியம் 1% ரூ. 5,000 என்றால் வருடாந்திர ப்ரீமியம் மட்டுமே 5 இலட்சம் கோடிகள் வருகிறது. ஆனால் பொது சுகாதார நிதி ஒதுக்கீட்டில் போன பட்ஜெட்டை விட 3% மட்டுமே அதிகரித்து இருக்கிறது. ஆக நிதியமைச்சர் எதை வைத்து இதை சாத்தியப்படுத்துவார் என்று தெரியவில்லை. விவசாயத்திற்கான ஒதுக்கீடுகள், சந்தைப்படுத்துதல்கள் என்பது ஒரு கட்டமைப்பு அது ஒரு வருடத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஏகப்பட்ட சமூக திட்டங்களின் மீதான நிதி குறைக்கப்படாமல் இது சாத்தியப்படாது.

சம்பளம் வாங்குகின்ற மிடில் கிளாஸிற்கு இந்த பட்ஜெட்டில் எந்த வருமான வரி சலுகைகளும் கிடையாது. மாறாக ஒரளவுக்கு படித்த, ம்யூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யக் கூடிய, குடும்பங்களின் வருவாய் பயன்கள் ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு 10% வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகப் போடப்படும் கூடுதல் வரி (Cess) 3% லிருந்து 4% ஆக உயர்ந்திருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிச்சுமையை உயர்த்தி இருப்பதால் அன்றாடம் புழங்கும் பல பொருட்களின் விலை ஏறும். பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. நிதிப் பற்றாக்குறை விகிதத்தை போன நிதியாண்டும், இந்த நிதியாண்டும் கடந்து இருப்பதால் அது வட்டி விகிதங்களை உயர்த்தும். 

2014-2016 இறுதி வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு $40 தாண்டவில்லை. அதனால் கிடைத்த ‘அன்னிய செலவாணி ஜாக்பாட்டினை’ மத்திய அரசு வீணடித்து இருக்கிறது என்கிற நிதர்சனம் இன்றைக்கு நிதியமைச்சருக்கு புரிகிறது போலும். இப்போது பேரல் $70னை தாண்டி இருக்கிறது. ஏற்றுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் பெருநிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகின்றன. தேவைக்கு அதிகமாகவே உற்பத்திக்கான சாத்தியங்கள் பயன்படுத்த முடியாமல் இங்கிருக்கின்றன. ஆக உள்நாட்டு துறை தேவையை, உற்பத்தியை சீரமைக்கும், மேலுயுர்த்தும் எந்த புதிய திட்டங்களோ, பார்வைகளோ இந்த பட்ஜெட்டில் இல்லை. மாறாக ஏராளமான புதிய செலவீனங்களை நிதியமைச்சர் உருவாக்கி இருக்கிறார். இதற்கான வருவாய் ஆதாரங்கள் போதுமானவையா என்பது பற்றிய முழுமையான தரவுகளும் இல்லை. 

நிதியமைச்சர் பணமதிப்பிழப்பிற்கு பின்னான நேரடி வருமான வரி உயர்தலையும், ஜி.எஸ்.டி வருவாயையும் அதிகமாக முன் வைத்து ஏராளமான புதிய திட்டங்களை அள்ளித் தெளித்து இருக்கிறார். இதன் களரீதியான சாத்தியங்கள், அதற்கான ஆள் பலம், நிதி மூலம் என பல கேள்விகள் இன்னமும் பதிலளிக்கப் படாமல் இருக்கின்றன. ஏற்கனவே பணிச்சுமையோடு இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதிரியான கூடுதல் பணிகள் இன்னமும் அழுத்தத்தைத் தரும். சாமான்யர்களுக்கான பட்ஜெட்டாக இது மத்திய அரசால் முன் வைக்கப்பட்டாலும், பல்வேறு உயர்வுகளால் சாமான்யர்களை மேலும் அழுத்தும் பட்ஜெட்டாகவே இது நிலைபெறும். 

பாஜக இழந்திருக்கக் கூடிய கிராமப் புற, சிறு நகர வாக்காளர்களை மையப்படுத்தி வழங்கப் பட்டிருக்கும் பட்ஜெட். ஆக 2018-இல் நடைபெறக் கூடிய எட்டு மாநில தேர்தல்களில் பேசுப் பொருளாக பேசப்படுவதற்கும், 2019-தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது அமைந்திருக்கிறது. பட்ஜெட்டாக இல்லாமல், இது பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் போல தான் இருக்கிறது என்பதை பொருளாதார நிபுணர்களால் சுலபமாக சொல்லி விட முடியும்.  ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், 2019 தேர்தலை எதிர்க் கொள்ளவும் இது தாக்கல் செய்யப் பட்டு இருக்கிறது. அந்த நோக்கத்தில் மோடி அரசு முழுமையாக களமிறங்கி வெற்றி காணுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com