'குளு குளு' ஊட்டிக்கு 'சிக்குபுக்கு' ரயிலிலே...! - மலை ரயிலின் கதை தெரியுமா?

'குளு குளு' ஊட்டிக்கு 'சிக்குபுக்கு' ரயிலிலே...! - மலை ரயிலின் கதை தெரியுமா?
'குளு குளு' ஊட்டிக்கு 'சிக்குபுக்கு' ரயிலிலே...! - மலை ரயிலின் கதை தெரியுமா?

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் உண்டு. பெரும்பாலும் அந்த பாரம்பரியங்கள் எல்வாமே கட்டட கலைகளாக பல்லாண்டு காலமாக வாழும் சாட்சியாக இன்றளவும் நிலைத்து நின்று வருகிறது. அப்படிப்பட்ட பாரம்பரிய சின்னங்களை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்க ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏப்ரல் 18-ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

2022-க்கான இத்தினத்தின் முழக்கமாக, “பாரம்பரியமும் காலநிலையும்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாரம்பரிய தினத்தில் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள், சிற்பங்கள், கட்டடங்கள் ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் நம் தமிழகத்தில் இருக்கும் ரயில் ஒன்றுக்கு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து கெளரவித்தது. அதுதான் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் "ஊட்டி மலை ரயில்".

நூற்றாண்டு காலமாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சியை, தெற்கு ரயில்வே மற்றும் டெல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை மேற்கொண்டன.

யுனெஸ்கோவுக்கு ஊட்டி மலை ரயில் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சிட்னியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரது தலைமையிலான யுனெஸ்கோ குழு ஊட்டிக்கு வந்து மலை ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்று யுனெஸ்கோவுக்கு லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக 2005 ஆம் ஆண்டு அறிவித்தது.

114 ஆண்டுகள் பழைமையான நீலகிரி மலை ரயில் முதன்முறையாக 1899-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட்டது. பின்பு, 9 ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது. அதன்பின் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஊட்டி ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. மேட்டுப்பளையம் - குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி எஞ்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டன. இப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி எஞ்ஜின்கள் மூலமே ரயில் இயக்கப்படுகிறது. பின்பு குன்னூர் - ஊட்டி இடையே டீசல் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரங்கள் உதவியுடன் ரயில் இயக்கப்படுகிறது. இப்போதுள்ள நீலகிரி மலை ரயில் 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும், 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ.,) தூரம் கடக்க 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடக்க வேண்டியுள்ளது. நீலகிரி மலை ரயிலை, கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் உலகச் சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றது.

மலை சுற்றுலா ரயிலுக்குப் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரத்யேகப் பெட்டியை சுமார் ரூ.3 கோடி செலவில் தயாரித்து 2018 ஆம் ஆண்டு ஐசிஎஃப் வழங்கியது. இப்போது நீலகிரி மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவதால்,உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பெட்டியாக ஜொலிக்கிறது. ரயில் பெட்டியின் உள்பகுதி மரத்தால் செய்யப்பட்ட பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். சுழலும் சொகுசு இருக்கைகள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிப்பதற்காக எல்இடி திரைகள், வை-ஃபை வசதி, தேனீர், காபி வழங்கும் தானியங்கி இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இந்த ரயில் பெட்டிகளில் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

நீலகிரி மலை ரயிலுக்கு ஃபர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் வகையில், 4 புதிய எஞ்ஜின்கள் திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டன. அவையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக மூன்று பெட்டிகளுடன்தான் நீலகிரி மலை ரயில் இயக்கப்படுவது வழக்கம். இப்போது, 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் மலை ரயில் குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு,கேத்தி, லவ்டேல், பின்பு ஊட்டிக்கு பகல் 12 மணிக்கு சென்றடையும். முதல் வகுப்பில் 16 இருக்கைகளும், இரண்டாவது வகுப்பில் 214 இருக்கைகளும் இருக்கும். இதில் முன்பதிவில்லா பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.600, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.295 கட்டணமாக பெறப்படுகிறது.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com