புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
பூமி நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், பூமியை பற்றிய பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு விடை அளிக்கும் பகுதியாக தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் விளங்கி வருவது வியப்பின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமி அரியலூர். கடல்வாழ் உயிரினங்கள், கடலின் பல்வேறு பரிமாணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு சிறந்த பகுதியாக விளங்கி வருகிறது. இமயமலை பகுதியும், அரியலூரும் சம காலத்தில் கடலாக இருந்து பின்னர் தரைப் பகுதியாக மாறியதே ஆராய்ச்சியாளர்களின் விருப்பமான பகுதியாக இது இடம் பெற்றதற்குக் காரணம். கடல் பின்னோக்கிச் சென்றதால், அரியலூர் தரைப் பகுதியாக மாறி இருக்கிறது. படிமங்களாக மாறிப் போன கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இன்றும் தோண்டத், தோண்ட கிடைத்து வருகின்றன.
சுண்ணாம்புக்கல், ஜிப்சம் உள்ளிட்ட கனிமங்கள் இங்கு கொட்டி கிடப்பதே ஒரு காலத்தில் அரியலூர் கடலாக இருந்ததற்கான ஆதாரங்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிர பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அரியலூரில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. 1974 ஆம் ஆண்டு கல்லங்குறிச்சி என்ற கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கிடைத்த கல்லை ஆய்வு செய்தபோதுதான் படிமங்களான மாறிப்போன டைனோசரின் முட்டை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன் பிறகே புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரியாக அரியலூர் மாறியது.
வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த அரியலூரில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் அவை ஆமை வேகத்தில் நடந்து வருவதால் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், கடல் உள்வாங்கியது போல அமைந்துள்ள 52 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியையும் சுற்றுலா தளமாக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.