தூர்வாராத கால்வாய்கள்! வெள்ளத்தால் வீடு வந்து சேராத வெள்ளாமை! கண்ணீரில் விவசாயிகள்!

தூர்வாராத கால்வாய்கள்! வெள்ளத்தால் வீடு வந்து சேராத வெள்ளாமை! கண்ணீரில் விவசாயிகள்!
தூர்வாராத கால்வாய்கள்! வெள்ளத்தால் வீடு வந்து சேராத வெள்ளாமை! கண்ணீரில் விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக விட்டு விட்டு பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு பல இடங்களில் முளை விட தொடங்கி விட்டன.

சிறப்பாக துவங்கிய குறுவைச் சாகுபடி:

சுதந்திர வரலாற்றில் முதன்முறையாக மேட்டூர் அணை இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி குறுவை உர தொகுப்பினை அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது. மேலும் தேவையான விதை நெல்லும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டன.

எதிர்பாராத சேதத்தை விளைவித்த கனமழை:

இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நெல்மணிகள் முளை விட தொடங்கிவிட்டன. பல இடங்களில் பால் கட்டும் பருவத்தில் இருக்கும் குறுவை சாகுபடி அடியோடு படுத்துவிட்டன. இன்னும் சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்து மழை நீர் சூழ்ந்து வயல்வெளியில் குறுவை சாகுபடி சாய்ந்துள்ளன.

சேதம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்:

வேளாண்மை துறை இணை இயக்குனர் ரவீந்திரன் திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

குறுவை சாகுபடிக்கு காப்பீடு இல்லாததால் கலங்கி நிற்கும் விவசாயிகள்:

குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் இல்லாததால் விவசாயிகள் எவ்வாறு இழப்பீடு பெறுவது என விழி பிதுங்கி நிற்கிறார்கள். மேலும் கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஒரு பிடி நெல் கூட அறுவடை செய்ய இயலா “கையறு நிலை”:

வரக்கூடிய நாட்களில் கனமழை பெய்யும் பட்சத்தில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள குறுவை சாகுபடியில் அதிலும் குறிப்பாக பால் கட்டும் பருவத்தில் சாய்ந்துள்ள கதிர்கள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்து சாய்ந்துள்ள கதிர்கள் போன்றவற்றில் இருந்து ஒரு பிடி நெல்லை கூட அறுவடை செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“கால்வாய்களை தூர்வாராததே இத்தனை துயருக்கும் காரணம்”:

பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு அருகில் உள்ள வடி வாய்க்கால்கள் மற்றும் வரத்து பாசன வாய்க்கால்கள் முதலானவை சரிவர தூர்வாரப்படாதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தார்கள். ஆகவே அரசு போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை முறையாக தூர்வாரி, பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிககு உரிய இழப்பீடு தந்து சம்பா சாகுபடி தொடங்க உதவ வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள் விவசாயிகள்.

அரசுத் தரப்பில் இருந்து ஓர் ஆறுதல் அறிவிப்பு:

அரசு தரப்பில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டால் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சற்று விவசாயிகளை ஆறுதல் படுத்தியுள்ளது. வரக்கூடிய மாதங்களில் மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் வானத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

எப்போது முடியும் பாதிப்பு கணக்கெடுப்பு? எப்போது கிடைக்கும் நிவாரணம்?

இது குறித்து திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன் அவர்களிடம் கேட்ட பொழுது, “திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி பற்றிய கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மழை நீடித்தால் தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கும். ஆகையால் ஒட்டுமொத்தமாக குறுவை சாகுபடி அறுவடை முடிந்த பின்னர் ஒட்டுமொத்த கணக்கும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்

- மாதவன் குருநாதன், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com