யானைகள் உணர்ச்சியற்ற பொருள்கள் அல்ல!

யானைகள் உணர்ச்சியற்ற பொருள்கள் அல்ல!

யானைகள் உணர்ச்சியற்ற பொருள்கள் அல்ல!
Published on

மனிதனுக்கு நெருக்கமான காட்டு விலங்கு ஒன்று இருக்கமென்றால் அது யானைதான். ஆதிகாலத்தில் இருந்தே சமவெளிகளில் யானையுடன் மனிதனே இணைந்தே வாழ்ந்து வந்துள்ளான் என்பதற்கு இலக்கியங்கள் உதாரணமாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. அதுவும் தென்னகத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் யானைகள் இல்லாத கோயிலே இல்லை எனக் கூறலாம். அதுவும் கேரளாவில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் கலந்தது யானைகள்.

அப்படிப்பட்ட யானைகளை கொண்டாடும் நிலத்தில்தான் சோகங்களும் நடந்துள்ளன. கடந்தாண்டு கேரளாவில் கர்ப்பிணி யானையொன்று வெடிப்பொருள்கள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு வெடித்து வாயில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பட்டினியிலும் வலியிலும் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. மசினக்குடியில் காட்டு யானை மீது இரக்கமற்ற மனிதர்கள், எரியும் டயரை வீசி குரோதத்தை வெளிப்படுத்தியுள்ளது மனிதத்தை கேள்வி எழுப்பியுள்ளது.

காலம்காலமாக வாழ்வோடு அங்கமாகிப்போன யானைகள் மனிதர்களிடமிருந்து விலகியதா? அதற்கு யானைகள் காரணமா அல்லது மனிதன் காரணமா எனக் கேட்டால், அதற்கான விடை நிச்சயம் மனிதன்தான் என்பது பெரும்பாலான பதிலாக இருக்கும். வணிகமயமான வாழ்க்கை, பணத்தாசை, சுற்றுச்சூழல் மீதும் சக உயிர்கள் மீதும் அன்பை விதைக்க தெரியாத ஒரு வாழ்வுதான், இப்போது யானை மீது தொடுக்கப்படும் வன்மங்களுக்கு காரணம்.

இப்போது யானைகளின் நிலை என்ன ?

உலகளவில் முன்பொரு காலத்தில் உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யானைகளின் மனநிலை!

யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர். அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை என்றே தெரிகிறது. சூழல் சுற்றுலாவுக்கு வரும் பலர் மது அருந்திவிட்டு பீர் பாட்டில்களை சாலையின் ஓரமாக போட்டுவிடுவார்கள். வலசைப் பாதை செல்லும் யானைகளின் கால்களை அவை பதம்பார்த்துவிடும். இது தனக்கு மனிதனால் நிகழ்த்தப்படும் தீங்கு என்பதை யானை நன்றாகவே இப்போதெல்லாம் அறிந்திருக்கின்றன.

யானைகளின் வலசை!

முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.

அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்த நிமிடத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.

தீர்வுதான் என்ன?

யானைகளின் வீடான காடுகள் துண்டாக்கப்படும்போது, அவற்றின் உறவுகளிடமிருந்து நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன. யானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, மசினக்குடியில் நிகழ்ந்த கொடூரம் தொடரும் என்பதுதான் சோகம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com