புலி எப்போது மனிதனை வேட்டையாடும்? "மேன் ஈட்டர்" புலிகள் குறித்த சில புரிதல்கள் !

புலி எப்போது மனிதனை வேட்டையாடும்? "மேன் ஈட்டர்" புலிகள் குறித்த சில புரிதல்கள் !
புலி எப்போது மனிதனை வேட்டையாடும்? "மேன் ஈட்டர்" புலிகள் குறித்த சில புரிதல்கள் !

புலிகள் என்றாலே எப்போதும் எல்லோருக்கும் ஆச்சரியம்தான். அதன் தோற்றத்தை நேரில் பார்த்தால் உடம்பில் பயம் பக்கென்று பற்றிக்கொள்ளும். ஆனால் காடுகளில் புலிகள் மனிதனின் கண்களுக்கு அவ்வளவு எளிதாக அகப்பட்டுவிடாது. ஏனென்றால் நாம் எல்லோரும் பார்த்து பயப்படும் புலிகள் பொதுவாகவே கூச்சசுபாவம் கொண்ட உயிரினம் என்பதுதான் உண்மை. மனிதனின் வாசம் அதற்கு தெரிந்தவுடன் நாம் இருக்கும் பக்கமே வராது. அதனால்தான் புலிகள் காப்பக சுற்றலாக்களில் கூட புலிகளை காண்பது என்பது அறிதிலும் அறிதான நிகழ்வாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட புலிகளில் சில மனிதர்களை விரும்பும். அவ்வாறான புலிகளைதான் நாம் "மேன் ஈட்டர்" என அழைப்போம். சுதந்திரத்துக்கு முந்தையக் காலக்கட்டத்தில் இருந்தே இந்தியாவில் "மேன் ஈட்டர்" தொடர்பான கதைகள் ஏராளம். வேட்டையாடியும் காட்டுயிர் ஆர்வலருமான ஜிம் கார்பேட் மேன் ஈட்டர் புலிகள் குறித்த நிஜக் கதைகளை எழுதியுள்ளார். புலி மட்டுமல்ல சிறுத்தைகள் கூட மேன் ஈட்டராக அறியப்படுவதுண்டு. ஜிம் கார்பட்டின் "குமாயுன் புலிகள்", சிறுத்தைகளை வைத்து எழுதிய "ருத்ரபிரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தைகள்" ஆகிய புத்தகங்கள் சூழலியலாளர்களுக்கு இப்போதும் ஓர் கையேடு என்றே கூறலாம்.

தமிழகத்தில் கூட "மேன் ஈட்டர்" புலிகள் அண்மையில் கூட இருந்தன. இங்கு 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை. அண்மையில் மகாராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்பட்ட ஆவ்னி என்ற பெண் புலி 13 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் புலியை அம்மாநில வனத்துறை சுட்டுக்கொன்றது. உலக புலிகள் தினமான இன்று "மேன் ஈட்டர்கள்" குறித்து சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?

பொதுவாக ஒரு புலி எப்போதும் மனித மாமிசத்தை விரும்பாது. மனிதனின் வாடையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிடும். உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்புதான் உண்ணும். அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது. எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்துவிட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறிவிடும். ஒரு பெண் புலி மேன் ஈட்டராக மாறிவிட்டால் அதன் குட்டிகளும் எதிர்காலத்தில் அதாவது வயதான பின்பு மேன்ஈட்டராக மாறிவிடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த மேன் ஈட்டர் புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. பின்பு அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

இது குறித்து முன்னாள் வன உயிர் காப்பாளரும், சூழலியல் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன் கூறும்போது " காட்டில் சுற்றித் திரியும் புலிகளை கூண்டில் அடைப்பது மரணத்தை விட கொடுமையானது. மேலும், உயிரியல் பூங்காவில் மேன் ஈட்டர் புலிகளைப் பராமரிப்பது சிரமம். இட நெருக்கடி ஏற்படும். உலகின் எல்லா இடங்களிலும், மேன்ஈட்டர் புலிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேன் ஈட்டர் புலிகளை சுட்டுத்தான் கொல்ல வேண்டும்; இது அறிவியல் சார்ந்த விஷயம். இதில் கருணைக்கு இடம் கிடையாது.

ஒரு புலி வயதான பிறகோ, காயமடைந்த பின்னரோ தனது இறையை வேகமாக ஓடி வேட்டையாட முடியாமல் போகும். இதனால் மனிதனையும், கால்நடைகளையும் தாக்கி உணவாக்கி மேன் ஈட்டராக உருவாகிறது. இதை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து உயிரியல் காப்பகத்தில் வைத்து பராமரிப்பதால் எந்த உபயோகமும் இல்லை. அப்படி பராமரித்தால் அரசாங்கத்துக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். மேலும், அரசின் நோக்கம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதே. அவற்றைக் கூண்டில் அடைத்து என்ன செய்யப் போகிறோம்? மேன்ஈட்டர் புலி காட்டில் இருந்தால், சக புலிகளுக்கும் ஆபத்துகளை உருவாக்கக் கூடும். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், காடுகள் சுருங்கி வருவதுமே பிரச்னைக்கு காரணம். தென்னிந்தியாவில் மேன் ஈட்டர் புலிகள் அரிதே" என்றார் அவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com